பிண்டு, “ஹலோ குழந்தைங்களே! ஐ ஆம் பேக்! இந்த மாசம் நம்ம அப்துல்கலாம் பக்கத்துல செஞ்சு பார்க்கப் போகும் பரிசோதனை அட்டகாசமா இருக்கப் போகுது‌‌. வாங்க அனுவோட சேர்ந்து நீங்களும் கத்துக்கோங்க!” என்று கூற,

“பிண்டு அப்படி என்ன வித்தியாசமான பரிசோதனை செய்யப் போறோம்? கொஞ்சம் சொல்லேன்!” என்று அங்கே வந்தாள் அனு.

“நம்ம செய்யப் போற எக்ஸ்பிரிமெண்ட் பெயர் சர்க்கரைப் படிக மிட்டாய்” என பிண்டு கண் சிமிட்ட…

Rock Candy Sticks

“மிட்டாயா அப்ப அதைச் சாப்பிடலாமா?” என ஆச்சரியத்துடன் கேட்டாள் அனு.

“ஓ சாப்பிடலாமே, முதல்ல நான் சொல்ற பொருட்கள் எல்லாம் எடுத்துட்டு வா” என ஒரு பட்டியலை அனுவிடம் கூறியது பிண்டு.

தேவையான பொருட்கள்

சர்க்கரை (ஜீனி) – 1 1/2 கப்

தண்ணீர்   – 1 கப்

தட்டு – சிறியது

ஸ்பூன் – ஒன்று

டம்ப்ளர் – ஒன்று

பெரிய பாத்திரம் – 1

மெழுகு காகிதம் – 1

மரத்தால் ஆன பற்றுக் கரண்டி(skewers) – 4 அல்லது 5

செய்முறை

1. டம்ப்ளரில் தண்ணீர் நிரப்பவும். தட்டில் சிறிதளவு சர்க்கரையை கொட்டிக் கொள்ளவும். ஸ்கீவர்ஸ்ஸின் ஒரு முனையை தண்ணீரில் நனைத்து பிறகு அதை சர்க்கரை உள்ள தட்டின் மேல் உருட்டவும். அதன் பிறகு ஸ்கீவர்ஸை மெழுகு காகிதத்தில் தனித்தனியாக நன்றாக காய வைக்கவும். இது போல் மூன்று அல்லது நான்கு குச்சிகளை செய்து கொள்ளவும்.

2. பெரிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, அதில் 1/2 கப் சர்க்கரையை இட்டு நன்கு கலக்கவும். கொட்டிய சர்க்கரை கரைந்ததும், மீண்டும் 1/2 கப் சர்க்கரையை கொட்டிக் கலக்கவும். இதே போல் மீதம் உள்ள 1/2 கப் சர்க்கரையையும் நன்கு கலந்து கொள்ளவும்.

3. (பெரியவர்களின் உதவியோடு செய்ய வேண்டும்) பின்பு சர்க்கரை நீர் உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்கு கரையும் படி காய்ச்சவும்.

4. ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்த நிலையில் சர்க்கரை நீர் நன்கு தெளிந்து காணப்படும். உடனே அடுப்பினை அணைக்கவும்.

5.  இரண்டு நிமிடங்கள் கழித்து சர்க்கரை நீரை தனித்தனி டம்ப்ளரில் முக்கால் பங்கு நிரப்பவும்.

6. உங்களுக்கு பல வண்ணங்களில் மிட்டாய் வேண்டுமென்றால், சர்க்கரை தண்ணீர் உள்ள டம்ப்ளர்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், கேசரி பவுடர் அல்லது பீட்ரூட் ஜுஸ் என ஒவ்வொரு டம்ப்ளரிலும் ஒவ்வொரு நிறமூட்டிகளை சிறிதளவு சேர்க்கவும்.

7. சர்க்கரை கலந்த நீர் முழுவதும் குளிர்ந்த பிறகு, ஏற்கனவே சர்க்கரை தோய்த்து வைத்திருந்த மரக்குச்சிகளை இடவும். ஒரு டம்ப்ளரில் இரண்டு மூன்று குச்சிகளை இடலாம். ( சர்க்கரை தோய்த்த குச்சி நன்றாக காய்ந்து இருக்க வேண்டும் அதன்பிறகே அதை டம்ப்ளரில் வைக்க வேண்டும்)

8. அனைத்தும் முடிந்த பின்னர் டம்ப்ளர்களை தொந்தரவு செய்யாமல் ஒரு ஓரம் வைக்கவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை டம்பளரில் உள்ள மரக்குச்சியால் மென்மையாக சர்க்கரை தண்ணீரை கலந்து விடவும்.

9. ஒரு வார காலத்தில் நீங்கள் விரும்பி சுவைக்க ஏற்றவாறு சர்க்கரை படிக மிட்டாய் தயாராகிவிடும். அதன் பிறகே குச்சியை டம்ப்ளர்களில் இருந்து எடுக்க வேண்டும்.

நண்பர்களோடு சேர்ந்து சுவைத்து சாப்பிட சர்க்கரை படிக மிட்டாய் தயார்.

“பிண்டு சூப்பரா இருக்கு இந்த ஐடியா! கலர் கலரா நிறைய மிட்டாய் வீட்டுலயே செஞ்சு சாப்பிடலாம்” என அனு குதூகலித்தாள்.

“அனு, இந்த சோதனையை பெரியவர்களின் துணை இல்லாமல் செய்யக் கூடாது, ரொம்ப கவனமா இருக்கணும்” என அறிவுறுத்தியது பிண்டு.

“சரி பிண்டு ஆனா இந்த மிட்டாய்கு பின்னாடி இருக்கும் மேஜிக் பத்தி கொஞ்சம் சொல்லேன்”.

அறிவியல் உண்மைகள்

தண்ணீரின் அளவை விட சர்க்கரையின் அளவு கூடும் போது, அந்த கரைசல் சேச்சுரேடட் சொல்யூஷனாக மாறும். அதை கொதிக்க வைக்கும் போது கரையாமல் இருக்கும் சர்க்கரையும் தண்ணீரில் கரைய ஆரம்பிக்கும்.

பிறகு அதை குளிர்விக்கும் போது சர்க்கரையின் மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று இணையும், அந்த கரைசலில் நாம் சர்க்கரை தோய்த்த குச்சியை இடும் பொழுது அதனுடனே தண்ணீரில் உள்ள சர்க்கரையின் மூலக்கூறுகளும் சேர்ந்து படிக மிட்டாயாக மாறும்.

பின்வரும் வகுப்புகளில் அறிவியல் பாடத்தில் சேச்சுரேடட் மற்றும் சூப்பர் சேச்சுரேடட் கரைசல்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்வீர்கள். நன்றி வணக்கம் அடுத்த மாதம் வேறு ஒரு சோதனையோடு உங்களை சந்திக்கிறேன்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments