அகிலா ஆறாம் வகுப்பு படிக்கும் பெண். இன்று கட்டுரை போட்டி நடக்கிறது. ஒரு மணி நேரம் நடக்கும். தேர்வு போலவே தனியாக உட்கார வைத்து எழுத வைப்பார்கள்.

                பள்ளிக்கு இரண்டு மைல் நடக்க வேண்டும். நடந்துதான் போவாள். செல்லும் வழியில் சிறு பறவைகளின் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்.

                அவள் படிக்கும் தனியார் பள்ளியில் சென்ற வாரம் கட்டுரைப்போட்டிக்கு அறிவிப்பு செய்திருந்தார்கள். இயற்கையை பற்றி எழுதவேண்டும். அவள் முதலில் பெயர் கொடுக்கவில்லை. இந்திய அளவில் நடப்பதாலும், தனக்கு எழுத அவ்வளவாக வராது என்பதாலும் தயங்கினாள். ஆனால் அவள் நண்பர்கள் புவனா, சுசீலா எல்லோரும் பெயர் கொடுத்துவிட்டு, அவளையும் வற்புறுத்த அவளும் பெயர் கொடுத்துவிட்டாள்.

                தூரத்தில் பள்ளியின் வேன் வருவதை கவனித்தாள்.  அது வரும் வழியில் ஒரு சிறு நாய்க்குட்டி வேகமாக வந்துவிட்டது. அதன் அம்மா நாய் வேகமாக ஓடிவந்து அது வேனுக்குள் மாட்டுவதற்குள் தடுத்து கூட்டிச்சென்றது. வேனில் இருந்து அகிலாவின் நண்பர்கள் அவளை பார்த்து கை ஆட்டினார்கள். அதில் செந்திலும் ராஜாவும் மட்டும் எப்போதும் இவளை ‘நடை வண்டி’ என்று கிண்டல் செய்துகொண்டே இருப்பார்கள்.

                வீட்டில் கேட்காமல் பெயர் கொடுத்ததை முதலில் அவள் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் மற்றவர்கள் அந்த பள்ளியிலேயே சாயந்திரம் நடக்கும் பயிற்சி வகுப்பிலும் சேர, அப்போதுதான் தான் என்ன செய்வது என்று பயம் வந்தது.

vaaname ellai

                வழியில் சின்ன ஏரி போல இருக்கும். அங்கே இருக்கும் பாறையில் சிறிது நேரம் உட்காருவாள். ஏரியில் கொஞ்சமாக தண்ணீர் இருக்கும். சின்னச்சின்ன மீன்கள் நீந்துவதை பார்க்க முடியும். கையில் இருக்கும் தீனியில் எதாவது எடுத்துப்போடுவாள். பறவைகள் அங்கு சுற்றிக்கொண்டு இருக்கும். ஏரியின் நடுவில் இருக்கும் மரத்தில் அவை உட்கார்ந்திருக்கும். பச்சையான மரத்தில் வெண்மையான அந்த பறவைகள் ‘ஜே ஜே’ என்று கும்பலாக உட்கார்ந்திருப்பது கோலம் போல புள்ளி வைத்தது போல இருக்கும். சின்ன சத்தம் கேட்டாலும் அவை ஒரே நேரத்தில் பறப்பது மிக அழகாக இருக்கும்.

                பயிற்சி வகுப்புக்கு தனியாக கட்டணம் இரண்டாயிரம் கட்டவேண்டும். எல்லோரும் கட்டி விட்டார்கள். தினமும் போய் வந்து அதைப்பற்றி வகுப்பில் பேசுவதை கேட்க கேட்க அவளுக்கு கவலை அதிகமாகிவிட்டது. பல விஷயங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருந்தார்கள். நண்பர்களும் அதை பலவிதங்களில் மாற்றி மாற்றி எழுதி ஒருவருக்கொருவர் காட்டிக்கொண்டார்கள். அகிலா இதை எதையும் கவனிக்காதது போல தனியே உட்கார்ந்திருந்தாள்.

                தானும் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டிருக்கலாம் என்று மனதில் ஒரு ஆசை எழுந்துகொண்டே இருந்தது. எப்படி எழுதுவது, எதைப்பற்றி எழுதுவது என்று கவலையாக இருந்தது. ஆனால் அகிலாவின் அப்பா, சின்ன கம்பெனிக்கு வேலைக்கு செல்பவர். ஐந்தாம் வகுப்பு வரை அகிலா அரசு பள்ளியில் படித்தாள். ஆறாம் வகுப்புக்கு இந்த பள்ளியில் அப்பாதான் மிகவும் சிரமப்பட்டு சேர்த்துவிட்டார். இதற்கு பணம் கட்டவே அவர் மிகவும் கஷ்டப்படுவதை தெரிந்திருப்பதால் அகிலா தன் ஆசையை அவரிடம் சொல்லவில்லை.

                அகிலாவுக்கு ஒருபழக்கம் உண்டு. வழியில் கீழே பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடந்தால் அதை பொறுக்கி குறிப்பிட்ட ஒரு இடத்தில் போட்டுவிட்டு போவாள்.  ஒரு வார அளவில் பத்துக்கும் மேல் சேர்ந்துவிடும். வார இறுதியில் குப்பை எடுத்துக்கொண்டு வரும் சின்ன வண்டி அங்கு நிறுத்தி அதை எடுத்துப்போய்விடுவார்கள். முதலில் அவர்கள் அதை கவனிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து அங்கே நிறைய பாட்டில்கள் கிடப்பதால் வாராவாரம் நிறுத்தி எடுத்துபோக ஆரம்பித்திருந்தார்கள்.

                எதையாவது எழுதி கொடுத்துவிட்டு உடனே கிளம்பிவிடவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டாள் அகிலா. பள்ளிக்குள் செல்லும் முன் வாசலிலேயே மரத்தடியில் சிறிது நேரம் சோர்வாக அமர்ந்திருந்தாள் வாசலில் ஏதோ வாங்கி சாப்பிட்டு விட்டு வந்த செந்திலும் ராஜாவும் அவள் அருகில் வந்தார்கள்.

“என்னா நடை வண்டி …உனக்கு ஏன் இந்த ஆசை எல்லாம்… நாங்க எழுதி பரிசு வாங்கிடுவோம். நீ எதை எழுதுவ…ஆசையை பாரு” என்று கிண்டல் செய்துவிட்டு சிரித்தபடி உள்ளே சென்றார்கள்.

                சோகமாகவும் கவலையாகவும் உட்கார்ந்திருந்தாள் அகிலா. அவள் முன் இருந்த செடிகளில் அழகழகான பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருப்பது ஆறுதலாக இருந்தது. ஒரு சின்ன குருவிகூடு அந்த மரத்தில் இருந்தது. அதில் இருந்து பறக்க ஆசைப்பட்ட குட்டிக்குருவி தவறி விழுந்துவிட்டது . பதறி அகிலா எழுந்திருக்க, அந்த குருவி தட்டுத்தடுமாறி தத்தித்தத்தி நடந்து சிறகை விரித்து பறக்க முயற்சித்தது. சிறிது முயற்சிக்குப்பின் சட்டென்று மேலே எழுந்து பறந்துபோனது.

                அகிலா தேர்வறையில் அரைமணி நேரம் ஒன்றும் எழுதாமல் விழித்துக்கொண்டு இருந்தாள். டீச்சர் முறைப்பதை பார்த்து, சட்டென்று தான் அன்று காலை முதல் பார்த்தவற்றை குருவி பறப்பது வரை படபடவென்று எழுதி எல்லோருக்கும் முன் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டாள்.

                இரண்டு மாதம் கழித்து முடிவுகள் வந்தபோது நம்பவே முடியவில்லை. அகிலா முதல் பரிசு வாங்கியிருந்தாள்.  மதியம் நடந்த பாராட்டு கூட்டத்தில் இந்திய அளவில் இதை தேர்ந்தெடுத்த குறிப்புகளை சொன்னார்கள்.

“இயற்கையை நேசிக்கும் எழுத்து. தான் கண்டவற்றை எந்த பாசாங்கும், செயற்கையும் இல்லாமல் உண்மையாக எழுதப்பட்டிருக்கிறது. எழுதும் திறமை இயற்கையாகவே இந்த பெண்ணுக்கு அதிகம் உள்ளது. வாழ்த்துக்கள்”

நண்பர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அகிலாவை பாராட்டி மகிழ்ந்தார்கள்.

What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments