“நாங்க காட்டுக்குப் போறோம்

காட்டுக்குப் போறோம்

சுத்திப் பார்க்கப் போறோம்

எங்களோட சேர்ந்து நீங்க

யாரெல்லாம் வரீங்க!”, என்று சூச்சூ டிவியின் பாட்டு டிவியில் ஓடிக் கொண்டிருக்க, எப்போதும் அதோடு சேர்ந்து பாடிக் கொண்டிருக்கும் எட்டு வயது மித்ரன் அமைதியாகக் கையைக் கட்டிக் கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்தான்.

வேலை முடிந்து வீட்டை அடைந்த டாக்டர். தீபக், மகனின் முகம் வாடியிருப்பதைக் கண்டு கொண்டு அவசரமாக தன் காலணிகள் மற்றும் காலுறைகளைக் களைந்து, வீட்டிற்குள் வந்தான்.

கண்ணை டிவியிலும், கவனத்தை வேறெங்கோவும் வைத்த படி அமர்ந்திருக்கும் தன் மகனைப் பார்த்து, “மித்ரா என்னாச்சு! டல்லா இருக்க!”, என்று கேட்டபடி குளியலறைக்குச் சென்று, முகம், கை, கால் கழுவிக் கொண்டு வெளியே வந்தவனிடம், துடைக்கத் துண்டினைக் கொடுத்தாள் அவன் மனைவி ரேகா.

“என்னாச்சு ரேகா? ஏன் நம்ம மித்து சோகமா இருக்கான். நீ ஏதாவது திட்டுனியா? இல்ல அடிச்சியா?”, என்று கேட்டுக் கொண்டே ரேகா தந்த காபியை வாங்கிக் கொண்டான்.

“நம்ம மித்து ரொம்ப நல்ல பையனாச்சே, நான் எதுக்கு அவனைத் திட்ட, அடிக்கப் போறேன். அவன் ஸ்கூலேர்ந்து வந்ததுலேர்ந்து இப்படித்தான் இருக்கான். நான் எவ்வளவோ கேட்டுட்டேன், பதிலே சொல்லாம உக்காந்திருக்கான்‌. நீங்க வேணா பேசிப் பாருங்க, அவன் உங்ககிட்ட தான் எல்லாத்தையும் சொல்லுவான். நான் போய் நைட்டுக்கு சமைக்கிறேன்”, என்று உள்ளே சென்றுவிட்டாள் ரேகா.

ஒரு கையை காபி டம்ளருக்கு கொடுத்து, மறு கையை மித்ரனின் தோளில் போட்ட தீபக், “என்னாச்சு லிட்டில் சேம்ப், ஏன் சோகம்? உடம்பு சரியில்லியா?”, என்று வாஞ்சையுடன் கேட்டான்.

எப்போதும் அப்பாவிடம் குதூகலிக்கும், மித்ரன் அப்போது அசையாது பார்வையை தொலைக்காட்சியில் பதித்திருந்தான்.

“என்ன கண்ணா ஆச்சு? ஏதாவது சொன்னால் தானே தெரியும். நீ இப்படியே உம்முன்னு இருந்தா, அப்புறம் நானும், அம்மாவும் ரொம்ப ஃபீல் பண்ணுவோம்”, என்ற தீபக்கின் குரல் கேட்டதும், சட்டென்று திரும்பி தன் தந்தையைப் பார்த்தான் மித்ரன்.

“என்னப்பா சொல்லு?”, என்றதும் “அப்பா நீங்க யாரு?” என்ற கேள்வி கேட்டான்.

“என்னடா இது, அப்பான்னு கூப்பிட்டுட்டு நீங்க யாருன்னு கேக்குற?”.

“இல்லப்பா, நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?”.

“ஏன்டா உனக்குத் தெரியாதா? நான் வெட்டினரி டாக்டர்னு”.

“இல்லப்பா, நீங்க மிருக டாக்டராம், மாட்டு டாக்டராம்‌. உங்க பெயர் மிருகமாம், மாடாம், தீபக் இல்லையாம்!”, என்று சொல்லி விட்டு ஓ வென்று அழுதான் மித்ரன்.

மித்ரனின் கூட்டாளிகளால் வந்த வினை இது என எளிதில் புரிந்து கொண்ட தீபக், “ஆமாம்பா நான் மாட்டுக்கு வைத்தியம் பாக்குற டாக்டர், மிருகத்துக்கு வைத்தியம் பாக்குற டாக்டர், ஆனா என் பெயர் தீபக் தானே. யாரு உன்ன கன்ஃப்யூஸ் செஞ்சது?”, என பேசிக் கொண்டே மித்ரனின் தலையை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

அப்பாவின் இதயத்தில் இருந்து கேட்ட லப்டப் சத்தம் சற்றே அவனை ஆசுவாசப்படுத்த, “இன்னிக்கு என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் உங்களை ரொம்ப கிண்டல் செஞ்சாங்கப்பா!”.

“அதுக்கு நீ என்ன செஞ்ச?”.

“நான் அவங்க கூட சண்டை போட்டேன். அதுலயும் இந்த செல்வம் உங்களைத் திரும்பத் திரும்ப, மாட்டு டாக்டர் மாடு, மாட்டு டாக்டர் மாடுன்னு கிண்டல் செஞ்சானா, எனக்குக் கோபம் தாங்கல, அதுனால கோபத்துல அவனைக் கீழ தள்ளி விட்டுட்டேன்”.

“ஐயோ பாவம் அந்த செல்வம், வாய் சண்டையை கை சண்டை ஆக்கிட்டியே மித்து!”, என்று லேசாக கண்டிக்கும் தொனியில் கூறிய தீபக், மகனிடம் இருந்து மீதம் உள்ள கதையை வரவழைக்க மீண்டும் மென்மையாய்ப் பேசத் தொடங்கினான்.

“அப்புறம் என்ன ஆச்சு? அவனுக்கு அடி ஏதாவது பட்டுச்சா?”

“இல்ல இல்லப்பா, அவன் நல்லாத்தான் இருந்தான். ஆனா…”, என்று கூறி தலை குனிந்து கொண்டான் மித்ரன்.

எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறு என்பது போல், தீபக் அவன்‌ தலையைக் கோத, “ஆனா நான் செல்வத்தைக் கீழ தள்ளி விடுறதைப் பிரின்ஸிபல் பார்த்துட்டாங்கப்பா! நாளைக்கு உங்களையும், அம்மாவையும் ஸ்கூலுக்குக் கூட்டீட்டு வரச் சொன்னாங்க”, என்று கூறி கேவிக் கேவி அழத் தொடங்கினான்.

“அதுக்கென்னப்பா நாளைக்கு நானும், அம்மாவும் ஸ்கூலுக்கு வரோம், நீ அழாத. செல்வத்துக்கு கிட்ட சாரி கேட்டுடு அப்படியே பிரின்ஸிபல் கிட்டயும் இனிமே இப்படி செய்யமாட்டேன்னு சொல்லிடு. ப்ராப்ளம் சால்வ்டு”, என்று மகனின் கண்ணீரைத் துடைத்தான்.

“இல்லப்பா! ஹூ டிட் தி ஃபர்ஸ்ட் மிஸ்டேக்? செல்வம் தானே அப்ப அவனோட அப்பா அம்மா தானே நாளைக்கு பிரின்ஸிபலைப் பார்க்க வரணும். அவன் தானே முதல்ல சாரி கேக்கணும்”, என்று தர்க்கம் செய்யும் மகனை, என்ன சொல்லித் தேற்றுவது எனத் தெரியாமல் தீபக் விழி பிதுங்கிய வேளையில், “ஐயா!” என்று அலறியபடி ஒருவர் ஓடி வந்தார்.

“டாக்டர் ஐயா! என் பேரு காளியப்பனுங்க, நம்ம மேட்டுத் தெரு கதிரவன்‌ சார் வீட்டுப் பசு, கன்னு போடத் தவியா தவிக்குதுங்க!”, என அவர் பதறிக் கொண்டிருக்கையிலேயே, வரவேற்பறையின் நாற்காலியில் இருந்த தனது டிஷர்ட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு, முதலுதவி பெட்டியைத் தயார் செய்திருந்தான் தீபக்.

“ஐயா எதுல வந்தீங்க?”.

“பாதித் தொலவு நடந்தே ஓடியாந்தேன் டாக்டர், அதுக்குப் பொறவு வழியில பாத்த தம்பி பைக்ல ஏத்திட்டு வந்து விட்டுச்சுங்க. நீங்க முன்ன போய் லக்ஷ்மியைக் கவனிங்க, நான் பின்னாடியே ஓடியாரேன்”, எனக் கண்ணீர் வழிந்த கண்களைத் துடைத்துக் கொண்டார் காளி.

“எல்லாரும் ஒரே இடத்துக்குத் தானே போறோம். வாங்க என் வண்டியிலேயே போவோம்”, என்றவன் அவரின் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்த ரேகாவிடம், போய் வருகிறேன் என்பது போல் தலையசைக்க, அவள் உள்ளே ஓடிச்சென்று ஒரு சிறிய மஞ்சள் பை ஒன்றை எடுத்து வந்து தந்தாள்.

வந்தவருடன் கிளம்புகையில், சட்டென ஏதோ யோசித்தவனாக, “மித்து நீயும் என்னோட வரியா?”, என்று கேட்க, சோர்ந்திருந்த கண்கள் இரண்டும் ஜொலிஜொலிக்க தலையாட்டினான் மித்ரன்.

என்றுமே தான்‌ வேலை செய்யும் இடத்திற்கு மகனை அழைத்துச் செல்லாத கணவன்‌, இன்று ஏதோ ஒரு காரணத்தோடு தான்‌ அழைத்துச் செல்கிறான் என்பதால் ரேகாவும் பத்திரம் என்று கண்களாலேயே இருவருக்கும் விடை கொடுத்தாள்.

“லக்ஷ்மி பாவங்கய்யா! சின்ன வலி கூட தாங்கமாட்டா! போன முறை எந்தச் சிக்கலும் இல்லாத பிரசவத்துக்கே துடிச்சுப் போயிட்டா, குளிக்க வைக்கும் போது கூட வைக்கோலை வெச்சு அழுத்தமா துடைச்சா வலிக்குதுன்னு சிணுங்குவா, பால் கறக்கும் போது பாத்து பதவிசாத் தான் கறக்கணும்” எனத் தான் பராமரிக்கும் மாட்டின் வேதனையை நினைத்து புலம்பிக் கொண்டே வந்தார் காளியப்பன்.

மித்ரனுக்கு அனைத்தும் வித்தியாசமாக இருந்தது. முக்கியமாக அந்த லக்ஷ்மி என்கிற பெயரை உடைய பசுவின் சுபாவம் விசித்திரமாக இருந்தது. அதைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. ‘அது எப்படி வலிக்குதுன்னு சொல்லும்’, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

இவன் வீட்டில் இருந்து லக்ஷ்மியின் வீட்டை அடைய சரியாகப் பதினைந்து நிமிடங்கள் பிடித்தது.

“சார் வந்துட்டீங்களா! வாங்க வாங்க!”, என வாயிலிலேயே காத்துக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் கதிரவன் வந்து, தீபக்கின் கையை வாஞ்சையுடன் பற்றியபடி வீட்டிற்குள்ளே அழைத்துச் சென்றார்.

தன் அப்பாவின் கையைப் பற்றிக் கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்தபடி ஒரு விதக் குறுகுறுப்போடு வீட்டின் உள்ளே சென்றான் மித்ரன்.

வீட்டிற்குள் சென்றதும் வரவேற்பறையில் அமராமல், நேராகக் கொல்லைப்புறம் செல்லும் தந்தையைப் பின் தொடர்ந்தவனின் காதுகளில், “டாக்டர் ஐயா வந்தாச்சு? இனி நம்ம லட்சுமிக்கு ஒண்ணியும் ஆவாது”, என்று பேசும் காளியப்பனின் குரல் காதில் விழுந்தது.

“ம்ம்மா, ம்ம்மா!”, என்கிற வலியில் அலறுவது போல் இருந்த மாட்டின் ஒலியும், அதைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்த ஐந்தாறு மனிதர்களின் சலசலவென்ற சத்தமும், மித்ரனுக்குச் சற்றே அச்சத்தை ஏற்படுத்த, சட்டென்று முன்னேறிச் செல்லும் தன் தந்தையின் கையை விடுவித்தான்.

மித்ரனின் செய்கையைப் புரிந்து கொண்ட தீபக், “மித்து பயமா இருந்தா நீ உள்ள போய் உக்காந்துக்கோ, இல்லைன்னா இப்படியே கதவுக்குப் பின்னாடி நின்னு பாரு”, என்று சொல்லிவிட்டு லக்ஷ்மியை நோக்கி விரைந்தான்.

“சுடு தண்ணி எடுத்துட்டு வாங்க, சுத்தமான காட்டன் துணி எடுத்துட்டு வாங்க, சீக்கிரம்”, என்று கட்டளையோடு உயர்ந்து கொண்டே சென்ற தந்தையின் குரலை கவனித்தவன், பசு மாட்டின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக முனகலாக மாறி, முற்றிலும் நின்று போனதையும் கவனித்தான்.

superman doctor
படம்: அப்புசிவா

“அய்யோ லட்சுமி! கொஞ்சம் பொறுத்துக்கோ!” என்கிற குரல்களுக்கு இடையே, “ஐயா, நீங்க தெய்வமுங்க லட்சுமி அடியே லட்சுமி உன்னை மாதிரியே ஒருத்தி வந்து பொறந்திருக்கா, கண்ணைத் தொறந்து பாரு!”, எனக் குதூகலத்தில் காளியப்பன் கத்துவது கேட்க அதுவரை அழுந்த மூடியிருந்த கண்களை மெல்லத் திறந்து பார்த்தான் மித்ரன்.

பசுவைச் சுற்றிலும் உள்ள கூட்டம் விலகியிருக்க, கருகருவென பளபளப்பாய் லக்ஷ்மியும் அவளுக்கு அருகே அதே போல் சிறிய உருவம் கொண்ட கன்றுக்குட்டியையும் கண்டான்.

காளியப்பன் லக்ஷ்மியின் முன் நெற்றியைத் தடவிக் கொடுத்தபடி இருக்க, தன் தந்தை கன்றுக்குட்டியைப் பரிசோதனை செய்து விட்டு லக்ஷ்மியின் அருகே விடுவது தெரிந்தது. லக்ஷ்மி மெதுவாகத் தன் கன்றை நாவால் நக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தது.

சுற்றியுள்ளவர்கள் அனைவரும் பயபக்தியோடு கை கட்டிக் கொண்டு நிற்பதைக் கண்டு பெருமிதம் கொண்டான்.

கன்றுக்குட்டியை காளியப்பன் மேற்பார்வையில் விட்டவன், அருகிலிருந்த தண்ணீர் பைப்பில் கைகால்களை கழுவிக் கொண்டு, “சார் இந்த மருந்தை இன்னும் மூணு நாளைக்கு, காலையும் இரவும் லக்ஷ்மிக்கு குடுங்க, அப்ப நான் வரேங்க!”, என்று மித்ரனிடம் தலையசைத்து போகலாம் எனத் தெரிவித்தான்.

“அப்பா, அம்மா குடுத்து விட்ட மஞ்சப்பை!”, என்று மித்ரன் தன் கையில் இருந்த மஞ்சள் துணிப்பையைக் காட்ட, “அட ஆமாம்ல மறந்தே போயிட்டேன் பாரு, எங்கூட வா!”, என மித்ரனின் கையைப் பிடித்து மெதுவாக லக்ஷ்மியின் அருகே அழைத்துச் சென்றான்.

லக்ஷ்மி தன் தலையால் மெதுவாக முட்டி முட்டிக் கன்றை எழுந்து நிற்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

“அப்பா, பயமா இருக்குப்பா!”, எனக் கையைத் தன் தந்தையின் கையிலிருந்து உருவ முயற்சித்தவனிடம், “நான் இருக்கேன்ல மித்து, லக்ஷ்மி ஒண்ணும் செய்யமாட்டா!”, என சமாதானம் செய்தான்.

மஞ்சள் பையில் இருந்த இரண்டு நெட்டி மாலைகளை எடுத்தவன், பெரிதாய் இருந்ததை எடுத்து லக்ஷ்மியின் கழுத்தில் போட்டுவிட்டு, சிறியதை மித்ரனின் கைகளில் தந்து, “இந்தா, இதை அந்த கன்னுக்குட்டிக்குப் போட்டு விடு”, என்றான்.

“அப்பா பயமா இருக்குப்பா!”, என மென்குரலில் பயந்தபடி சொன்ன மித்ரனுக்குப் பசுவைப் பார்த்து பயமாய் இருந்தாலும், கன்றுக்குட்டியைத் தொட்டுத் தடவி பார்க்க வேண்டும் என்கிற ஆவல் இருந்தது.

“தம்பி தஹிரியமா (தைரியமா) வாங்க, லட்சுமி மவ ஒண்ணியும் செய்யமாட்டா!”, எனக் காளியப்பன் கன்றின் தலையைச் சற்றே உயர்த்த டபக்கென்று மாலையை அதன் கழுத்தில் போட்டவன், அதன் நெற்றியில் இருந்த மென்மையான கருப்பு ரோமத்தை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் வருடிவிட்டுக் கையை எடுத்தான்.

“தம்பி அப்படியே நம்ம புது பாப்பாவுக்கு ஒரு பேரு வெச்சுடுங்க, என்னங்கய்யா நான் சொல்லுறது சரிதானுங்களே!”, எனத் தன் தாய் அசையோடு வளர்த்து விட்டுச் சென்ற லக்ஷ்மி, பெண் கன்று போட்டதின் பெருமிதத்தில் இருந்த கதிரவன், “ஆமாம் தம்பி நீயே ஒரு பேரை வையேன்!”, என்றார்.

—– தொடரும் —–

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments