வானத்துல ஒரு நாள் ஒரு குட்டி வானவில்லும் ஒரு குட்டி ஏரோப்ளேனும் சந்திச்சாங்க.

அப்ப அந்த ஏரோப்ளேன், “நாம ரெண்டு பேரும் நண்பர்களா இருக்கலாமா?” னு வானவில்கிட்ட கேட்டுச்சு.

குட்டி வானவில்லும் சரினு சொல்லிடுச்சு.

வானவில்லும் ஏரோப்ளேனும் வானம் முழுக்க சுத்தி சுத்தி பூமிய பார்த்து ஓடிப் பிடிச்சு விளையாடுனாங்க.

ரொம்ப நேரம் விளையாடினதுக்கு அப்பறம் இருட்டிருச்சு. அப்ப வானவில், “சரி நண்பா, நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு” னு சொல்லுச்சு.

அப்ப ஏரோப்ளேன் என்னை விட்டு போகாதனு அழ ஆரம்பிச்சுடுச்சு.

minukku
படம்: அப்புசிவா

உடனே வானவில், “அழாத நண்பா, நான் நாளைக்கு கண்டிப்பா உன் கூட விளையாட வருவேன்” அப்டின்னு சொல்லுச்சு.

“இல்ல நீ என் கூடவே இரு என்ன விட்டு போகாத”னு அழுதுச்சாம் குட்டி ஏரோப்ளேன்.

” சரி அழாத! நான் வேணும்னா உனக்கு என் நிறங்கள்ள இருந்து ஒன்ன குடுக்குறேன். நீ அதை பத்திரமா வச்சிரு. நான் நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன்”
அப்டின்னு சொன்ன வானவில் மஞ்சள் நிறத்த எடுத்து ஏரோப்ளேன்கிட்ட குடுத்ததாம்.

ஏரோப்ளேனும் மஞ்சமஞ்சேர்னு தகதகனு மின்னிக்கிட்டே வானத்துல பறக்க ஆரம்பிச்சதாம்.

மஞ்சக்காட்டு மைனா என் மஞ்சள் கலரு தெரிதான்னு ராகம் போட்டு பாட்டு பாடிக்கிட்டே பறந்த ஏரோப்ளேன் ஒரு பெரிய மலை முகட்டுல மோதி பக்கத்தில இருந்த ஏரிக்குள்ள டமால்ல்ல்ல்னு விழுந்துடுச்சாம்.

ஏரிக்குள்ள இருந்த பாறைகளுக்குள்ள சிக்கிக்கிட்டதால ஏரோப்ளேனால வெளில வரவே முடியலை.

அய்யோ யாராவது என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்கனு அழுதுட்டே இருந்துச்சாம். ஆனா வானத்தில பறக்கற ஏரோப்ளேனோட மொழி யாருக்கும் புரியாததால அதை யாரும் கண்டுக்கவே இல்லயாம்.

மறுநாள் வானவில் வழக்கம் போல ஏரோபிளேன் ஓட விளையாடுறதுக்கு வந்துச்சு வானம் முழுக்க சுத்தி சுத்தி ஏரோபிளேன் தேடித்தான் ஆனா எங்கயுமே ஏரோபிளேன் இல்

அப்படி சுத்தி சுத்தி தேடிட்டு இருக்கும்போது அந்த வானவில்ல தாண்டி போன பறவைகள் ரெண்டு பேசிக்கிட்டு இருந்ததை வானவில் கேட்டுச்சு. ரொம்ப தூரத்தில் மலை முகட்டுக்கு பக்கத்துல இருக்குற ஏரி திடீர்னு மஞ்சள் நிறமா மாறிடுச்சாம்.
வா நாம அந்த ஏரிய போய் பாத்துட்டு வரலாம் அப்படின்னு ஒரு பறவை இன்னொரு பறவை கிட்ட சொல்லுச்சாம். இதைக் கேட்ட வானவில் உடனே அந்த ஏரிய தேடி போச்சாம்.

ஏரி எல்லாம் வானவில் கொடுத்த மஞ்சள் நிறத்தில் தகதகன்னு மின்னவும் வானவில்லுக்கு சந்தேகம் வந்துச்சு. தன்னோட நண்பனான ஏரோபிளேன் இந்த ஏரிக்குள்ள விழுந்திருக்குமோ என்று வானவில் ஏரிக்குள்ள இறங்கி பார்த்துச்சாம்.

ஏரோபிளேன் பாறை இடுக்குக்குள்ள சிக்கி இருக்கிறதை பார்த்த வானவில் அத காப்பாற்றி வெளியில கூட்டிட்டு வந்துச்சு.

“ரொம்ப நன்றி நண்பா. நானும் ரொம்ப பயந்துட்டேன். என்னை யாருமே காப்பாத்த வரல. ஆனா என்னைய மன்னிச்சிடு . உன்னோட மஞ்சள் நிறத்த என்னை பத்திரமா வச்சிருக்க சொன்ன.. ஆனா நான் இந்த ஏரியில் விழுந்ததுனால அந்த மஞ்சள் நிறம் எல்லாம் ஏரி கிட்ட போயிடுச்சு” அப்படின்னு குலுங்கி குலுங்கி அழுதுச்சாம் ஏரோப்ளேன்.

“சரி நண்பா அழாத, தெரியாம தானே விழுந்துட்ட? இனிமே நம்ம கவனமா இருக்கலாம். இந்த மஞ்சள் நிறத்தை பற்றி கவலைப்படாதே., இந்த ஏரி இந்த மஞ்சள் நிறத்தால ரொம்ப அழகா இருக்கு அது அப்படியே இருக்கட்டும். வா நாம் போய் விளையாடலாம்” அப்படின்னு வானவில் கூட்டுச்சாம்

நண்பர்கள் இருவரும் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா வானத்துல பறந்து போயிட்டாங்க.

அந்த ஏரிய எல்லாரும் மினுக்குனு கூப்ட ஆரம்பிச்சதுல ஏரிக்கும் மகிழ்ச்சி தானாம்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments