aamaiyum vaathum

ஒரு குளத்தில், ஓர் ஆமையும், இரண்டு வாத்துகளும் நண்பர்களாகப் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தன..  ஒரு சமயம், மழையே பெய்யாமல், குளம் வறண்டு, முற்றிலுமாகக் காய்ந்து விட்டது.

“நாம சீக்கிரமா வேறு இடம் தேடிப் போகணும்; தண்ணி இல்லாம  நம்மால வாழமுடியாது.  ஆமைக்கு டாட்டா சொல்லிட்டு, ஒடனே இங்கேர்ந்து கெளம்பணும்,” என்று ஒரு வாத்து, இன்னொரு வாத்திடம் சொன்னது.

வாத்து சொன்னதைக் கேட்ட ஆமை, “என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க; என்னையும் ஒங்களோட அழைச்சிட்டுப் போங்க,” என்று சொன்னது..  

“இனிமேலேயும் இங்க இருந்தா, நாம மூனு பேருமே, செத்துப் போயிடுவோம்.  ஒனக்குப் பறக்கத் தெரியாது.  எங்களோடு ஒன்னை எப்பிடிக் கூட்டிட்டுப் போறது?. எங்களால, ஒனக்கு ஒதவி செய்ய முடியாதே!” என்று வாத்து வருந்தியது

“என்னைத் தனியே தவிக்க விட்டுட்டுப் போயிடாதீங்க!” என்று ஆமை தொடர்ந்து கெஞ்சியது.

“சரி நண்பனே!  நாம பயணம் போற சமயத்துல, நீ வாயே தொறக்க மாட்டேன்னு, எனக்குச் சத்தியம் பண்ணித் தரணும்; வாயைத் தொறந்து, நீ ஒரு வார்த்தை பேசினாக் கூட, ஒன் உயிர் போயிடும்,” என வாத்து கூறியது

“பயப்படாதே; நீ சொல்ற வரைக்கும், நான் வாயே தொறக்க மாட்டேன்.   தண்ணியில்லாம, இந்தக் குளத்துல தனியாக் கெடந்து சாகறதை விட , வாயைத் தொறக்காம, இருக்கிறது மேல்,” என்றது, ஆமை.

வாத்து ஒரு மொத்தமான குச்சியை எடுத்து வந்தது. அதன் நடுவில் ஆமையை வாயால் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னது.  அந்தக் குச்சியை, இரண்டு வாத்துகளும், ஆளுக்கொரு பக்கம், வாயால் கவ்விக் கொண்டு, வானத்தில் பறந்து சென்றன.

பல மைல் தூரம், அவை பறந்து சென்ற போது, இடையில் ஒரு கிராமம் வந்தது. அங்கிருந்த மக்கள், வானத்தில் தாங்கள் கண்ட காட்சியைப் பார்த்துச் சிரித்தனர்.

“தோ பாருடா! காலக்கொடுமை! ரெண்டு வாத்து, ஆமையைத் தூக்கிக்கிட்டுப் போவுது! வாழ்நாளுல, இந்த மாதிரி, ஒரு காட்சியைப் பார்த்து இருக்கியா?” என்று சத்தமாகச் சொல்லிக் கிண்டலாகச் சிரித்தனர்.

அதைக் கேட்ட ஆமைக்குக் கோபம் கோபமாக வந்தது.  அவர்களுடைய கேலியையும், கிண்டலையும், அதனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“முட்டாளே!” என்று திட்ட நினைத்தது.  அப்போது தான், ‘வாயைத் திறந்தால், உன் உயிர் போய்விடும்!’ என்று வாத்து, எச்சரித்தது நினைவுக்கு வந்தது.

‘சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்; அதனால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை;  வீணாகக் கோபப்பட்டு, உயிரை இழப்பது முட்டாள்தனம்’,  என்று நினைத்து, வந்த கோபத்தை ஆமை அடக்கிக் கொண்டது.

கொஞ்ச தூரம் சென்றவுடன், தண்ணீர் நிறைந்த குளம் ஒன்று வந்தது. அங்கு மூன்றும் தரையிறங்கி, பல ஆண்டுகள் மகிழ்ச்சியாகச் சேர்ந்து  வாழ்ந்தன.

ஒரிஜினல் பஞ்சதந்திரக் கதையின் முடிவு:-

கிராம மக்கள் ஆமையைப் பார்த்துச் சிரித்துக் கிண்டல் செய்தவுடன் ஆமைக்குக் கோபம் வந்தது.

“முட்டாள்களே!” என்று அவர்களைத் திட்ட நினைத்து, வாயைத் திறந்தது.  அவ்வளவு தான்!  அடுத்த வார்த்தை சொல்வதற்குள், குச்சியின் பிடியிலிருந்து நழுவி, வானத்திலிருந்து வேகமாக விழுந்து, தரையில் மோதி இறந்தது. 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments