ஒரு ஊர்ல ராஜான்னு ஒரு அழகான குட்டிப் பையன் இருந்தானாம். அவங்க வீட்ல அவன் ஒரே பையன். அதுனால ரொம்ப செல்லம். அவன் எது கேட்டாலும் அவனுக்கு ரொம்ப எளிதில் கிடைச்சுடும். அப்படி இருக்கும்போது ஒரு நாள் ஊர்ல இருந்து ராஜாவோட சித்தப்பா செந்திலும், அவர் குடும்பமும் விடுமுறைக்காக ராஜா வீட்டுக்கு வந்தாங்க.
ராஜாவுக்கு ரொம்ப ஜாலி, அவனோட தங்கச்சி, அதாவது செந்தில் சித்தப்பா பொண்ணு ரசிகாவும் வர்றா. ரசிகாவும் ஒரே பொண்ணுன்னு அவங்க வீட்ல அவளுக்கு ரொம்பச் செல்லம்.
“ரசிகா வந்தா அவளுக்கு விட்டுக் குடுக்கணும், அவ கிட்ட இருந்து பொருள்களைப் பிடுங்க கூடாது”ன்னு ராஜா அம்மா சொல்லிக் குடுத்தாங்க. “நீ அவளை அழ வச்சன்னா அப்புறம் அவ சீக்கிரம் ஊருக்குப் போய்டுவா, உன்னால அவ கூட ரொம்ப நாள் ஜாலியா இருக்க முடியாது”, அப்படின்னு பல விதமா சொல்லி ராஜாவை தயார்ப் படுத்தி வச்சாங்க.
ஊர்ல இருந்து செந்தில் சித்தப்பா ரசிகா பாப்பா எல்லாரும் வந்துட்டாங்க. ரெண்டு நாள் ரொம்பப் பாசமா இருந்தாங்க. ராஜா ராசிகாவுக்கு எல்லாம் விளையாடக் குடுத்தான். ஆனால் ஒரு நாள் ராஜாவுக்கு ரொம்ப புடிச்ச நிப்பான் பொம்மையை ரசிகா தூங்கும்போது வேணும்னு அவ ரூமுக்கு எடுத்துட்டுப் போயிட்டா. ராஜாவுக்கு நிப்பான் பொம்மை ஞாபகமாவே இருந்தது.
அதனால யாருக்கும் தெரியாம நிப்பான் பொம்மையை எடுக்க ரசிகா கிட்ட போய் எடுத்துட்டு வந்தான். ஆனால் ரசிகா பாப்பா தூக்கத்துல இருந்து முழிச்சி ரொம்ப அழுதுட்டா. செந்தில் சித்தப்பா, “பாப்பாவை ஏன்டா முழிக்க வச்ச?”, அப்படின்னு கேட்டதும் ராஜா பயந்து போய் அழ ஆரம்பிச்சிட்டான்.
ரசிகா பாப்பாவை அவங்க அம்மாகிட்ட குடுத்துட்டு சித்தப்பா ராஜாவைத் தூக்கிட்டு வெளில போனாரு.
“ஆம்பிளைப் பையன் அழலாமா ராஜா? நீ அழுதா இனிமேல் நான் உன்ன ராணின்னுதான் கூப்பிடுவேன்”, அப்படின்னு சொல்றாரு.
ராஜாக்கு ஒன்னும் புரியல, அழுகையை நிப்பாட்டிட்டு யோசிக்க ஆர்மபிச்சிட்டான். “அப்போ பொம்பளப் பிள்ளைங்க தான் அழுவாங்களா? நான் அழுதா என் பெயரை ராணின்னு மாத்திடுவாங்களா? ராணி பெயர் நல்லா இல்ல சித்தப்பா, ரசிகா பாப்பா பெயர் நல்லா இருக்கு, நான் அழுதா என் பெயர் ராசிகான்னு வச்சுக்குவோமா?”, அப்படின்னு கேக்குறான்.
சித்தப்பா முகம் சோகமா மாறிட்டு.
“ஏன் சித்தப்பா டல்லா இருக்கீங்க”, ராஜா கேக்குறான்.
“இல்லடா அழுகிறவங்களுக்கு ரசிகா பாப்பா பெயர் வைக்க சித்தப்பாக்கு விருப்பம் இல்லை. உன் பெயரை மாத்த வேண்டாம், ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ அழாம தைரியமா இருக்கணும், சரியா”, அப்படின்னு சொன்னதும் “சரி சித்தப்பா, நான் ரசிகா பாப்பாவையும் அழக் கூடாது, தைரியமா இருன்னு சொல்றேன்”, அப்படின்னு சொல்லிட்டு பாப்பா கூட விளையாடப் போய்ட்டான் ராஜா.