சிவானி தன் பெரியம்மா வீட்டிற்குச் சென்றிருந்தாள். அங்கு தான் அவளது  அண்ணன், பெரியம்மாவின் மகன் தியாகு இருக்கிறான்.

தியாகு என்றால், சிவானிக்கு அவ்வளவு பிடிக்கும். அவளுக்கு விசில் அடிக்கக் கற்றுக் கொடுத்தவன் அவன் தான். பம்பரம் விடக் கற்றுக் கொடுத்தவனும் அவன் தான்.

அதுவும் பம்பரத்தை அவளது கைகளில் சுற்றவிட்டு, அதன் குறுகுறுப்பில் அவள் சிரிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பான்.

இந்த முறை தன் ஊருக்கு வந்தால், நீச்சல் கற்றுத் தருவதாக ஏற்கனவே சிவானியிடம் சொல்லியிருந்தான்.

சிவானி வந்ததும் மிக மகிழ்ச்சியோடு அவளை வரவேற்று, தான் நீச்சல் பழகிய இடமான தோட்டத்து கிணற்றிற்கு அழைத்துச் சென்றான்.

அங்கே நிறைய் சிறுவர்கள் டயரைக் கட்டிக் கொண்டும், ப்ளாஸ்டிக் பாட்டில்களைக் கட்டிக் கொண்டும் நீரில் மிதந்து கொண்டிருந்தனர். சிலர் எந்தப் பிடிமானமும் இல்லாமல் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர். சிலர் கிணற்றின் மேலிருந்து தலைகீழாக உள்ளே குதித்தனர்.

உள்ளே சில வளர்ந்த அண்ணன்கள், சிறுவர்களைத் தங்கள் கைகளில் தாங்கி நீரில் படுக்க வைத்து கைகால்களை அசைத்து நீச்சல் பழகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அனைத்தையும் பார்க்கப் பார்க்க சிவானிக்கு மிகவும் ஆச்சர்யமாகவும் ஆவலாகவும் இருந்தது.

கடிகாரத்தின் உதவியால் கனவில் மட்டும் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தவளுக்கு உண்மையாகவே நீச்சல் அடிக்க பேராவல் எழுந்தது.

தியாகு அவள் கரம் பிடித்து கிணற்றின் படிக்கட்டுகள் வழியாக கீழே அழைத்துப் போனான். அங்கே சிவானியை ஒரு இரப்பர் டயருக்குள் திணித்து நீரில் மிதக்க விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் நீரின் மீதிருந்த பயம் விலகி, தண்ணீரில் மிதப்பதன் சுகம் புரியவும், அவளைக் கைகளில் ஏந்தி நீந்தக் கற்றுக் கொடுத்தான் தியாகு.

படு சுட்டியான சிவானி, மிக விரைவிலேயே டயர் இல்லாமல் நீச்சல் அடிக்கக் கற்றுக் கொண்டாள். அந்த விடுமுறைக் காலம் அவளது நீச்சல்ப் பயிற்சியின் காலமாக அமைந்தது.

கனவிலேயே சாகசம் செய்து கொண்டிருக்காமல், நிஜ வாழ்விலும் கடினமாக உழைத்து, நீச்சல் கற்றுக் கொள்ளும் சிவானியை எண்ணி பெருமைப்பட்டது அவளது கைக்கடிகாரம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *