பொக்கிஷத்தைத் தேடி..

இன்னிக்கு என்ன விளையாட்டு சொல்லித் தரலாம் இந்த சுட்டிப் பசங்களுக்கு.. என்று யோசனை செய்தபடி அமர்ந்திருந்தார் பட்டாபி தாத்தா. 

“பலமான யோசனையில இருக்கீங்க போல.. என்ன விஷயம்?” என்று கேட்டுக் கொண்டே காபி எடுத்து வந்து தாத்தாவிடம் கொடுத்தாள் பார்வதி பாட்டி. 

“ம்.. இந்த சுட்டிப் பசங்க கிட்ட புதுசா ஒரு விளையாட்டு விளையாடலாம்னு சொல்லிட்டேன்.. என்ன விளையாடலாம்னு யோசிக்கறேன்.. இந்த லாக்டவுன்ல பசங்களோட சேஃப்டி ரொம்ப முக்கியமாச்சே.. அதான்..” என்றார் பாட்டி கொடுத்த காபியை மெதுவாகப் பருகியபடி. 

“இவ்வளவுதானா.. நா ஒரு யோசனை சொல்றேன்..” என்று சொன்ன பார்வதிப் பாட்டி தாத்தாவின் காதில் எதையோ ரகசியமாய்க் கூறினாள். 

“ம்.. சூப்பர்.. இந்த விளையாட்டு பசங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.. ஆனா விளையாட்டு முடிஞ்சதும் பசங்களுக்கு என்ன கிஃப்ட் தருவேன்.. சேர்த்து வெச்சிருந்த ஃபெதர்ஸ் எல்லாம் நேத்திக்கே குடுத்துட்டேன்.. வேற என்ன குடுக்கலாம்..” என்று சத்தமாக யோசித்தார் தாத்தா. 

“அதப்பத்தி நீங்க கவலப்படாதீங்க.. இன்னிக்கு கிஃப்ட் நா ரெடி பண்றேன்.. விளையாடத் தேவையானத நீங்க ரெடி பண்ணுங்க..” என்றாள் பாட்டி. 

“ஓகே.. தேங்க்யூ..” என்று பாட்டியிடம் புன்னகையுடன் கூறிய பட்டு தாத்தா, புது விளையாட்டுக்குத் தேவையான பொருட்களைத் தயார் செய்யத் தொடங்கினார். 

“கிட்டத்தட்ட அம்பது (50) பசங்க இருக்காங்க.. மறந்துடாதீங்க..” என்றாள் பாட்டி. 

“ஆமாம் பார்வதி! ஞாபகம் இருக்கு!” என்றார் தாத்தா. 

இருவரும் அன்று மாலை விளையாடத் தேவையான பொருட்களைத் தயார் செய்யத் தொடங்கினர்.

சரியாக மாலை ஐந்து மணிக்கெல்லாம் அந்தக் குடியிருப்பின் எல்லா குழந்தைகளும் இன்று, பட்டுத்தாத்தா என்ன விளையாட்டு சொல்லித் தரப் போகிறார் என்பதை அறியும் ஆவலுடன் குடியிருப்பின் விளையாட்டு மைதானத்தில் குழுமிவிட்டனர். 

தாத்தாவும் பாட்டியும் ஒரு கவரை வைத்துக் கொண்டு தயாராக அமர்ந்திருந்தார்கள். 

“பட்டுத் தாத்தா.. இன்னிக்கு என்ன வெளாட்டு வெளாட போறோம்..” என்று குழந்தைகள் எல்லாம் அவர்களை மொய்த்தனர். 

“ம்.. எல்லாரும் வந்தாச்சா.. சூப்பர்.” என்று தாத்தா ஆரம்பிக்க, 

“தாத்தா.. இந்த பசங்கல்லாம் மாஸ்க் போடல..” என்று மித்து தாத்தாவிடம் போட்டுக் கொடுத்தான். 

“டேய்.. போடா..” என்று ஒரு மாஸ்க் போடாத வாண்டு மித்துவை முறைக்க, 

“ம்ஹூம்.. நீ தப்பு பண்ணிட்டு அவன் கிட்ட சண்டைக்கு போலாமா.. அது தப்புல்ல.. யார்லாம் மாஸ்க் போடலயோ அவங்க எல்லாம் விளையாட்டில சேரணும்னா மாஸ்க் கண்டிப்பா போடணும்.. போங்க.. சமத்தா போய் மாஸ்க் போட்டு வாங்க..” என்று சொல்லி மாஸ்க் போடாத குழந்தைகளை திருப்பி அனுப்பினார். அவசரமாக ஓடிப் போன குழந்தைகள் எல்லாம் மாஸ்க் அணிந்து கொண்டு நொடியில் திரும்பி வந்தனர். 

மித்து எல்லாருடைய கைகளிலும் சானிடைசர் கொடுத்து சுத்தம் செய்து கொள்ளச் சொன்னான். 

“எல்லாரும் நேத்தி மாதிரி சோசியல் டிஸ்டன்ஸ் ஃபாலோ பண்ணி ஒருத்தருக்கொருத்தர் இடிச்சுக்காம தள்ளி தள்ளி நில்லுங்க..” என்று தாத்தா சொல்ல, எல்லாரும் அவர் சொன்னது போலவே ஒருவருக்கொருவர் இடித்துக் கொள்ளாமல் போதிய இடைவெளி விட்டு நின்றனர். 

“ம்.. வெரி குட்.. சமத்துப் பசங்க..” என்று பாராட்டிய தாத்தா,

“இப்ப நாம விளையடப் போற விளையாட்டுக்குப் பேரு ட்ரஷர் ஹன்ட்.. அதாவது பொக்கிஷ வேட்டை! எப்டி.. நல்லாருக்கா..” என்று கேட்டார். 

“ஹை.. ட்ரஷர் ஹண்ட்டா.. சூப்பர்..”

“சூப்பர்..” 

சில குழந்தைகளுக்குப் புரிந்து குதித்துக் குதூகலிக்க, பல குழந்தைகளுக்கு அது என்ன விளையாட்டு என்று புரியவில்லை. 

“அப்தீன்னா என்ன தாத்தா..” என்று ஒரு வாண்டு தாத்தாவிடமே கேட்டது. 

“சொல்றேண்டா குட்டிமா..” என்று சொன்ன தாத்தா,

“ட்ரஷர் ஹண்ட் அப்டீன்னா.. நான் ஔிச்சி வெச்சிருக்கற ஒரு பொருளை நீங்க தேடி எடுக்கணும். அதுக்கு நான் அங்கங்க க்ளூவும் ஔிச்சி வெச்சிருக்கேன். அந்த க்ளூவை வெச்சி நீங்க அந்த பொக்கிஷத்தை தேடி எடுக்கணும். நீங்க தேடி எடுக்க உங்களுக்கு ஒரு மணி அவகாசம் நேரம் அதாவது ஒன் ஹவர் டைம் தருவேன்.. சரியா!”

“ஹை.. ஓகே.. ஓகே..” என்று எல்லா பிள்ளைகளும் குதூகலமாகக் கூவினார்கள். 

“இப்ப நான் எல்லாருக்கும் ஆளுக்கொரு பேப்பர் தரேன்! அதுல முதல் க்ளூ இருக்கு.. அந்த முதல் க்ளூவை தேடி கண்டுபிடிச்சீங்கன்னா ரெண்டாவது க்ளூ கிடைக்கும். இப்டியே அடுத்தடுத்து நாலு க்ளூ கிடைக்கும். நாலாவது க்ளூவைத் தேடிப் போனா உங்க புதையல் இருக்கும். 

எல்லாருக்கும் தனித்தனி புதையல் வெச்சிருக்கேன். எல்லாரும் தனித்தனியாதான் தேடணும். தனித்தனியாதான் கண்டு பிடிக்கணும். உங்களுக்கு க்ளூ கண்டுபிடிக்க கஷ்டமா இருந்துச்சுன்னா நீங்க என் கிட்ட கேக்கலாம். பாட்டி கிட்ட கேக்கலாம். இல்லன்னா உங்க அப்பா அம்மா கீழ இருந்தாங்கன்னா அவங்க கிட்ட கூட கேக்கலாம். உங்க க்ளூ பேப்பர் எல்லாத்தையும் பத்திரமா வெச்சிருந்து என்கிட்ட கொண்டு வந்து குடுத்துடணும். சரியா?” என்று விளையாட்டைப் பற்றி தாத்தா விவரிக்க, பார்வதிப் பாட்டியும் மித்துவும் எல்லாருக்கும் முதல் குறிப்பு அடங்கிய சிறு காகிதத் துண்டை கொடுத்தனர். 

எல்லாருக்கும் முதல் குறிப்பு கொடுத்து முடித்ததும், 

“உங்க புதையலைக் கண்டுபிடிச்சி என்கிட்ட கொண்டு வந்து காட்டுங்க! நா ஒரு பரிசு தருவேன்! சரியா பசங்களா?” என்று பாட்டி சொன்னாள். 

“ஹை.. சரி பாட்டி!” 

“ஓகே பாத்தீ..”

“இப்ப எல்லாரும் புதையல் தேட ஆரம்பிங்க..” என்று தாத்தா குரல் கொடுக்க, குழந்தைகள் எல்லாம் தங்கள் கையிலிருந்த குறிப்பை படிக்கத் தொடங்கினர். 

சிலருக்குப் புரிந்தது. சிலருக்குப் புரியவில்லை. 

புரிந்த பிள்ளைகள் எல்லாம் விளையாட்டைத் தொடங்க, புரியாதவர்கள் திணறினர். 

அவர்களுக்கு தாத்தா குறிப்பை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார். 

அவர்களும் புரிந்து கொண்டு உற்சாகமாக புதையலைத் தேடத் தொடங்கினார்கள். 

தாத்தாவும் பாட்டியும் முகத்தில் புன்னகையோடு அவர்களை வேடிக்கை பார்த்தபடி அங்கிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டனர். 

பிள்ளைகள் எல்லாருமே தங்களுக்குக் கிடைத்த குறிப்புகளை வைத்து அடுத்தடுத்த குறிப்புகளை மிகுந்த உற்சாகமாக கண்டறிந்தனர். 

சில குழந்தைகளுக்கு பெரியவர்களின் வழிகாட்டுதல் தேவையாக இருந்ததாலும் அவர்களும் உற்சாகமாகவே விளையாடினார்கள். 

சுமார் ஒன்றரை மணி நேரம் மிகவும் உற்சாகமாகக் கழிய, ஒவ்வொருவாராக தங்களுடைய புதையலைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து வந்து தாத்தாவிடம் கொடுக்கத் தொடங்கினர். 

சில நிமிடங்கள் வித்தியாசத்தில் எல்லாரும் தங்கள் கண்டெடுத்த புதையலுடன் வந்துவிட்டனர். 

“சபாஷ் பிள்ளைகளா.. எல்லாருமே கெட்டிக்காரங்களா இருக்கீங்களே.. குடுத்த க்ளூவ சரியா புரிஞ்சிகிட்டு சூப்பரா உங்க புதையல கண்டுபிடிச்சிட்டீங்களே.. சமத்து.. சமத்து..” என்று தாத்தா பாராட்ட, 

Chutti Mithu 4
படம் : அப்புசிவா

“பாட்டி! கிஃப்ட் குடுங்க..” என்று மித்து ஆரம்பித்தான். 

“வாங்க பசங்களா.. எல்லாரும் சமத்தா லைன்ல வந்து வாங்கிக்கோங்க..” என்று பாட்டி சொல்ல, குழந்தைகள் எல்லாம் வரிசையாக வந்து தங்களுடைய பரிசினை வாங்கிக் கொண்டார்கள். 

பரிசாக ஆளுக்கு ஒரு கவர் கொடுத்தாள் பாட்டி. வாங்கிப் பார்த்த பிள்ளைகள் எல்லாம், அதில், இரண்டு மாஸ்க் இருந்தது கண்டு உற்சாகமடைந்தனர். 

“இது எங்களுக்கா பாட்டீ?” 

“ரெண்டுமே எங்களுக்கா?” 

என்று கேள்வி மேல் கேட்டனர். 

“ரெண்டுமே உங்களுக்குதான்!” என்றாள் பாட்டி புன்னகை முகமாய். 

மித்து தனக்கு வழங்கப்பட்ட மாஸ்க்கை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்துவிட்டு, 

“ஹை.. இதுல என் பேர் எழுதியிருக்கு..” என்று உற்சாகமாகக் கத்தினான். 

உடனே மற்ற பிள்ளைகளும் தங்கள் மாஸ்க்கை ஆராய்ந்து பார்த்துவிட்டு,

“எங்க பேரும் இருக்கு..” என்று குதித்தார்கள். 

“என் மாஸ்க்கில என் நேம் கூத, ஒது பூ வஞ்சிக்கு (வரைஞ்சிருக்கு).. தேங்க்ஸ் பாத்தீ..” என்று தன் மழலை மாறாத குரலில்  மகிழ்ச்சியுடன் ஒரு குட்டிப் பெண் குழந்தை கூற, பார்வதி பாட்டி அந்தக் குழந்தையை கன்னம் பிடித்துக் கொஞ்சினாள். 

“நேத்திக்கும் ஒது பூ கச்சிது.. இன்னிக்கும் பூ போத்த மாஸ்க் கச்சிக்கு.. தெய்லி தெய்லி பூ.. ல்ல பாத்தீ..” என்று கேட்டது அந்தக் குழந்தை. 

(நேத்திக்கும் ஒரு பூ கெடச்சது.. இன்னிக்கும் பூ போட்ட மாஸ்க் கெடச்சிருக்கு.. டெய்லி டெய்லி பூ.. இல்ல பாட்டி..)

“ஆமாடீ குட்டிம்மா..” என்றாள் பாட்டி. 

“என்ன பசங்களா.. இன்னிக்கு வெளையாட்டு பிடிச்சிதா..” 

“ஆமா தாத்தா.. சூப்பரா இருந்தது.. நாளைக்கும் வெளாடலாம்..” 

“இல்ல.. நாளைக்கு வேற வெளையாட்டு.. சரியா..” 

“டெய்லி டெய்லி புது வெளையாட்டு.. எப்டி தாத்தா புது புது வெளையாட்டா கண்டுபுடிக்கறீங்க..” 

“ஹா.. ஹா.. ஹா..” என்று சிரித்துக் கொண்டார் தாத்தா. 

தாத்தா சிரிப்பதைப் பார்த்து பாட்டியும் சிரிக்க, இருவரும் சிரிப்பதைப் பார்த்து குழந்தைகள் எல்லாம் சிரித்தனர். 

எல்லாரும் சிரித்தபடியே கலைந்து சென்றனர். 

நாளைக்கு தாத்தா என்ன விளையாட்டு சொல்லித் தரப் போகிறார் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம். பை சுட்டீஸ்! 

*******

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments