அழகான கிராமம் ஒன்று இருந்தது, அங்கே கவின் எனும் ஏழு வயது சிறுவன் வாழ்ந்து வந்தான்.

அவன் வீட்டின் அருகே பள்ளிக்கூடம் இருப்பதால், தினமும் பள்ளிக்கூடத்துக்கு நடந்து தான் போவான்.

அந்தப் பள்ளிக்கூடத்தின் வாசலில் தின்பண்டங்கள் விற்கும் சின்னச் சின்னக் கடைகள் நிறைய உண்டு. அதில் பலாச்சுளை விற்கும் பாட்டியும் ஒருவர்.

palachulai
படம் : அப்புசிவா

பாட்டிக்கு மிகவும் வயதாகி விட்டதால் முதுகு கூனாகி, பல் விழுந்து, வெள்ளை முடியுடன் பார்க்க சூனியக்காரி போலவே இருப்பார்.

அவரைப் பார்த்தாலே கவினுக்கு ரொம்ப பயம்.. ஆதலால் அவன் அவர் கடையைத் தாண்டிச் செல்லவே பயப்படுவான்.

தூரத்திலிருந்து அவர் வேறு பக்கம் திரும்பும் நேரத்திற்காகக் காத்திருந்து, பாட்டி திரும்பியதும் தலையைக் குனிந்து கொண்டு ஓடி விடுவான்.

பாட்டியும் நெடுநாட்களாக இதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.

அவனிடம் பாசமாக பழக விரும்பி, பாட்டி பலாச்சுளையை நீட்டினாலும் வாங்கவே மாட்டான்.

சின்ன பிள்ளை தானே என்று பாட்டியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு கவின் தன் வகுப்பு நண்பர்களோடு, பள்ளிக்கூடத்தின் பின்பக்க மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

தண்ணீர் குடிக்காமல் ரொம்ப நேரம் ஓடிப்பிடித்து விளையாடியதால் கவினுக்கு திடீரென தலை சுற்றியது.

தனக்கு பக்கத்தில் இருந்த மரத்தினைப் பிடித்து நின்றவன், அப்படியே மயக்கம் போட்டு மரத்தடியில் சரிந்து விழுந்தான்.

கவின் மயங்கியது தெரியாத நண்பர்கள், அவன் வீட்டுக்குப் போய்விட்டான் என்று நினைத்துக் கொண்டனர்.

நேரம் ஆக ஆக, எஞ்சி இருந்த மாணவர்கள், கடைக்காரர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரும் வீட்டைத் தேடிச் சென்று விட்டார்கள்.

ஆனால் பலாச்சுளை விற்கும் பாட்டி மட்டும் இன்னும் போகாமல் அங்கேயே அமர்ந்திருந்தார்.

ஸ்கூல் வாட்ச்மேன், “ஏன் பாட்டி, பசங்க எல்லாரும் வீட்டுக்குப் போயாச்சு, இன்னும் எதுக்காகக் கடையைத் திறந்து வச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்கீங்க?” என்று நக்கலாகக் கேள்வி கேட்டார்.

பாட்டி, “கவின் வெளிய வர வேண்டி இருக்கேப்பா, அவன் வந்துட்டா நான் கிளம்பிப் போயிடுவேன்” என்றார்.

“அவன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அப்பவே போய்ட்டாங்க, அவன் மட்டும் உள்ள இருக்க போறானா? நீங்க பார்க்காத நேரம் வெளியில போய் இருப்பான், நீங்களும் வீட்டுக்கு நேரத்தோட போய் சேருங்க” என்றார் வாட்ச்மேன்.

பாட்டி உறுதியான குரலில், “கிடையவே கிடையாது.. அவன் தினமும் உள்ள வரும்போதும் வெளியே போகும்போதும் என்னை ஒரு பார்வை பார்த்துட்டுதான் போவான். எனக்கு நிச்சயமா தெரியும் கவின் உள்ளதான் இருக்கான்” என்றார்.

வாட்ச்மேன், “அப்ப நீங்களே உள்ளே போய்த் தேடி பாருங்க” என்று சொல்லிவிட்டு நக்கலாகச் சிரித்தார்.

ஆனால் பாட்டியோ, தன் கம்பை எடுத்துக்கொண்டு கூன் விழுந்த முதுகோடு உள்ளே போய் ஒவ்வொரு வகுப்பாகத் தேட ஆரம்பித்து விட்டார்.

கடைசியில் ஒரு மரத்தடியில் கவின் மயங்கி விழுந்து கிடப்பதைக் கண்டவர் வாட்ச்மேனை அழைத்து அவன் மயக்கத்தைத் தெளிவித்தார்.

இதற்குள் கவினின் அப்பா அம்மா இருவரும் அவனைக் காணாமல் பள்ளிக்கூடத்திற்குத் தேடி வந்து விட்டனர்.

வாட்ச்மேன் அவர்களிடம், “இந்தப் பாட்டிதான் உங்க பையன் இன்னுமும் ஸ்கூல விட்டு வெளிய வரலைனு சொல்லி, அவனை தேடிக் கண்டு பிடிச்சாங்க” என்றார்.

கவினின் அம்மாவும் அப்பாவும் அந்தப் பாட்டிக்குக் கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள்.

கவின் பாட்டியிடம், “ஏன் பாட்டி, நான் தினமும் உங்களைப் பாத்து பயந்து ஓடுவேன். நீங்க கூப்பிட்டா கூட நிக்கவே மாட்டேன், அப்புறம் ஏன் என்ன நீங்க காப்பாத்துனீங்க?” என்றான்.

பாட்டி சிரித்துக்கொண்டே, “நான் விக்கிற பலாப்பழம் மாதிரிதான் நானும் இருப்பேன் கண்ணு. வெளியில முள்ளா இருந்தாலும் உள்ளே ருசியான சுளை இருக்கும்.

அதே மாதிரி என் உருவம் உன்னை பயமுறுத்துற மாதிரி இருந்தாலும், எனக்குள்ள எப்பவும் உன் மேல அன்பு உண்டு” என்றார்.

கவின் பாட்டியை அன்போடு கட்டிப் பிடித்துக் கொண்டு, “இனிமே நான் உங்களைப் பார்த்து பயப்பட மாட்டேன், தினமும் பலாச்சுளை வாங்கி சாப்பிடுவேன்” என்றான்.

பாட்டி, “அது மட்டும் போதாது கண்ணு, எதிர்காலத்தில நீ எப்பவும் யாரையும் உருவத்தால எடை போடக் கூடாது. புரியுதா?” என்றார். கவின் சந்தோஷமாகத் தலையாட்டினான்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments