ஒரு சின்னக் கிராமத்தில் குயிலி என்ற குட்டி தேவதை வசித்து வந்தாள். எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும். சிரித்த முகத்துடன் வளைய வருவாள். எந்த வேலை சொன்னாலும் புன்னகை மாறாத முகத்துடன் செய்வாள். அவளைக் கண்டால் ஊரில் இருக்கும் எல்லோருமே தங்களுடைய கவலைகளை மறந்து சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள். அதனாலேயே அவளை சிரிப்பு தேவதை சின்னக் குயிலி என்று எல்லோரும் அழைத்தார்கள். அவளைப் பார்க்கும் எல்லோருக்கும் அவளுடைய புன்னகை தொற்றிக் கொள்ளும்.

குயிலியின் கிராமத்தை ஒட்டி ஒரு காடு இருந்தது. காட்டின் நடுவில் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தின் அருகே போகவே சாதாரணமாகக் குழந்தைகள் பயப்படுவார்கள். பகல் நேரத்தில் குழந்தைகள் காட்டிற்குள் போய் விளையாடி விட்டு வருவார்கள். உயிர்க் கொல்லி வனவிலங்குகள் அந்தப் பகுதியில் இல்லாததால் குழந்தைகளும் பயமில்லாமல் காட்டில் போய் விளையாடுவார்கள்.

ஒரு நாள் மதிய நேரத்தில் விளையாடிக் களைத்துப் போன குயிலி அந்த மரத்தடியில் தூங்கி விட்டாள். கண் விழித்துப் பார்த்தாள் குயிலி. நன்றாக இருட்டிப் போயிருந்தது. ஏதோ சத்தம் அருகில் கேட்டதால் பயந்து போன குயிலி மரத்தில் ஏறி அடர்ந்த கிளை ஒன்றில் ஒளிந்து உட்கார்ந்து கொண்டாள். காலை விடிந்ததற்குப் பிறகு தான் வீட்டுக்குப் போக வேண்டும். இருட்டில் வழி தெரியாது. குயிலிக்குக் கொஞ்ச நேரத்தில் பசிக்க ஆரம்பித்தது.

மரம் நல்ல உயரமாக இருந்தது. பொழுது போகாமல் மேலே மேலே ஏறினாள். மரத்தின் உச்சியில் ஒரு சிறிய ஊர் இருந்தது. அந்த ஊரில் இருந்த மனிதர்கள் வித்தியாசமான தோற்றத்துடன் இருந்தார்கள். தேவதைகள் போல அவர்கள் எல்லாருக்கும் இறக்கைகள் இருந்தன. சிலர் பறந்து கொண்டும் சிலர் நடந்து கொண்டும் இருந்தார்கள். எல்லாருடைய முகங்களும் சோகமாகவே இருந்தன. சிரிப்பு என்றால் என்னவென்று தெரியாதவர்களாக இருந்தார்கள். குயிலியும் அவள் கண்ணில் தென்பட்டவர்களைப் பார்த்து சிரித்துப் பார்த்தாள். யாருமே பதிலுக்கு சிரிக்கவில்லை.

angels
படம்: அப்புசிவா

அங்கே இருந்த ஒரு வீட்டுக் கதவைத் தட்டி, “எனக்குப் பசிக்கிறது. சாப்பிட ஏதாவது வேண்டும். கிடைக்குமா?”, என்று கேட்டாள். ஒரு தட்டில் உணவு கிடைத்தது. உணவில் காரம், புளிப்பு, உப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகளில் பல்வேறு பண்டங்கள் இருந்தன. ஆனால் இனிப்புப் பண்டம் மட்டும் இல்லை.

“ஏதாவது இனிப்பு இருக்கா? எனக்கு இனிப்பு சாப்பிடணும் போல இருக்கு”, என்று குயிலி கேட்க, அந்த ஊரில் இருந்தவர்களுக்கு இனிப்பு என்றால் என்னவென்று தெரியவில்லை. கொஞ்ச நேரம் அங்கே இருந்து விட்டு, குயிலி மரத்தின் வழியாக இறங்கி விட்டாள். காலையில் வீட்டுக்குத் திரும்பினாள். இரவு முழுவதும் குயிலியைக் காணாமல் தவித்த குயிலியின் பெற்றோர், குயிலியைப் பார்த்து சந்தோஷமடைந்தார்கள்.

இனிப்பு சுவையைப் பற்றியும், சிரிப்பு என்றால் என்னவென்றும் தெரியாத அந்த ஊர் மக்களை குயிலியால் மறக்கவே முடியவில்லை. ஒரு வாரம் கழித்து ஒரு நாள் இரவில் கையில் ஒரு மூட்டையுடன் அந்த மரத்தில் ஏறிய குயிலி, அந்த ஊரை அடைந்து தனது மூட்டையைப் பிரித்தாள். தான் கொண்டு வந்திருந்த அச்சு வெல்லக் கட்டிகளை அங்கிருந்த குழந்தைகளுக்குக் கொடுத்தாள். இனிப்பைச் சுவைத்த குழந்தைகளின் முகங்கள் மலர்ந்தன. தான் கொண்டு வந்த கரும்புச் செடியை அங்கே நட்டு வைத்து அதை எப்படி வளர்க்க வேண்டும் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டு வந்தாள். கொஞ்ச நாட்களில் அவர்களும் கரும்பில் இருந்து சாறெடுத்து வெல்லம் செய்யக் கற்றுக் கொண்டார்கள்.

அதுவரை எந்த மரத்திலும் காய்களைப் பழுக்க விடாமல் காய்களாகவே பறித்து அவர்கள் உண்டு வந்ததால் அவர்களுக்குக் கனிகளைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. இப்போது காய்களைப் பழுக்க வைத்துக் கனிகளாக்கி உண்ணவும் கற்றுக் கொண்டார்கள்.

ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விஷயத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த குயிலி, அவர்களுடன் நன்றாகப் பழகி விட்டாள். அதன் பின்னர் அவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிரிக்கவும் கற்றுக் கொடுத்தாள். இப்போது அந்த ஊர் மக்கள் வாய் விட்டுச் சிரிக்கவும், புன்னகை புரியவும் குயிலியிடம் இருந்து கற்றுக் கொண்டு விட்டார்கள்.

சிரிப்பு தேவதை குயிலி, சென்ற இடமெல்லாம் சிரிப்பையும், இனிமையையும் பரப்பி விட்டாள். இனிமை என்பது உணவில் மட்டும் இல்லாமல் வாழ்க்கையிலும் சேர்த்துக் கொள்வது நல்லது தானே!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments