அன்று பூங்காவிற்கு வந்த கதிர், கயல், முத்து, மலர், வினோத் ஆகிய ஐவரும், சிறிது நேரம் விளையாடிவிட்டுப் பூஞ்சிட்டு எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தனர்.
“சிட்டு ஏன் இன்னும் வரல? கதையைப் போன மாசம், பாதியில நிறுத்திட்டுப் போயிடுச்சி; கேட்க ரொம்ப ஆசையா இருக்கு; இன்னும் வரலியே?” என்றான் வினோத் நாலாப் பக்கமும் வானத்தைப் பார்த்தபடி..
“என்ன பசங்களா? எப்படியிருக்கீங்க?” என்று கேட்டபடியே மரக்கிளையில் வந்து அமர்ந்தது சிட்டு.
“தோ பூஞ்சிட்டு வந்தாச்சு! பூஞ்சிட்டு வந்தாச்சு!” என்று குதித்தாள் மலர். கதை கேட்கும் ஆவலில் சிட்டு சொல்வதற்கு முன்பே எல்லாக் குழந்தைகளும் வட்டமாக அமர்ந்தனர்.
“டைனோசர் என்ன தின்னும்னு போன தடவை வினோத் கேட்டான். அதுலேர்ந்து ஆரம்பிக்கிறேன். அதுல ரெண்டு வகை இருந்திருக்கு. ஒன்னு தாவர உண்ணி- அதாவது செடி கொடிகளைத் தின்னுறது. HERBIVORES னு ஆங்கிலத்துல சொல்வாங்க. இன்னொன்னு மாமிச உண்ணி. விலங்குகளையும், மீனையும் கொன்னு தின்னும். அதுக்கு ஆங்கிலத்துல என்னமோ சொல்வாங்களே!”
“எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும்! நான் சொல்றேன்! அதுக்கு CARNIVORES னு சொல்வாங்க” என்று வகுப்பில் சொல்வது போல், கையைத் தூக்கியபடி உற்சாகமாகச் சொன்னான், கதிர்.
“வெரி குட்! சரியான விடை கதிர்”
“ஒரே விலங்குல ரெண்டு விதம் இருந்துச்சா? ஆச்சரியம் தான்” என்றான் பாபு.
“ஏன் நம்ம மனுசங்கள்ல, வெஜிடேரியன், நான்வெஜிடேரியன்னு இல்லியா? அது மாதிரி போலருக்கு,”
“ஆமாம் கயல். அதே மாதிரி தான். ‘டிப்ளாடிக்கஸ்’ னு (டிப்-ளா-டிக்கஸ்) (DIPLODOCUS) ஒரு வகை, அதுக்குக் கழுத்து ரொம்ப நீளம். அதனால கழுத்தை நீட்டி மரத்தோட உச்சியிலேர்ந்து அதுக்குப் புடிச்ச இலையாப் பறிச்சித் தின்னும்”
“ஒட்டகச் சிவிங்கி மாதிரி, கழுத்து நீளமா இருக்குமோ?”
“ஆமாம் முத்து. அதோட கழுத்தை விட, இன்னும் நீளமா இருக்கும்”
“முதுகு முழுக்க, முக்கோணமாத் தட்டை நீட்டிக்கிட்டுப் பயங்கரமா ஒரு டைனோசர் இருக்கே! அது தானே, முதுகாலக் குத்திக் கிழிச்சி, மிருகத்தைக் கொன்னு தின்னும்?” மலர் கேட்டாள்
“அதானே பார்த்தேன். இவ்ளோ நேரம், இவ அமைதியா இருந்ததே, ஆச்சரியம் தான். எப்பிடிக் குத்திக் கிழிச்சித் தின்னும்? எப்பிடி இரத்தம் குடிக்கும்னு, இன்னும் கேட்க ஆரம்பிக்கலியேன்னு, நெனைச்சேன், கேட்டுட்டா!” என்று சிரித்தான், முத்து.
“அது பார்க்கத் தான் பயங்கரமாயிருக்கும் மலர். ஆனா மாமிசமே தின்னாது. அது பேரு ‘ஸ்டெகோசரஸ்’.(ஸ்டெ-கோ-சரஸ்) (STEGOSAURUS) அதுக்குச் சின்ன கழுத்து, சின்ன தலை. அதனால, கீழ இருக்கிற, புல், பூண்டு, புதர்ச்செடிகளைத் தின்னும்”.
“அடச்சே! அதோட படத்தைப் பார்க்க, அவ்ளோ பயங்கரமாயிருந்துச்சி. அப்புறம் எதுக்கு, முதுகில முக்கோணமா டைல்ஸைச் சொருகி வச்சிட்டுப் பயமுறுத்துது?” என்றான் வினோத்.
“அதுவா? மத்த விலங்குகிட்டேயிருந்து, தன்னைக் காப்பாத்திக்கிறதுக்குத் தான். எந்த மிருகமும், முதுகில பாய்ஞ்சு, அதைக் கொல்ல முடியாதே! அது மட்டும் இல்ல. பெண் டைனோசரைக் கவர்ந்திழுக்க அந்த மாதிரி இருந்திருக்கலாம் அல்லது ஒடம்புச் சூட்டைச் சமநிலையில வைக்க அதைப் பயன்படுத்தியிருக்கலாம், இப்படியெல்லாம் அறிவியல் ஆராய்ச்சியாளர் சொல்றாங்க. இன்னிக்குச் சூரிய சக்தியைச் சேமிக்கப் பயன்படுத்தற தகடுக்கு, அது முன்மாதிரியா இருந்திருக்கும்னு, எனக்குத் தோணுது!
“அப்பிடியா? நம்பவே முடியலியே! அது எப்பிடி சிட்டு?” – இது பாபு.
“எப்பிடீன்னா.. குளிர் காலத்துல ரொம்ப குளிரா இருக்கும் போது அந்தத் தகடுகளை வெயில்ல நல்லா நீட்டி, சூரிய வெப்பத்தைச் சேகரிச்சி ஒடம்புச் சூட்டை அதிகமாக்கிக்குமாம். அதுவே வெயில் காலம்னா, ரொம்ப வெயில் படாம தட்டைக் கொஞ்சம் உள்ளாற இழுத்துக்குமாம். சூடான காலத்துல குளிர்ந்த காத்து அடிச்சா, அதை வெளியில நல்லா நீட்டிக் காத்தை உள்வாங்கி சூட்டைக் கொறைச்சிக்குமாம்”.
“ஐய்! சூப்பர் ஐடியா! கேட்கவே ஆச்சரியமாயிருக்கு. சரி. செடி, கொடி தின்ன டைனோசர் பத்திச் சொல்லிட்டே. மாமிசம் தின்னுற வகையைப் பத்தி, சொல்லு சிட்டு!” என்றான் வினோத்.
“ம். சொல்றேன், சொல்றேன். ஒன்னு ஒன்னாத் தானே சொல்லணும்? ‘பேரியானிக்ஸ்’ னு (பேரி-யா-னிக்ஸ்) (BARYONYX) ஒன்னு. அது மீனைப் புடிச்சித் தின்னும்.. ஒரு கோழி அளவுக்குக் குட்டியா இருந்த டைனோசர், பல்லியைப் புடிச்சித் தின்னும்; .அது பேரு, கம்சோக்னத்தஸ் (கம்-சோக்-னத்தஸ்) (COMPSOGNATHUS).
“ஓ! குட்டியாக் கூட, டைனோசர் இருக்குமா? எல்லாமே பெரிசு பெரிசா இருக்கும்னு தான், இவ்ளோ நாள் நெனைச்சிக்கிட்டிருந்தேன்; இப்பத் தான் தெரியுது!” என்றாள் கயல்.
“அப்படித் தான் எல்லாரும் நெனைச்சிக்கிறாங்க. அது தப்பு. அதுல சின்னதும் இருந்திருக்கு”.
“பேரு வாயில நுழைய மாட்டேங்குது! பல்லியைப் புடிச்சித் தின்னும்னு சொன்னீயே, அது தான் எல்லாத்தையும் விடக் குட்டி டைனோசரா சிட்டு?”- இது முத்து
“இல்லை; இப்ப ஒலகத்துல இருக்கிறதிலேயே, ரொம்பச் சின்னப் பறவை எதுன்னு யாருக்காவது தெரியுமா?”.
“ம்! எனக்குத் தெரியும், நான் சொல்றேன்! ஹம்மிங் பறவை (HUMMING BIRD)!”
“ம்! சரியாச் சொல்லிட்டே கதிர்! அது ரெண்டு இஞ்ச்அளவுக்குத் தான் இருக்கும். அந்தப் பறவை மாதிரியே, குட்டியா ஒரு டைனோசரோட புதைபடிவத்தை மியான்மர் நாட்டுல சமீபத்துல ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க. அது தான், இதுவரைக்கும் கண்டுபிடிச்சதிலேயே ரொம்பச் சின்ன டைனோசர்”.
“பறவை மாதிரி டைனோசர் இருக்குன்னா, அப்ப டைனோசர்லேந்து, தான் பறவை இனம் தோன்றுச்சா?”
“நீ வேற கயல்! டைனோசர் விலங்கு; அதிலேர்ந்து பறவை எப்படி வரும்?; சான்ஸே இல்ல.. சரி தானே சிட்டு?,” என்றான் வினோத்..
“கயல் யூகிச்சது ரொம்பச் சரி, வினோத்! குரங்குலேர்ந்து மனுசன் தோன்றினான்னு, சொல்ற மாதிரி, இப்ப இருக்குற பறவை இனம், பல கோடி ஆண்டுக்கு முன்னாடி வாழ்ந்த, ‘தெரோபோடு’ (THEROPODS) டைனோசர்லேர்ந்து, தோன்றியிருக்கலாம்னு தான், ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க”.
“சரி நேரமாயிட்டுது; கெளம்புறேன். எல்லாரும் பத்திரமாயிருங்க; அடுத்த மாசம் பார்ப்போம்”.
“சிட்டு! மத்த மிருகத்தைக் கொன்னு தின்ன டைனோசர் பத்தி எதுவுமே சொல்லலை..தயவு செஞ்சு, அதை மட்டும் சொல்லிட்டுப் போயேன்” என்றாள் மலர் கெஞ்சுகிற குரலில்.
“இப்பவே ரொம்ப லேட்டாயிடுச்சி மலர்! அதப் பத்தி, அடுத்த முறை கண்டிப்பாச் சொல்றேன்! டாட்டா, பை பை! சீ யூ!”
சிட்டுவுக்கு டாட்டா காட்டி விட்டுக் குழந்தைகளும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பினர். அடுத்த மாதம் எப்போது வரும்? சிட்டு வந்து கதையைத் தொடரும் என ஆவலாகக் காத்திருக்கின்றனர்.
என்ன குழந்தைகளே! நீங்களும் தானே?
டைனோசர் பற்றி ஏதாவது கேட்க வேண்டுமென்றால் எங்களுக்கு எழுதுங்கள். சிட்டு அடுத்த முறை, உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்.
உங்கள் கருத்துகளையும், கேள்விகளையும், எங்களுக்கு எழுத வேண்டிய முகவரி:-
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.