அடுத்து வந்த சில நாட்களில் துருவனின் பயிற்சி முழுமை பெற்றது. முழுமை என்றால் நன்றாக அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தான் என்று அர்த்தமில்லை.

கௌதம முனிவருக்கு இந்தக் குறுகிய காலத்தில் அனைத்துப் பயிற்சிகளையும்

கற்றுத் தருவது கடினம் என்பது நன்றாகத் தெரியும். எவ்வளவு நல்ல மாணவனாக இருந்தாலும் எல்லாக் கலைகளையும் முழுமையாகக் கற்றுத் தேர்ச்சி பெறப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். அதனால் மிகவும் அவசியமான பயிற்சியை மட்டுமே ஆசான் துருவனுக்கு அளித்தார்.

துருவனுக்குத் தேவையான சில தற்காப்புக் கலைகளையும், சில ஆயுதங்களைக் கையாளும் சரியான முறையையும் , சில மாய மந்திர தந்திர வித்தைகளையும் தன்னால் முடிந்த அளவு அவனுக்குக் கற்றுத் தந்தார்.

துருவனும் அறிவாளியாகவே இருந்தான். கற்றுக் கொள்வதில் நல்ல ஆர்வமும் காட்டினான். அவனுடைய பணிவும் உழைப்பும் அவனுக்குக் கைகொடுத்தன. பயிற்சி முடிந்ததாக ஆசான் எண்ணினார்.

துருவன் அங்கிருந்து கிளம்பும் நாளும் வந்தது. குருவையும் குரு மாதாவையும் வணங்கி அவர்களுடைய ஆசிகளை துருவன் பெற்றான்.

” துருவா, என்னால் முடிந்த வரை உனக்குத் தேவையான கலைகளைக் கற்றுத் தந்திருக்கிறேன். நீ எடுத்துக் கொண்டிருக்கும் பணி மிகவும் கடினமானது. நடக்கப் போகும் பாதையில் ஆபத்து நிறைய வரலாம். கத்தியோடு சேர்த்து புத்தியையும் உபயோகிக்க வேண்டிய தருணம். எவ்வளவோ பெரிய மலையைக் கூட ஒரு சிறிய எலி குடைந்து விடும். அதைப் போலவே மிகவும் வலிமை வாய்ந்தவனான மாயாவியை சிறுவனான நீ வெல்லமுடியும் என்பதால் என்னாலான உதவிகளைச் செய்தேன். எனது ஆசிகளை வழங்குகிறேன். நீ உனது பணியை வெற்றிகரமாக முடித்து வந்த பிறகு மீண்டும் இந்த ஆசிரமத்திற்கு வந்து தங்கி அத்தனை கலைகளையும் திறம்படக் கற்றுத் தேறவேண்டும். அதுவே என்னுடைய விருப்பம்”  என்று சொன்னதும் துருவனும் அவருடைய கருத்தை ஏற்றுக்கொண்டான்.

” அப்படியே ஆகட்டும் ஆசானே! நான் திரும்பி வந்ததும் உங்களிடம் வந்து முறையாகக் கற்றுக் கொள்கிறேன். கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு என்ற பழமொழி எனக்கு மிகவும் அழகாகப் பொருந்துகிறது”

என்று புன்னகையுடன் கூறினான்.

” நான் சொல்வதை இப்போது கவனமாகக் கேட்டுக் கொள் துருவா. உனக்கு உதவக்கூடிய சிலபொருட்களை

உனக்கு எனது பரிசுகளாகத் தரப்போகிறேன். ஆபத்து ஏற்படுகின்ற சமயத்தில் அவற்றை நீ உபயோகித்துப் பயன் அடையலாம்” என்று சொல்லி அவனிடம் மூன்று பொருட்களைத் தந்தார்.

முதலில் ஒரு மாயக் கண்ணாடி. மிகச் சிறிய அளவில் இருந்தது. அதைப் பற்றி விளக்கினார்.

” நீ யாரைப் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறாயோ அவர்களை மனதில் நினைத்துக் கொண்டு இதில் பார்த்தால் அவர்கள் எங்கு இருக்கிறார்களென்று உன்னால் பார்க்க முடியும்” என்று கூறி அந்த மாயக்கண்ணாடியை அவனிடம் ஒப்படைத்தார்.

இரண்டாவதாக ஒளி வீசும் ஒரு மணி ஒரு கயிற்றில் கோர்க்கப் பட்டிருந்தது. அதை அவனுடைய கழுத்தில் அணிவித்தார்.

” இது சாதாரண மணியல்ல. மிகவும் சக்தி வாய்ந்தது. இதை உனது கழுத்தில் இருந்து எந்த சந்தர்ப்பத்திலும் எடுக்க வேண்டாம். உன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது இந்த மணியை நீ தேய்த்தால் போதும். உன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் உருவாகி விடும். அந்த வளையத்தில் நீ இருக்கும் போது உன்னை எந்த ஆயுதத்தாலும் நெருங்க முடியாது. எவ்வளவு சக்தி வாயந்தவனாக இருந்தாலும் உன்னைத் தாக்க முடியாது” என்று விளக்கினார்.

மூன்றாவதாக ஒரு கயிற்றைக் கொடுத்தார்.

“இது ஒரு மந்திரக் கயிறு. எவ்வளவு வலிமையான எதிரியாக இருந்தாலும் இந்தக் கயிற்றால் அவனை எப்படியாவது கட்டிப் போட்டு விட்டால் அவனால் இந்தக் கயிற்றில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே முடியாது. தனது சக்தியை முழுவதும் இழந்து விடுவான். நீ மாயாவியை எப்படியாவது ஏமாற்றி, இந்தக் கயிற்றின் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் நீ அவனை எளிதாக வென்று விடலாம்” என்று கயிற்றைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்.

இந்த முக்கியமான மூன்று பொருட்களைத் தவிர,  சில மூலிகைப் பொடிகள், வேர்கள், ஒரு குடுவையில் மந்திர நீர் மூன்றையும் தந்து அவற்றை எப்படி உபயோகிக்க வேண்டும் என்றும்

விளக்கமாகச் சொன்ன பிறகு  அவனுக்கு விடை கொடுத்தார்.

குருவின் மனைவியாரும் அவனுக்கு ஆசிகளை வழங்கி, வழியில் உண்பதற்காகச் சில தின்பண்டங்களையும், பழங்களையும் கொடுத்தார். அவர்களை வணங்கி விட்டு துருவன் அங்கிருந்து சென்ற பின்னர் அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

“இந்தச் சிறுவனை நினைத்து எனக்கு மனதில் மிகவும் கவலையாக இருக்கிறது. வலிமை வாய்ந்த ஒரு மாயாவியின் முன்னே இந்தச் சிறுவன் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடியும்? அத்தனை படைகளுடன் சென்ற அரசரே ஒன்றும் செய்ய முடியாமல் திரும்பிய போது வயதிலும் சிறியவனான இவன் மாயாவிக்கு முன்னே எம்மாத்திரம்? அனுபவமும் இல்லை இவனுக்கு” என்று மேகலை அம்மையார் கவலையுடன் தனது கருத்தைக் கூறினார்.

“கவலை கொள்ளாதே மேகலா! வலிமையான இராவணேஸ்வரனை வானரப் படையுடன் சென்று இராமர் வெற்றி கொள்ளவில்லையா? ஆரவாரத்துடன் ஆர்ப்பரித்துச் சென்ற காவிரி நதியை உருவத்தில் குறுகிய உருவமுள்ள அகத்திய முனிவர் தனது கமண்டலத்தில் அடைக்கவில்லையா?”

“மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று கேள்விப்பட்டதில்லையா? துருவன் சிறுவனாக இருந்தாலும் சாதிக்கப் பிறந்தவன். எண்ணிய கருமத்தைச் சிறப்பாக முடிக்க வல்லவன். இவன் செல்கின்ற வழியில் இவனுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் போகின்றன. வெற்றியுடன் திரும்புவான்.”

“சஞ்சலப் படாதே! துருவன் வெற்றியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வோம். அதைத் தவிர நம்மால் வேறொன்றும் செய்ய முடியாது. எவ்வளவு வலிமையானவனாக இருந்தாலும் ஒருநாள் வீழ்வது தான் உலக நியதி. நடக்க முடியாததை துருவன் நடத்திக் காட்டுவான்” என்று நம்பிக்கையுடன் கூறினார். மேகலை அம்மையாரும் பெருமூச்சுடன் உள்ளே சென்றார்.

துருவன், ஆசான் தனக்கு வழங்கிய பரிசுகளை பத்திரமாகத் தனது இடையில் முடிந்து வைத்துக் கொண்டான். தன்னுடைய நண்பன் பஞ்சவர்ணக்கிளி கிள்ளி சொல்லிவிட்டுப் போனது அவனுடைய நினைவிற்கு வந்தது. அரண்மனை செல்வதற்கு முதல் நாள் இரவு, வனப்பகுதிக்குள் ஓய்வெடுத்த அதே மரத்தடிக்குச் சென்றான்.

அங்கே அவனுக்காகவே காத்துக் கொண்டிருந்த பறவைகளும் விலங்குகளும் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தன. குயில் ஒன்று மகிழ்ச்சியுடன் கூவியது. மயில் ஒன்று தோகை விரித்தாடியது. மான் குட்டி ஒன்று துள்ளித் துள்ளி ஓடித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. பல பறவைகளும் சேர்ந்து தங்களுடைய சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு அவனை வரவேற்றன.

பேசத் தெரியாத உயிரினங்கள் கூடத் தங்கள் சந்தோஷத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகின்றன என்று நினைத்து துருவனும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அங்கு கூடியிருந்த பறவைகளும் விலங்குகளும் கேட்டுக் கொண்டபடி துருவன் தனது புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். அனைத்து உயிரினங்களும் மனதை உருக்கும் அந்தக் குழலோசையை மெய்மறந்து இரசித்து இசையெனும் இன்பவெள்ளத்தில் மூழ்கித் திளைத்தன.

அன்று இரவு அதே மரத்தடியில் தான் கொண்டு வந்த தின்பண்டங்களையும் பழங்களையும் வைத்து துருவன் இரவு உணவை முடித்துக் கொண்டான்.

பறவைகள் சில பழங்களையும் பழக்கொட்டைகளையும் அவனுக்கு அன்புடன் கொடுத்து உபசரித்தன. களைத்துப் போயிருந்த துருவன் மரத்தில் சாய்ந்தபடி அப்படியே உறங்கிப் போனான்.

அடுத்த நாள் காலையில் எழுந்து அருகிலிருந்த சிறிய நீரோடையில் குளித்து விட்டுப் புத்துணர்ச்சியுடன் துருவன் கிளம்பினான். பஞ்சவர்ணக்கிளி கிள்ளி அவனுடைய தோளில் வந்து அமர்ந்தது.

“அண்ணா, இதோ என்னுடைய இந்தத் தோழர்களும் நம்முடன் வரவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள்”

என்று சொல்லி எதிரில் இருந்த தனது நண்பர்களைக் காட்டியது கிள்ளி. ஆச்சர்யத்துடன் பார்த்தான் துருவன்.

அழகான மயிலொன்று நின்று கொண்டிருந்தது. நேற்று இரவு துருவன் புல்லாங்குழல் வாசித்து இன்னிசை விருந்தளித்த போது தோகை விரித்தாடியதே  அதே மயில் தான்.

“மயில் அண்ணா, நீங்கள் எதற்காக என்னுடன் வர ஆசைப்படுகிறீர்கள்? நான் மேற்கொண்டிருக்கும் பணி மிகவும் ஆபத்தானது. தொலை தூரம் பயணம் செய்யவேண்டும். என்னுடன் சேர்த்து உங்கள் உயிரையும் பணயம் வைப்பதில் எனக்கு விருப்பமில்லை”

என்று கூறினான்.

அந்த மயில் வருத்தத்துடன் பேச ஆரம்பித்தது. அந்த மயிலுக்கும் மனிதர்களிடம் பேசும் திறன் இருந்தது.

“துருவா, உன்னுடன் வருவதற்கு நான் ஆசைப்படுவது ஏன் தெரியுமா? எனக்கு இளவரசியைப் பார்க்க வேண்டும். இளவரசி சிறு குழந்தையாக இருந்த போதே என்னுடன் தான் விளையாடுவார். பேச்சுக் கூட வராத பருவத்தில் என்னைப் பார்த்ததுமே கைகளைக் கொட்டிச் சிரித்து மகிழ்ந்து போவார். இளவரசி அரண்மனையில் இருந்தபோது, நான் அரண்மனைத் தோட்டத்திலேயே தான் இருந்தேன். இளவரசியைப் பிரிந்தபிறகு அரண்மனையில் இருக்க மனமில்லாமல்

இந்த வனத்துக்கு வந்துவிட்டேன். நீங்கள் மலைக்கோட்டைக்குப் புறப்பட்ட தகவல் தெரிந்ததுடன் உங்களுடன் சேர்ந்து கிளம்ப மனம் துடிக்கிறது. என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். மறுத்து விடாதீர்கள்” என்று அந்த மயில் கெஞ்சியது.

இருந்தாலும் துருவன் தயங்கினான். அவனுக்கு மனம் வரவில்லை.

“துருவன் அண்ணா, மயில் அண்ணனைக் கூட்டிச் செல்ல ஒத்துக் கொள்ளுங்கள். இந்த மயில் அண்ணனுக்கு சில விசேஷ சக்திகள் இருக்கின்றன. அவற்றை உபயோகித்து உங்களுக்கு நிச்சயமாக உதவி செய்வார். இவர் உண்மையிலேயே இளவரசி ஐயையை மலைக்கோட்டைக்குச் சென்று பார்ப்பதற்காகத் துடித்துக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னதும் துருவன்‌ வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டான்.

அடுத்ததாகத் தன்னெதிரே நின்று கொண்டிருந்த மிகச் சிறிய அணிலைப் பார்த்ததும் துருவனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அணில் தம்பி, நீங்கள் என்னுடன் எதற்காக வரத் துடிக்கிறீர்கள்? நீங்கள் அப்படி என்ன தான் உதவி செய்யப் போகிறீர்கள்?” என்று சிரித்துக் கொண்டே துருவன் கேட்க, அந்த அணில் துருவனை நிமிர்ந்து பார்த்தது. பதிலொன்றும் சொல்லவில்லை‌

அடுத்து அந்த அணில் செய்த காரியத்தால் வாயடைத்துப் போனான் துருவன். அந்த மாதிரி விந்தையான ஒரு காட்சியை இதுவரை துருவன் பார்த்ததேயில்லை.

அணில் உருவத்தில் திடீரென்று வளர்ந்து அவன் முன்னே பிரம்மாண்டமாக நின்றது. அதற்கு இறக்கைகள் வேறு முளைத்திருந்தன.

squirrelwings
source: Internet

அடுத்து உடனடியாகத் தனது உருவத்தைச் சுருக்கிக் கொண்டு ஒரு சிறிய பூச்சியளவு மாறி, துருவனைச் சுற்றி சுற்றி வந்து வண்டு போல ரீங்காரமிட்டது.

“இந்த அணில் என்ன உதவி செய்ய முடியும்?” என்று சற்று முன்னர் நினைத்த துருவன் தனது தவறுக்கு வருந்தினான். அந்த அணிலின் முன்னே கைகளைக் கூப்பிப் பணிவுடன் நின்றான்.

-தொடரும்.

புவனா சந்திரசேகரன்.

(என்ன குட்டிகளா? கதை பிடிச்சிருக்கா உங்களுக்கு? மயிலும், கிளியும், அணிலும் தவிர வேறு யாராவது துருவனுக்கு உதவி செய்யப் புதுசா வரப் போறாங்களா? இவங்க  எல்லோரோட சாகசங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கத் தொடர்ந்து படியுங்க குழந்தைகளா! எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியை கவனமாக் கொண்டாடுங்க. சிறப்பாக் கொண்டாடுங்க. நிறைய இனிப்புகள் சாப்பிடுங்க!)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments