கிரிஷ், சென்னை அசோக் நகரில் வசிக்கும் 12 வயதுப் பையன். தன் வீட்டிற்கு அருகிலிருக்கும் விவேகானந்த வித்யாலயாவில் ஏழாம் வகுப்பில் படித்து வந்தான்.
அதே தெருவில் வசிக்கும் விக்கி, குமார் மற்றும் ராகவ், கிரிஷ்ஷின் நெருங்கிய நண்பர்கள். எல்லோரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிப்பவர்கள்.
எல்லோரும் ஒன்றாகவே காலையில் பள்ளிக்குச் சென்று, ஒன்றாகவே மாலையில் வீட்டிற்குத் திரும்புவார்கள். பள்ளி வீட்டிற்கு அருகிலேயே இருப்பதால், எல்லோரும் ஜாலியாகப் பேசிய படி, நடந்தே சென்று வருவது வழக்கம்.
கிரிஷ் பள்ளிக்குச் செல்லும் வழியில் தெரு முனையில், ஒரு சில நாட்களாக, ஒரு வயதான பிச்சைக்காரன் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தான். அவனின் கிழிந்த அழுக்கான உடையும், பரட்டைத் தலையும் பார்க்கவே கிரிஷ்ஷிக்கு பாவமாக இருந்தது.
போன விடுமுறையில் அவன் பாட்டி வீட்டுக்குச் சென்ற பொழுது, பாட்டி அவனிடம் சொன்னது அவனுக்கு ஞாபகம் இருந்தது. பாட்டி தினமும் இரவில் சாப்பிட்டு முடித்ததும், ஒரு கிண்ணத்தில் சோறும், கொஞ்சம் குழம்பும் தூக்கி எறியாமல் பத்திரமாக எடுத்து வைத்தாள்.
கிரிஷ் “ஏன் பாட்டி இதே வச்சிருக்கீங்க?”, என்று கேட்டதற்கு,
“ஒன்பது மணிக்கு மேல ஒரு ராப்பிச்சைக்காரி வருவா. பாவம், ரொம்பப் பசியா இருப்பா. மிச்ச சாப்பாடு தூக்கிப் போடாம அவளுக்குக் குடுத்தா, சந்தோஷமா சாப்பிடுவா. சாப்பாடு இல்லாம, காசு இல்லாம கஷ்டப் படற மக்களுக்கு நம்மால ஆன உதவிய நாம எப்பவும் செய்யணும்”, என்றாள்.
கிரிஷ்ஷிக்குப் பாட்டி சொன்னது போல், அந்தப் பிச்சைக்காரனுக்குத் தன்னாலான ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது.
அவன் தினமும் தன் அம்மாவிடம் தன் லஞ்ச் பாக்ஸில் சாப்பாடு கொஞ்சம் அதிகமாக வைக்கச் சொன்னான். தான் சாப்பிட்டு, மிச்சமிருக்கும் சாப்பாட்டை தினமும் அந்த வயதான பிச்சைக்காரருக்குக் கொடுக்க ஆரம்பித்தான். அது போக, அப்பா தனக்கு கொடுக்கும் பாக்கெட் மணியில் கொஞ்சம் மிச்சம் பிடித்து அவ்வப்போது அவனுக்குப் பத்து ரூபாய் கொடுப்பான். சற்று நாட்களில் கிரிஷ் மற்றும் அந்த பிச்சைக்காரனுக்கு இடையில் ஒரு விதமான நட்பு மலர ஆரம்பித்தது.
அவன் நண்பர்கள் அவனிடம், “ஏண்டா எப்போ பார்த்தாலும் அந்தாளுக்கு சாப்பாடு, காசெல்லாம் குடுக்கறே? போயும் போயும் அவனோட நட்பு வச்சிருக்கே”, என்று கேட்டால்,
“இல்லாதவங்க, கஷ்டப்படறவங்களுக்கு நாம எப்பவும் உதவி செய்யணும்னு என் பாட்டி சொல்லியிருக்காங்க. யாரையும் குறைவா எடை போடக் கூடாது. அவமதிக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க”, என்பான்.
மார்ச் மாதத்தில், +2 வகுப்பிற்கு ஃபைனல் பரீட்சை பள்ளியில் தொடங்கியது. பரீட்சை மதியம் இரண்டு மணிக்கு என்பதால், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணியோடு பள்ளி முடிந்து விடும். எல்லோரும் ஒரு மணிக்கே கிளம்பி வீட்டிற்குச் சென்றார்கள்.
கிரிஷ்ஷுக்கும் அவன் நண்பர்களுக்கும் ஒரே சந்தோஷம். சீக்கிரமே வீட்டிற்குப் போய் ஜாலியாக விளையாடலாம் அல்லவா?
தினமும் செய்வது போல், அன்றும், பள்ளிக்கு எதிரே இருக்கும் கடையில் கடலை உருண்டையும், சிப்சும் வாங்கி சாப்பிட்ட படி வெகு நேரம் கழித்து விட்டு, நாலு பேரும் மெதுவாக, கும்மாளம் அடித்தபடி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். தெரு முனையில் திரும்பும் பொழுது எதிரே மிக வேகமாக வந்த பைக்காரன், கிரிஷ் மீது பலமாக மோதி விட்டான். அதே வேகத்தில், நிறுத்தாமல் சென்று மறைந்து விட்டான்.
கிரிஷ் கீழே விழுந்து விட்டான். அவனுக்குத் தலையில், கை, கால்களில் பலத்த அடி. இரத்தம் வர ஆரம்பித்தது. இவர்கள் நாலு பேரும் கடையை விட்டு வெகு தாமதமாகக் கிளம்பியதால் எல்லோரும் வீட்டிற்குச் சென்று விட்டிருந்தார்கள். அங்கு ஆள் அரவமே இல்லை.
கிரிஷ்ஷின் நண்பர்கள் பதறிப் போனார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த படி நின்றார்கள். இதையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த வயதான பிச்சைக்காரன் அருகில் ஓடி வந்தான்.
“கொஞ்சம் இருங்கப்பா. நான் ஒரு ஆட்டோ கிடைக்குதான்னு பாக்கறேன்”, என்று பசங்களிடம் சொல்லி விட்டு, அருகிலிருக்கும் ஆட்டோ ஸ்டாண்டிற்கு ஓடினான். அங்கிருந்த ஒரு ஆட்டோக்காரரிடம் கெஞ்சிக் கூத்தாடி, அவரிடம் நிலைமையை விளக்கி, அங்கு அழைத்து வந்தான்.
கிரிஷ்ஷை ஆட்டோவில் ஏற்றினான். கிரிஷ்ஷின் வீட்டைக் காட்டுவதற்காகக் குமாரையும் ஏற்றிக் கொண்டு கிரிஷ் வீட்டை நோக்கி விரைந்தார்கள்.
குமார் உள்ளே சென்று கிரிஷ் அம்மாவை அழைத்து வர, பிச்சைக்காரன் அவளிடம் நிலைமையை விளக்கிக் கூறி, “ஒண்ணும் பயப்படாதீங்கம்மா. இதே ஆட்டோலே மெயின் ரோட்டிலே இருக்கிற ஆஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு போங்க. எல்லாம் சரியாயிடும். பிள்ளையே பத்திரமா பாத்துக்கோங்க. ரொம்ப நல்ல பிள்ளை”, என்று சொன்னான்.
கிரிஷ்ஷின் அம்மா அழுதபடி, பிச்சைக்காரனை நோக்கி, “ரொம்ப நன்றிங்கய்யா”, என்று சொல்லிக் கை கூப்பி விட்டு ஆட்டோவில் ஏறி ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள்.
பிச்சைக்காரன் ஏதோ சாதித்த திருப்தியுடன் கை வீசிய படி தன் ஜாகையை நோக்கி நடந்து சென்றான்.
நீதி: நாம் யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.