ஒரு அடர்ந்த காட்டில் நிறைய மரங்களுக்கு நடுவுல ஒரு சின்ன செடி முளைச்சு வந்ததாம்.

அந்த சின்ன செடிய பார்த்து எல்லா பெரிய மரங்களும் கிண்டல் செஞ்சு சிரிச்சதாம்.

“நீ ஒரு குட்டி செடி. உன்னால எங்கள போல வளர முடியாது. வர்ற சூரிய ஒளி எல்லாத்தயும் நாங்களே எடுத்துப்போம். உனக்கு முளைக்க வேற இடமே கிடைக்கலையா” அப்படின்னு கிண்டல் செஞ்சிச்சாம்.

அந்த சின்னச் செடி சூரிய ஒளி கிடைக்காம அப்பப்போ வாடிப் போயிடுமாம். அப்பறம் எப்பவாவது மழை பெஞ்சா திரும்ப தளிர்விட்டு வளருமாம்.

சுத்தி இருக்கற பெரிய மரங்கள் எவ்வளவோ கேலி, கிண்டல் எல்லாம் செஞ்சதாம்.

ஆனா, அந்த சின்ன செடி துவண்டு போகாம திரும்ப திரும்ப முயற்சி செஞ்சிட்டே இருந்ததாம்.

‘சூரிய ஒளி நம்மகிட்ட வரலைன்னா என்ன? நாம அதுக்கிட்ட போகலாம்’ அப்டின்னு சூரிய ஒளி வரும் திசைய பார்த்து வளர முயற்சி செஞ்சதாம்.

அந்தச் செடியோட முயற்சியால அது கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துக்கிட்டே இருந்ததாம்.

சுற்றி இருக்கற மரங்கள் அப்பவும் கேலி செய்றதை நிறுத்தவே இல்லை.

“நீ கொஞ்சமா வளந்திருந்தாலும் உன்னால எங்க அளவுக்கு உயரமா வளர முடியாது. நீ எப்பவும் தோத்துக்கிட்டே இருக்க. நீ ஒரு looser” அப்டின்னு கேலி கிண்டல் செஞ்சதுங்க.

அப்பல்லாம் அந்த குட்டி செடி ரொம்ப துவண்டு போகுமாம். ‘நாம கண்டிப்பா இங்க வளரனுமா?’ அப்டின்னு ரொம்ப யோசிக்குமாம்.

தண்ணீர உறிஞ்சாம பட்டினி கிடக்கும். தன்னால வளர முடியலையேன்னு ரொம்ப அழுகையா வருமாம் சின்ன செடிக்கு.

ஆனா, மழை பெய்றப்பலாம், அந்த மழை, “குட்டி செடியே, நான் இருக்கேன் உனக்கு உதவி செய்ய.. சீக்கிரமா வளரு. உன்னால முடியும்” அப்டின்னு சொல்லுமாம்.

மழை வந்தா நம்ம குட்டிச் செடிக்கு நிறய உத்வேகம் வருமாம். இப்டியே மாறி மாறி நம்பிக்கையும் அவ நம்பிக்கையும் போட்டி போட அந்த குட்டி செடி பெரிய மரமாக மாற பல வருசங்கள் ஆனது.

அந்த செடி, அதை கிண்டல் செஞ்ச மரங்களை விடவும் பெருசா வளரனும்னு மனசுல நினச்சிக்கிட்டே அதுக்காக கடுமையா போராடிச்சு.

அதனால, அந்தக் காட்டிலேயே மிக உயரமான மரமா வளந்துடுச்சி. அது பல உயிரினங்களுக்கு வாழிடமாவும், உணவு தரும் அன்னையாகவும்  மாறிடுச்சு.

அதனோட கிளைகளால பல பறவைகள் கூடு கட்டி வாழ்ந்தது. மரப் பொந்துகள்ல பாம்புகளும், கிளிகளும் வசிச்சதாம்.

அதோட பூக்கள்ல தேனீக்கள் தேன் எடுத்து உண்டன. காய்களை அணில்கள் கொத்தித் தின்றன. பழங்கள் பறவைகள், குரங்குகளுக்கு உணவாச்சுதாம்.

பல உயிர்களோட வாழ்வும் அந்த மரத்தோட பிணைஞ்சு இருந்ததாம். அதனால உதவாக்கரை, looser அப்டின்னு சொல்லப்பட்ட மரம் பல ஜீவன்களுக்கும் ஜீவநாடியாச்சு.

இப்படியே, அந்தக் காட்டுக்கே ராஜாவா பல நூறு வருடங்கள் வாழ்ந்து, பல்லாயிரம் உயிர்களுக்கு பயன் கொடுத்துச்சாம் அந்த மரம்.

ஒரு நாள், திடீர்னு விழுந்த இடியில அந்த மரத்துல மின்னல் தாக்கி மரம் கீழ சாய்ஞ்சிடுச்சி.

lightning

கீழே விழுந்தாலும், மனம் தளராத அந்த மரம் மீண்டும் எழுந்து வர முயற்சி செஞ்சதாம்.

ஆனா, அந்த மரத்தால எழ முடியலை. அதனால அதை சுத்தி இருந்த மற்ற மரங்களெல்லாம் திரும்பவும் அந்த மரத்தை கிண்டல் செஞ்சு அதை துன்புறுத்த நினைச்சதுங்களாம்.

ஆனா, அந்தப் பெரிய மரம் இதுக்கெல்லாம் கவலைப்படவே இல்லையாம்.

கீழே விழுந்து பட்டுப்போன பின்னாடியும் மழை பெய்யும் போதெல்லாம் அந்த மழை அதை எழுந்து வா எழுந்து வா என்று கூப்பிட்டுற மாதிரியே இருந்ததாம் அந்தப் பெரிய மரத்துக்கு.

அந்தப் பெரிய மரம், மீண்டும் துளிர்க்க ஆசைப்பட்டது. மீண்டும் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானது. ஆனால் அந்தப் பெரிய மரம் கொஞ்சம் கூட முயற்சியைக் கைவிடவே இல்லை. அதனால, அந்தப் பெரிய மரத்தில் இருந்து நிறைய சின்னச் சின்னச் செடிகள் துளிர் விட்டதாம்.

அவையெல்லாம் அந்த மரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து எல்லாமே மிகப்பெரிய மரங்கள் ஆயிடுச்சு. அந்த பெரிய மரம் கீழே விழுந்தாலும், அதோட உயிரே போனாலும் கூட அது விட்டுக் கொடுக்கவே இல்லை.

 மீண்டும் தன்னுடைய உடலில் இருந்து புதிதாக ஒரு செடியை உருவாக்கி அந்தச் செடிகளும் மரமாக வளர்ந்து நின்னுச்சாம்.

அந்தப் பெரிய மரத்தோட விடாமுயற்சியையும் அதோட வெற்றியையும் பார்த்து அந்தக் காடே ஆச்சர்ய்ப்பட்டுச்சாம்.

ஆமா, யாரு அந்த மரம்?

ஹே, நம்ம ஷிவானி.. அவ தான் தன்னோட கனவுல கடுமையா போராடி மரமா மாறிட்டா.

ஷிவானி போன தடவை, தன்னோட பரிட்சைல கம்மியா மார்க் வாங்கினா இல்லியா?

அதை எப்படியோ சமாளிச்சிட்டா. அதுக்கப்பறம் வந்த கனவினால, ஷிவானி விடாமுயற்சி செஞ்சும் அவளால நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியல.

மீண்டும் துவண்டு போய்ட்டா ஷிவானி. ஒரே ஒரு முயற்சியில வெற்றி கிடைச்சிடுமா என்ன? திரும்ப திரும்ப முயற்சி செஞ்சா விஷ்வரூப வெற்றி கிடைக்கலாம் இல்லையா?

அதனால தான் இப்படி ஒரு கனவு வந்திருக்கு ஷிவானிக்கு. சின்ன செடியா, பெரிய மரமா எல்லாம் மாறி அதோட கஷ்டத்த உணர்ந்ததால, ஷிவானி இனிமே விடாமுயற்சியோட, தோல்விகள்ல கலங்காம, வெற்றிபெற முயற்சி செஞ்சிட்டே இருப்பா பட்டூஸ்.

நீங்களும், விடாமுயற்சியோட தோல்விகளை கண்டு கலங்காம முன்னேற முயற்சி செய்வீங்க தானே செல்லம்ஸ்?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments