ஒரு கிராமத்தில் ஒரு வயதான பாட்டி சின்ன கடை வைத்து பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தார். அவரின் கடையின் மொறுமொறு மசால் வடை அந்த ஏரியாவில் மிகப் பிரபலம். பாட்டிக்கு மிகவும் வயதானதால் கண் பார்வை மங்கி இருந்தது. இருப்பினும் அவருக்கு உற்ற தோழனாய் சிக்கு என்ற நாய்க்குட்டி இருந்ததால் அவரால் நன்றாக வியாபாரம் செய்ய முடிந்தது.

தினமும் வரும் வாடிக்கையாளர்களில் சிலர், கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் சாப்பிட்ட வடைக்கு காசு தராமல் நழுவி விடுவர். பாட்டிக்கு கண் சரியாக தெரியாத காரணத்தால் அவர் இதையெல்லாம் கவனித்ததில்லை.

ஆனால் இதை எல்லாம் மரத்தின் மேல் இருந்த அண்டங்காக்கா ஒன்று தினமும் கவனித்தது.

‘மனுஷங்களே மனுஷங்களை ஏமாத்தும் போது, நாம ஏமாத்துனா தப்பே இல்ல. திருட்டு மாங்காய் ருசிப்பது போல திருட்டு வடையும் ருசிக்கும்’ என தப்புக் கணக்கு போட்டது அந்த காக்கா.

அந்த திட்டத்தின் படியே ஒருநாள் கூட்டம் அதிகமில்லாத நேரத்தில், பாட்டி சுட்டு வைத்திருந்த மசால் வடையைக் கவ்விக் கொண்டு விர்ரென்று பறந்து சென்றது. பாட்டியின் நாய் சிக்கு இதைப் பார்த்துவிட்டு, லொள் லொள்ளென்று கத்திக் கொண்டே காகத்தைத் துரத்திக் கொண்டு ஓடியது.

ஆனால் பாவம் சிக்குவால் காகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை, “கண்ணு தெரியாத பாட்டியையா ஏமாத்துற, உன்னையும் ஒருத்தன் ஏமாத்துவான்” என காகத்தைப் பார்த்து கத்திவிட்டு சோர்ந்து திரும்பியது.

வடையைத் திருடி எடுத்த காகம், ஒரு வாழைமரத்தின் மீது அமர்ந்து கொண்டு அதை ஆவலுடன் முகர்ந்து பார்த்தது.

‘ஆஹா! வெங்காய வடையோட வாசமே இப்படி இருக்கே, அதை சாப்பிட்டா எப்படி இருக்கும்” என வாயில் எச்சிலூற நினைத்தது.

அப்போது அந்த வழியாக வந்த நரி ஒன்று, காகத்தை தந்திரமாக ஏமாற்ற எண்ணியது.

kagamum nariyum

காகம் அமர்ந்திருந்த மரத்தின் கீழ் சென்று, “காக்கா காக்கா நீ எவ்வளவு திறமைசாலியா தெரியுமா? அந்த வடைக் கடை பாட்டியை லாவகமாக ஏமாற்றிவிட்டாயா! அவரின் நாயும் கூட உன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஏமாந்து திரும்பிப் போனதே! எனக்கும் பாட்டியின் கடை வடையின் மீது பேராவல் உண்டு, என்னை நீ சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு உன் திருட்டுக்கலைகளை கற்றுத் தருவாயா!” என மண்டியிட்டு கேட்டது.

காகத்தின் தலையில் வஞ்சப்புகழ்ச்சியால் வந்த கிரீடம் முளைத்தது. பாவம் அது முள் கிரீடம் என அதற்குப் புரியவில்லை. ‘இத்தனை வலிய நரியே என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டதே!’ என்ற கர்வத்தில் வாயில் வைத்திருந்த வடையை மறந்துவிட்டு பேச ஆரம்பித்தது.

அந்தோ பரிதாபம்! அடுத்த நொடியே வடை கீழே விழுந்தது, அதை நரியும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டது.

நரி ஓடிய பிறகு தான் அதன் சூழ்ச்சி காகத்திற்குப் புரிந்தது.

‘அய்யோ வாய்க்கு எட்டியது, வயிற்றுக்கு எட்டாம போயிடுச்சே!’ என காகம் பெருங்குரலெடுத்து அழுதது.‌ அப்போது தான், நாய் கோபத்தில் சொன்ன வார்த்தைகள் அதன் புத்திக்கு எட்டியது. நம்ம ஒருத்தர ஏமாத்துனா, நம்மளையும் இன்னொருத்தர் ஏமாத்துவாங்க என்ற கசப்பான உண்மை புரிந்தது.

உடனே நாயைத் தேடி சென்று, நடந்த அத்தனை நிகழ்வுகளையும் சொல்லி மன்னிப்பு கேட்டது.

“சரி காக்கா, நீ இவ்வளவு தூரம் மன்னிப்பு கேக்குறதால நான் ஒரு யோசனை சொல்றேன் அதன் படி நீ நடந்தா தினமும் உனக்கு ரெண்டு வடை கிடைக்கும்” என்றது சிக்கு.

காகமும் சரி என்று தலையாட்டியது.

“நம்ம வடைக்கடை பாட்டிக்கு பாவம் கண்ணு தெரியாததால, நிறைய பேர் ஏமாத்துறாங்க. அதனால நீ என்ன செய்யுற கடைக்கு பக்கத்துல உள்ள மரத்தின் மேலுள்ள உயரமான கிளையில் உக்காந்துக்குற. கடைக்கு வர மனிதர்கள் யாராவது காசு குடுக்காம நழுவப் பாத்தாங்கன்னா, கா கான்னு கத்திக்கிட்டே அவங்களை சுத்தி வா. உடனே நான் ஓடிப்போய் அந்த ஆளுங்களோட சட்டையைப் பிடிச்சு இழுக்குறேன். அப்படி செஞ்சோம்னா பாட்டியை ஏமாத்தனுங்கற நினைப்பு யாருக்குமே வராது” என அழகான திட்டம் போட்டுக் கொடுத்தது நாய் சிக்கு.

காகமும் அதன் படியே செய்ய, பாட்டியிடமிருந்து தினமும் இருபது வடைகள் திருடு போவது தெரிந்து, அது தடுக்கவும் பட்டது. பாட்டிக்கு வந்த லாபத்தில் இருந்து தினமும் காகத்திற்கு இரண்டு சூடான மசால் வடை இனாமாகக் கிடைத்தது.

‘திருட்டு வடையை விட நேர்மையா உழைச்சு சாப்பிட்ட வடைக்குத் தான் சுவை அதிகம்’ என்று காகத்திற்கு புரிய, தன் நண்பனான சிக்குவிற்கு நன்றி சொன்னது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments