அன்று மலர் எல்லாருக்கும் முன்னதாகவே பூங்காவுக்கு வந்து விட்டாள்.

சிறிது நேரங் கழித்து கதிர், கயல், முத்து, வினோத் ஆகிய நால்வரும் ஒவ்வொருவராக வந்தனர்.

“இன்னிக்கு எல்லாருக்கும் முன்னாடி, மலர் வந்துடுவான்னு நெனைச்சேன்.  அது சரியாயிடுச்சி”. என்றான் முத்து.

“அப்பிடியென்ன விசேஷம் இன்னிக்கு?”  என்றான் பாபு.

“விலங்குகளைக் கொன்னு திங்கிற, டைனோசர் பத்தி, இந்த மாசம் சிட்டு சொல்றேன்னு சொன்னுச்சில்ல, அதைக் கேட்கிறதுக்காகத் தான்  முன்னாடியே வந்துட்டா?”

“ஓ! அதானா விஷயம்?” என்று சிரித்தான் பாபு. கயலுக்கும் சிரிப்பு வந்தது.

அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே, சிட்டு ஜிவ்வென்று, பறந்து வந்து, நேராகக் கதை சொல்லும், மேடையில் அமர்ந்தது.

“தோ சிட்டு! டான்னு, சரியான நேரத்துக்கு வந்துட்டுது நேரம் தவறாமையை நாம சிட்டுக்கிட்ட தான் கத்துக்கணும்” என்றான் வினோத்.

சிட்டுவைப் பார்த்த மலர் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி! 

“எல்லாம் சீக்கிரம் வந்து, ஒட்காருங்க.  சிட்டு கதை சொல்லப் போவுது” என்று அவசரப்படுத்தினாள்.

“என்ன பசங்களா? எல்லாரும் எப்பிடியிருக்கீங்க?”  என்றது, சிட்டு.

“ம். நல்லாயிருக்கோம்;  நீ நல்லாயிருக்கியா?” என்றாள் கயல்.

“ம். நல்லாயிருக்கேன்.  போன மாசம், எந்த இடத்துல விட்டேன்” என்று யோசித்தது, சிட்டு.

“செடி தின்ன டைனோசர் பத்திச் சொல்லிட்டே; மாமிசம் தின்ன டைனோசர் பத்திச் சொல்லணும்” என்றாள், அவசரமாக மலர்.

“ம் ‘ஊனுண்ணி’ன்னு சுருக்கமா, மாமிசம் திங்கிற வகையைச் சொல்லலாம்.  ஊன் என்றால், கறி, இறைச்சி.  திண்ணின்னா, திங்கிறது.  டைய்னானிக்கஸ் னு (DEINONYCHUS) ஒரு வகை. ரெண்டு காலாலேயும்,  இதால நிற்கவும், நடக்கவும் முடியும். இது பயங்கரமான இரைகொல்லி.. அரிவாள் மாதிரி, வளைஞ்ச கூரான நகத்தால மத்த டைனோசரைக் கொன்னு தின்னும்; இதுக்கு இறக்கை இருந்துருக்கு; ஆனாப் பறக்க முடியாது. வேகமா ஓடுறதுக்கு அது உதவி பண்ணியிருக்கலாம்னு அறிவியல் அறிஞர்கள் நினைக்கிறாங்க”.

“சரி. அதென்ன இரைகொல்லி?” என்றான் வினோத்.

“இரைன்னா உணவு.  ‘கொல்லி,’ன்னா கொல்றது.  உணவுக்காக மத்த உயிர்களைக் கொல்ற பறவை, விலங்கு, எல்லாமே  இரைகொல்லி தான்.  ஆங்கிலத்துல, இதை PREDATOR ன்னு சொல்லுவாங்க.  சிங்கம், புலி, ஓநாய், கழுகு, பருந்து, காக்கா  இதெல்லாமே, PREDATOR  தான்.

“ஓ.கே. இப்ப நல்லாப் புரியுது,” என்றான் வினோத்.

“இப்பத் தான் மலர் ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்த டைனோசர் வர்றார்! பராக், பராக் பராக்!”

“ஐய்!.  சொல்லு, சீக்கிரம் சொல்லு சிட்டு” என்றாள் மலர், உற்சாகத்துடன்.

Dinosaur 3
படம்: அஜ்ஜிராஜ்

“அதோட பேரு டைரனோசரஸ். (TYRANNOSAURUS)   இதை T.Rex ன்னு சுருக்கமாச் சொல்றாங்க. ஊனுண்ணி வகையில இது ரொம்பப் பெரிய டைனோசர். உடலோட நீளம், 12 மீட்டர்; உயரம் 6 மீட்டர். இதோட 1.5 மீட்டர் அளவுள்ள மண்டையோட்டுல, தாடையோட நீளம் மட்டுமே 1.2 மீட்டராம்!  அப்படீன்னா எவ்ளோ பெரிய வாய் இதுக்கு இருந்திருக்கும்னு, கற்பனை பண்ணிப் பாருங்க.  மத்த விலங்குகளைக் கொன்னும் தின்னுமாம்; வேற விலங்கு கொன்னுட்டுப் போட்டு வைச்சிருக்கிற மிச்சம் மீதியையும் தின்னுமாம்.

‘ஜூராசிக் பார்க்’, படம் பார்த்திருக்கீங்களா? அந்தப் படத்தோட, சூப்பர் ஸ்டார் இந்த டி-ரெக்ஸ் தான்.  அவங்க தப்பிச்சிப் போகும் போது அந்த ஜீப்பை துரத்திக்கிட்டே வருமே அது தான் இது”

“ஓ! நான் படம் பார்த்திருக்கேன்! எம்மாம் பெருசாயிருக்கும் அது!  பார்க்கவே பிரும்மாண்டமாயிருக்கும்!” என்றான் முத்து.

“அந்தப் படத்துல காட்டுற மாதிரி, அதால காரோட மேல் பாகத்தைச் சுலபமாப் பெயர்த்து எடுக்க முடியுமாம். அம்மாம் பெரிய டைனோசருக்கு முன்னாடி இருக்கிற ரெண்டு கை மட்டும் ரொம்பச் சின்னதுங்கிறது தான் ஆச்சரியமான விஷயம்”.

“இதுவரைக்கும் கண்டுபிடிச்சிருக்கிற டி.ரெக்ஸ் வகையில, எது ரொம்பப் பெரிசு சிட்டு?” இது கயல்.

“கனடாவுல 2019 ஆம் ஆண்டு, ரொம்பப் பெரிய புதைவடிவம் ஒன்னு கிடைச்சிருக்குது. அதுக்கு‘ஸ்காட்டி’ன்னு பேரு வைச்சிருக்காங்க. அதோட எடை 8800 கிலோ”

“அப்படீன்னா, நம்ம யானையோட எடை இருக்குமா?”

“வினோத்! நம்ம ஆசிய யானையோட சராசரி எடை 4000 கிலோ தான். அப்ப அது மாதிரி, ரெண்டு மடங்கு இருக்கும்.  சரியா?”

“அந்தப் படத்துக்கு, ‘ஜூராசிக் பார்க்’ குன்னு ஏன் பேரு வைச்சாங்க? அதுக்கும், டைனோசருக்கும், ஏதும் சம்பந்தம் இருக்கா?”

“ரொம்ப நல்ல கேள்வி பாபு!  இதுக்கு விளக்கமாப் பதில் சொல்லணும். நேரமாகும். அடுத்தமாசம் பார்க்கலாம். நான் கெளம்புறேன். டாட்டா, பை பை, சீ யூ!”

“ஓகே சிட்டு! போயிட்டு வா!”  என்று டாட்டா காட்டிவிட்டு, எல்லோரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பினர்.

என்ன குழந்தைகளா? ஒங்களுக்குச் சிட்டு சொன்ன டைனோசர் கதை பிடிச்சிருக்கா? 

ஒங்க கருத்துகளை மறக்காம எங்களுக்கு எழுதுங்க.

எழுத வேண்டிய முகவரி:-  feedback@poonchittu.com

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments