இதுவரை:

 ஒரு காட்டுப் பகுதியில் ஆற்றில் படகு ஓட்டும்போது ஒரு எலியும் மூஞ்சுறுவும் நண்பர்களாகின்றன. பின் அவர்கள் ஒரு தேரையை சந்திக்க, மூவருமே நட்பில் இணைகிறார்கள். அந்தத் தேரை, படகு ஓட்டுதல், கார் ஓட்டுதல் என்று சாகச விரும்பியாக இருக்கிறது. அதன் அடிக்கடி மனதை மாற்றிக் கொள்ளும் குணத்தாலும், வேகமாக வாகனங்களில் போகும் பழக்கத்தாலும் அதற்குப் பல சிக்கல்கள் வருகின்றன. தேரையின் போக்கு எலிக்கும் மூஞ்சுறுவுக்கும் வருத்தம் தருகிறது. இந்நிலையில், பனிக்காலத்தில் ஒருநாள் எலியும் மூஞ்சுறுவும் காட்டில் பயணம் செய்கையில் குளிர் அதிகமானதால், ஒரு வளையின் கதவைத் தட்டுகின்றன. அதன் உரிமையாளரான தேன்வளைக் கரடி அவர்களை வரவேற்று உபசரிக்கிறது.

 இனி..

அத்தியாயம் 3

 தேன்வளைக்கரடியின் வீடு மிகவும் சுத்தமானதாகவும் அழகானதாகவும் இருந்தது. மூஞ்சுறுவும் எலியும் அதைப் பாராட்டின.

“இது நான் கட்டின வீடு இல்லை.. இங்கே ஒரு பெரிய நகரம் இருந்துச்சு. மக்கள் அதை விட்டுட்டுப் போயிட்டாங்க. அதுக்கப்புறம் நிறைய மரங்கள், செடிகொடிகள் இங்கே வளந்துச்சு. காட்டு விலங்குகளான நாங்க காலியா இருக்கற வீடுகளை எடுத்துக்கிட்டோம். இது எங்களோட ஓய்வுக்காலம். அதனால நான் நிறைய பழங்கள், காய்கறிகளை எல்லாம் சேகரிச்சு வச்சிருக்கேன். அதுக்கு இந்த வீடு வசதியா இருக்கு” என்றது தேன்வளைக்கரடி.

 எலிக்கும் மூஞ்சுறுவுக்கும் தேரையின் நினைவு வந்தது. “எங்களுக்கு ஒரு தேரை நண்பன் இருக்கான். அவனுக்கும் இதே மாதிரி ஒரு பெரிய வீடு இருக்கு. ஆனால் அவனோட பொறுப்பில்லாத தன்மையால அவனோட பணம், சொத்துக்களை இழந்துக்கிட்டு இருக்கான். அதான் வருத்தமா இருக்கு” என்றது எலி.

“அந்த ‘டோட் ஹால்’ (Toad Hall) அப்படிங்கிற வீடுதானே நீங்க சொல்றது? இப்ப இருக்கிற தேரையோட அப்பா என்னோட நெருங்கின நண்பன். உங்க நண்பனோட சேட்டைகளைப் பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன். பனிக்காலம் முடிஞ்ச உடனே நாம மூணு பேரும் சேர்ந்து அவனைத் திருத்தி நல்ல வழிக்குக் கொண்டு வருவோம். இல்லேன்னா, அவன் அப்பா கொடுத்த சொத்துக்களை அழிச்சுடுவான்” என்றது தேன்வளைக்கரடி.

 கரடி, ஆமை, தேரை, தவளை, தேன்வளைக்கரடி போன்ற விலங்குகள் பணிக்காலத்தில் நீண்ட நாட்கள் வளைகளுக்குள், பூமிக்கடியில், கற்களுக்கு அடியில், குகைகளில் ஓய்வில் இருக்கக்கூடியவை (Hibernation). பனிக்காலம் முடிந்த பின்தான் இவை வெளி உலகத்திற்கு வரும். அப்படிப்பட்ட ஓய்வில் தான் இப்பொழுது தேன்வளைக்கரடி இருந்து வருகிறது.

 விருந்து முடிந்து ஓய்வெடுத்த பின் நண்பர்கள் இருவரும் விடைபெற்றுச் சென்றனர். தேன்வளைக்கரடி ஒரு சுரங்கப் பாதையின் வழியே அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களது இருப்பிடத்தின் அருகே விட்டது.

காலம் ஓட, பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வந்தது. மூஞ்சுறுவும் எலியும் தங்கள் படகைச் சரி செய்து, வண்ணம் பூசி ஆற்றுச் சவாரிக்காகத் தயாராக இருந்தனர். அப்போது தேன்வளைக்கரடி அவர்களைத் தேடிச் சென்று, “வாங்க! நாம மூணு பேரும் தேரையை நேரில் போய்ப் பார்க்க வேண்டிய நேரம் வந்துருச்சு. இன்னிக்குப் புதுசா அவன் ஒரு கார் வாங்கப் போறானாம். அவன் புதுசா ஏதாவது சிக்கல்ல மாட்டிக்க முன்னாடி போய் உதவி பண்ணலாம்” என்று கூறி இருவரையும் அழைத்துச் சென்றது.

மூவரும் தேரையின் வீட்டை அடைய, தேரை தன் புதிய மோட்டார் காரைப் பெருமையுடன் காட்டியது. மூவரையும் காரில் அழைத்துச் செல்வதாகக் கூறியது. “வாங்க! வேகமா கார்ல இந்த ஊரைச்சுத்திப் போகலாம். பார்க்கிறவங்க எல்லாம் அசந்து போயிடணும்” என்றது.

 ஆனால் தேன்வளைக்கரடி தேரையிடம், “நீ அடிக்கடி காயம்பட்டு, போலீஸ்லயும் மாட்டி, பிரச்சனைல மாட்டிக்கிறியே.. அதனால வீட்டிலேயே இரு..” என்று கூறி அதை வீட்டிற்குள் பூட்டிப் போட்டது.

“நாம மூணு பேரும் மாத்தி மாத்திக் காவல் காக்கலாம்” என்று கூற எலியும் மூஞ்சுறுவும் ஒத்துக் கொண்டன. மூன்று பேரும் தேரையை வீட்டை விட்டு வெளியே விடாமல் காவல் காத்தார்கள். சில நாட்கள் அமைதியாகக் கழிந்த நிலையில், திடீரென்று ஒருநாள் தேரை சோர்வாகப் படுத்திருந்தது.

“எனக்கு உடம்பு சரியில்லை. நான் சீக்கிரம் இறந்து போயிடுவேன்னு நினைக்கிறேன். சீக்கிரமா டாக்டரைக் கூப்பிடுங்க. அப்படியே ஒரு வக்கீலையும் கூப்பிடுங்க. என்னோட சொத்து விஷயங்களை எல்லாம் அவர்கிட்ட பேசி முடிக்கணும்” என்று கூறியது.

 அப்போது காவலுக்கு இருந்த எலி பயந்துபோய் தேரை கேட்டுக் கொண்டபடியே வைத்தியரையும் வக்கீலையும் அழைக்க விரைந்தது. இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு வெளியே போய் விட்டது தேரை. தேரை தப்பித்து ஓடி விட்டதை அறிந்த தேன்வளைக்கரடி, எலியிடம், “இப்படி பொறுப்பில்லாம விட்டுட்டியே.. அவன் நல்லா பொய் சொல்லுவான்னு உனக்குத் தெரியாதா?” என்று வருந்தியது.

 தப்பித்துச் சென்ற தேரை ஒரு உணவகத்திற்குள் சென்று நல்ல உணவு வாங்கிச் சாப்பிட்டது. அதன் பின் அந்த ஹோட்டலுக்கு இரண்டு பேர் மோட்டார் காரில் வந்தனர். அந்தக் காரைப் பார்த்தவுடனேயே தேரைக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

‘எவ்வளவு அழகான கார்!’ என்று வியந்தபடியே அதன் அருகில் சென்ற தேரைக்கு காரின் உரிமையாளர் அதிலேயே சாவியை விட்டுவிட்டுப் போயிருந்தது தெரிந்தது. அதைப்பார்த்தவுடன் உற்சாகத்தில் என்ன செய்கிறோம் என்பதே அதற்குத் தெரியவில்லை.

காருக்குள் ஏறிய தேரை அதனை  வேகமாக ஓட்டிச் சென்றது. போகும் வழியில் சிலரை இடித்துக் காயப்படுத்தியது. தடுக்க வந்த போலீஸ்காரர்களையும் இடித்து விட்டது. வேகமாக ஓட்டி பல விபத்துக்களை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், வண்டியைத் திருடிய குற்றத்திற்காகவும் போலீசார் தேரையைப்பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதி தேரைக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க, வருத்தத்துடன் சிறைக்குச் சென்றது தேரை.

-தொடரும்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments