துருவனின் அந்தக் கலைக் குழுவினரும் மலையின் உச்சியை நோக்கித் தங்களுடைய நடைப்பயணத்தைத் தொடர்ந்தார்கள். தற்போது மலையில் இருக்கும் அபாயங்களைப் பற்றியும், அவற்றில் இருந்து தப்பிப்பதையும் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டதால் மனதில் இருந்த அச்சம் அகன்றது.
நிம்மதியாக அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தாலும், மனதிற்குள் மாயாவி பற்றிய அச்சம் இருந்து தான் வந்தது.
துருவன் இதுவரை மாயாவியைப் பற்றி மற்றவர்களிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொண்டாலும், நேரில் பார்க்கப் போவது அது தான் முதல் தடவை.
அன்று மாலை, அந்தக் குழு மலை உச்சியை அடைந்தது. பிரம்மாண்டமான கோட்டை கண்முன்னே காட்சி அளித்தது. ஆயுதங்களை உடையில் சொருகிக் கொண்டிருந்த காவலர்கள், கோட்டைக் கதவின் அருகிலும், கோட்டைச் சுவரிலும் உலாத்திக் கொண்டிருந்தார்கள். இருள் சூழ ஆரம்பித்திருந்ததால், பற்பல தீப்பந்தங்கள் ஆங்காங்கே சுவரில் சொருகப் பட்டிருந்தன. நல்ல வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன. தீப்பந்தங்கள், இருளை வெற்றிகரமாக விரட்டி, அந்த இடத்தையே ஜகஜ்ஜோதியாக்கிக் கொண்டிருந்தன.
கோட்டைக் கதவுகளை மூடி விட்டதால், அவர்களைக் காவலர்கள் கோட்டையின் உள்ளே பிரவேசிக்க அனுமதிக்கவில்லை. கோட்டைக் கதவுகளுக்கு எதிரே, கூடாரங்களை அமைத்துத் தங்கும்படி காவலர்கள் உத்தரவிட்டதோடு, கூடாரங்களை அமைக்க அந்தக் குழுவினருக்கு உதவியும் செய்தார்கள்.
இரவு உணவு கோட்டையின் உள்ளேயிருந்து வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டன. அவற்றோடு சேர்ந்து பழங்களும், பழச் சாறும் மற்றும் தேன் சேர்க்கப்பட்ட பாலும் வழங்கப்பட்டன. நீண்ட நேரம் நடந்து வந்த களைப்பு தீர, உணவை முடித்தபிறகு நன்றாக உறங்கி காலையில் எழுந்தார்கள். அருகிலிருந்த சுனையில் சென்று நீராடித் தூய ஆடைகளை அணிந்து கொண்டு மாயாவியைச் சந்திக்கத் தயாரானார்கள்.
கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டன. உள்ளேயிருந்த பிரம்மாண்டமான மாளிகை, துருவனையும் அவனுடைய குழுவினரையும் வரவேற்றது.
மாயாவியின் கேளிக்கை அறைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப் பட்டனர். அவர்கள் அந்த அறைக்குள் சென்று காத்துக் கொண்டிருந்தனர்.
அறையின் நடுவே ஒரு பெரிய சிம்மாசனம் ஒன்று போடப்பட்டிருந்தது. அந்த சிம்மாசனத்தின் எதிரே ஒரு மேடை அமைக்கப் பட்டிருந்தது. அந்த மேடையில் ஏறித் தான் கலைக்குழுவினர் தங்களுடைய திறமைகளைக் காட்டிப் பார்வையாளர்களின் மனதை மகிழ்விக்க வேண்டும். சிம்மாசனத்திற்கு அருகில் ஒரு சிறிய ஆசனமும், அதன் இரு பக்கங்களிலும் வேறு சில ஆசனங்களும் போடப் பட்டிருந்தன். சுவரோரமாகச் சில கூண்டுகள் நிறுத்தப் பட்டிருந்தன.
சிறிது நேரத்தில் மலைக்கோட்டை மாயாவி அங்கே நுழைந்த போது வாத்தியங்கள் முழங்கின. அங்கிருந்த பணியாளர்கள் சிலர் மலர்களைத் தூவி வாழ்த்துகளை முழங்கி மாயாவியை வரவேற்றார்கள். கம்பீரமாக நடந்து வந்த மாயாவி, தனது சிம்மாசனத்தில் சென்று அமர்ந்தான். இரண்டு பணிப்பெண்கள் இரண்டு பக்கங்களிலும் நின்று கொண்டு சாமரம் வீசினார்கள்.
கம்பீரமான தோற்றத்துடன் பெரிய உருவமாகத் தெரிந்தான். பெரிய அகன்ற கண்கள். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் கண்களில் தெரிந்தது. சாகசம் செய்யும் ஆர்வமும், நான் சாதிக்கப் பிறந்தவன் என்ற ஆணவமும் முகத்தில் தெரிந்தன.
மாயாவியின் அருகில் இருந்த சிறிய சிம்மாசனத்தில் அழகான இளவரசி ஒருத்தி வாடிய முகத்துடன் உட்கார்ந்திருந்தாள். அவளைப் பார்த்ததுமே, தான் தேடி வந்த இளவரசி ஐயை அவள் தான் என்பது துருவனுக்குப் புரிந்து விட்டது. சிறு வயது இளவரசியின் ஓவியத்தை அவன் பார்த்திருந்தான். அதனால் அவனுக்கு எளிதாக முகத்தில் இருந்த ஜாடை தெரிந்தது. துருவனின் அருகில் இருந்த மயிலும், தனது தோகையை மகிழ்ச்சியுடன் விரித்ததில் இருந்து துருவனுக்கு அந்தப் பெண், இளவரசி ஐயை தான் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டது.
அங்கே ஏற்பட்ட சலசலப்பில் தலைகுனிந்து கண்ணீர் சிந்திக் கொண்டு அமர்ந்திருந்த இளவரசியும் தலைநிமிர்ந்து சத்தம் வந்த திசையில் பார்த்தவள், மயிலைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டாள். அவளுடைய அழகான முகம், ஆனந்தத்தால் கதிரவனைக் கண்ட தாமரை போல விரிந்தது. முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது.
மாயாவி கையை அசைத்து, சைகை காட்டினான். கலைக்குழுவினர் தங்களது நிகழ்ச்சிகளைத் தொடங்கினர். அப்போது காவலர்கள் வந்து சுவரோரமாக வைக்கப்பட்டிருந்த கூண்டுகளின் முன்பகுதியில் இருந்த திரைகளை அகற்றினார்கள். பல்வேறு விலங்குகள் அந்தக் கூண்டுகளில் அடைக்கப் பட்டிருந்தன. அந்த மாதிரியான ஒரு கூண்டில் தான் நாக தேசத்து இளவரசனையும் துருவன் அடையாளம் கண்டு கொண்டான்.
முதலில் துருவன் குழலை ஊதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தான். அனைவரும் துருவனின் குழலோசையில் தங்களை மறந்து இசை என்னும் இன்பவெள்ளத்தில் நீந்தினார்கள். அடுத்து மயில் தனது தோகையை விரித்து நடனமாடியது. அணில், தனக்குத் தெரிந்த வித்தைகளைச் செய்து காட்டியது. அபூர்வன், கோமாளி போல உடை அணிந்து நடுநடுவே ஓடி நகைச்சுவை நரம்பபைத் தூண்டும் வகையில் கோமாளித்தனமாக நடந்து கொண்டு பார்வையாளர்களை வாய்விட்டுச் சிரிக்க வைத்தான். கிளி, தன் இறகுகளை அழகாக அடித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்தபடி மனிதக் குரலில் பேசி அனைவரையும் மகிழ்வித்தது. இவை அனைத்தும் இந்த முறை புதிதாகச் சேர்க்கப்பட்ட நிகழ்ச்சிகள்.
இவற்றைத் தொடர்ந்து வழக்கமான கலைக்குழுவினர் ஒவ்வொரு முறையும் நடத்தும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன. அருணன், கின்னரம் என்றழைக்கப்படும் இரண்டு தந்திகளாலான யாழை மீட்டினான். வருணன் மத்தளத்தைக் கொட்டினான். கயிற்றைக் கட்டி இரட்டையர்கள் நடந்து காண்பித்தார்கள். குரங்குகளும் கயிற்றின் மீது நடந்தன. கயிற்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே அங்குமிங்கும் தாவி வித்தைகள் செய்தன. பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினார்கள். ஆண்கள் வாத்தியங்களை வாசித்தார்கள்.
மொத்தத்தில் மனோரஞ்சகமான கலை நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. இளவரசியின் வாடிய முகத்தில் இருந்த துயரம் மாறிப் புன்னகை மலரத் தொடங்கிய போதே மாயாவி கவனித்து விட்டான். கலைக்குழுவினரின் தலைவரை அழைத்து நிறைய சன்மானங்களை வழங்கினான்.
கலைக்குழுவின் தலைவரைப் பார்த்து மாயாவி பேசினான்.
“வழக்கம் போல நிறைய வித்தைகளைச் செய்து எங்கள் மனங்களை மகிழ்வித்த உங்களுக்கு வழக்கத்தை விட, அதிக சன்மானம் வழங்கியிருக்கிறேன். சென்ற முறை செய்த வித்தைகளுக்கும் இந்த முறை செய்த வித்தைகளுக்கும் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. உங்கள் குழுவில் சிலரைப் புதிதாகச் சேர்த்திருக்கிறீர்கள். புதிதாகச் சேர்ந்தவர்களை மட்டும் இங்கேயே விட்டு விட்டு நீங்கள் கிளம்பலாம். அவர்களுடைய செயல்கள், இளவரசிக்குப் பிடித்திருந்ததால் அவர்களை இரண்டு மூன்று நாட்கள் கழித்து இங்கிருந்து அனுப்புகிறேன்” என்று சொல்ல, அந்தத் தலைவருக்குத் தயக்கமாக இருந்தது.
‘அறிவாளியான இந்த மலைக்கோட்டை மாயாவிக்கு ஏதோ புரிந்து விட்டது. துருவனையும் அவனுடைய நண்பர்களையும் மட்டும் விட்டுச் சென்றால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். நமக்கு உதவி செய்தவனைத் தனியாகப் போராட விட்டு விட்டு, நாம் மட்டும் எப்படி இங்கிருந்து கிளம்புவது? செய்நன்றி மறந்து நடப்பது தவறல்லவா?’ என்று யோசித்து அவருக்கு மனதில் குழப்பமாக இருந்தது .
அவர் மனதில் ஓடிய சிந்தனைகளைப் புரிந்து கொண்ட துருவன், அவர் அருகில் வந்து அவருடைய செவிகளில் மட்டும் விழும்படியாக, மென்மையாகப் பேசினான்.
“தலைவரே, கவலையில்லாமல் செல்லுங்கள். உங்கள் உதவியில்லாமல் நான் இங்கு வந்திருக்கவே முடியாது. என்னால் உங்களுக்கும் குழுவில் இருக்கும் மற்றவர்க்கும் எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்று தான் நான் மனதில் தவித்துக் கொண்டிருந்தேன். இப்போது எனக்கு நிம்மதியாக இருக்கிறது. குழுவில் அப்பாவிப் பெண்களும் சிறுவர்களும் இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டியது உங்களுடைய கடமை. தயங்காமல் விரைந்து செல்லுங்கள். அதிகம் தாமதித்தால் மாயாவிக்கு சந்தேகம் வந்து விடலாம். மலையடிவாரத்திற்குச் சென்று வனத்திற்குள் நீங்கள் காத்துக் கொண்டிருந்தால் நானும் எனது பணியைச் செவ்வனே முடித்துவிட்டு வந்துவிடுவேன்” என்று சொல்லி அவரை அனுப்பப் பார்த்தான்.
“என்ன அங்கே சலசலப்பு? சிலரை விட்டு விட்டுச் செல்ல விருப்பமில்லை என்றால் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவீர்கள்” என்று மாயாவி உறுமினான்.
“இல்லை, இல்லை. எந்தக் குழப்பமும் இல்லை. நானும் என் நண்பர்களும் தான் குழுவில் புதிதாக இணைந்தவர்கள். நாங்களும் உங்களுடைய ஆணையை ஏற்று இங்கே இன்னும் சில நாட்கள் தங்கி, எங்களுடைய பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்கவே ஆசைப் படுகிறோம்” என்று துருவன் சொல்லி விட்டுத் தனது நண்பர்களுடன் கலைக்குழுவில் இருந்து பிரிந்து தனியாக நின்றான்.
கலைக்குழுவினர் வேறு வழியில்லாமல் துருவனிடமும் அவனுடைய நண்பர்களிடமும் இருந்து விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். மனமேயில்லாமல் தலைவர், அவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்.
“வெகு சிலரே இருப்பதால் நீங்கள் கோட்டைக்குள்ளேயே தங்கலாம். கோட்டையின் விதிமுறைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதன் படி நடந்து கொள்ளுங்கள். மீறினால் பெரிய ஆபத்தை எதிர் கொள்வீர்கள். என்னுடைய அனுமதி இல்லாமல் கோட்டையின் மற்ற பகுதிகளுக்குச் செல்வதோ, அங்கிருப்பவர்களுடன் பேசுவதோ, சுற்றுப்புறத்தை ஆராய்ந்து வேவு பார்ப்பதோ நல்லதல்ல. மீறினால் கடுமையாக தண்டிக்கப் படுவீர்கள்” என்று எச்சரித்தான் மாயாவி.
“தங்கள் ஆணைப்படி நடக்கிறோம் அரசரே” என்று துருவன், பணிவுடன் பதில் அளித்தான்.
துருவன் முகத்தில் தெரிந்த அறிவுக் களையும், துணிவும், வீரமும் மாயாவியை எச்சரித்தன. ‘இவன் பார்க்க, சிறுவனாக இருந்தாலும் இவனிடம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது. இவனை ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும்’ என்று நினைத்தான்.
காவலர்களில் சிலரை அழைத்தான். “இந்தச் சிறுவனை அழைத்துச் சென்று தங்குவதற்கு இடத்தைக் காட்டுங்கள். உணவு அருந்தும் உணவுக்கூடம் எங்கிருக்கிறது என்பதையும் மற்ற முக்கியமான தகவல்களையும், கோட்டையின் விதிமுறைகளையும் விளக்கமாக எடுத்துச் சொல்லி விட்டு வாருங்கள்” என்று சொன்னான்.
அவர்கள் நகர ஆரம்பித்ததும் இளவரசியின் முகம் மீண்டும் வாடியதை கவனித்த மாயாவி,
“சிறுவனே, சற்று நில். உன்னிடம் இருக்கும் மயிலையும், கிளியையும் மட்டும் இங்கே விட்டு விட்டுச் செல். இளவரசி, மயிலைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். அதனால் அவை இரண்டும் இன்னும் சிறிது நேரம் இளவரசியோடு அவருடைய அறையில் விளையாடி அவருடைய மனதை மகிழ்வித்த பின்னர், உங்களிடம் வந்து சேரட்டும்” என்று ஆணையிட்டான்.
துருவனுக்கு அவற்றைத் தனியாக விட்டுச் செல்ல மனதிற்குள் அச்சம் தோன்றியது. இருந்தாலும், ‘மயிலும், கிளியும் இளவரசியுடன் நேரம் செலவழித்தால், அவருடன் பேசி அவரிடம் நாம் வந்திருக்கும் நோக்கத்தைத் தெரிவிக்கலாம். அதைத் தவிர இந்தக் கோட்டையைப் பற்றியும் மாயாவி பற்றியும் நமக்குத் தேவையான சில முக்கியமான தகவல்களையும் இளவரசியிடம் இருந்து பெறுவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு’ என்று நினைத்து, அங்கிருந்து அபூர்வன் மற்றும் அணிலுடன் நடக்க ஆரம்பித்தான்.
மயிலையும், கிளியையும் அழைத்துக் கொண்டு ஆனந்தத்துடன் இளவரசி தன்னுடைய அறைக்குச் சென்றாள். அறை என்பது இளவரசிக்காகத் தனியாக, சகல வசதிகளுடன் இருந்தாலும் ஒரு சிறை போலத் தான் இருந்தது. இளவரசிக்கு வெளியே செல்ல சுதந்திரம் கிடையாது. அறையின் வெளியே காவலர் எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். அறைக்கு வெளியே சிறிய முற்றம் ஒன்று திறந்தவெளியாக இருந்தது. அங்கே மயில், கிளியுடன் சென்ற இளவரசி மலர்ந்த முகத்துடன் விளையாட ஆரம்பித்தாள்.
காவலாளிகள் சற்றுத் தொலைவில் நின்று கொண்டு, அவர்களைக் கண்காணித்தார்கள். மயில், கிளியிடம் ஏதோ இரகசியமாகச் சொல்ல, அதைக் கேட்ட கிளியும் தலையசைத்து விட்டுக் காவலர்களிடம் சென்று மனிதக் குரலில் பேச ஆரம்பித்தது. அவர்களுடன் பேசிக்கொண்டே அங்குமிங்கும் பறந்து அவர்களுடைய கவனத்தைத் திசை திருப்பி விட்டது. காவலாளிகளை அலைக்கழித்து அங்குமிங்கும் ஓடவிட்டது.
மயிலுக்கும் இளவரசி ஐயையிடம் மனம் விட்டுப் பேச நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. தாங்கள் துருவனுடன் சேர்ந்து, இளவரசியை மீட்க வந்திருக்கும் திட்டத்தைப் பற்றி விரிவாகச் சொல்ல ஆரம்பித்தது.
மயில் சொன்ன தகவல்களைக் கேட்டு இளவரசி அச்சமுற்றாள். பதைபதைத்துப் போனாள்.
“என்னை மீட்பதாக நினைத்துக் கொண்டு மிகப்பெரிய ஆபத்தில் நீங்கள் அனைவரும் சிக்கிக் கொண்டீர்கள். மாயாவி பல்வேறு சக்திகளைக் கொண்டவன். மாயமந்திர வித்தைகளில் நன்றாகத் தேர்ச்சி பெற்றவன். அவனை எதிர்த்துப் போராடுவது தற்கொலை செய்து கொள்வதற்கு சமானம். தயவுசெய்து என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளுங்கள். இங்கிருந்து போக அனுமதி கிடைத்ததும் சென்று விடுங்கள்” என்று கைகளைக் கூப்பிக் கண்ணீருடன் வேண்டினாள்.
-தொடரும்.
(ஹலோ குட்டீஸ்! எல்லோரும் நல்லா இருக்கீங்களா? அடுத்த பகுதியில் துருவன் எப்படி மாயாவியை எதிர்த்து நிக்கப் போறான்னு பாக்கலாமா? துருவன் வெற்றியடைய நாம எல்லோரும் அவனுக்காக வேண்டிக்கலாம். ஓகேயா?)
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.