குழந்தைகளின் குதூகலம்
‘பட்டு பட்டு!’ என்று அந்த குடியிருப்பின் குட்டிக் குழந்தைகள் எல்லாம் பட்டாபித் தாத்தாவை சுற்றிச் சுற்றி வந்தனர்.
பார்வதி பாட்டிக்கு அதிசயமாக இருந்தது.
‘என்ன இந்தக் குழந்தைகள் எல்லாம் இன்று இவரை இப்படி மொய்த்துக் கொள்கிறார்கள்? அதிசயமாக இருக்கிறதே!’ என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.
எல்லாம் அந்த தீப்பெட்டி ஃபோனில் பேசும் விளையாட்டு பிடித்துப் போனதால் என்று பாட்டிக்குப் புரியவில்லை.
“பட்டு.. எப்ப பேர்ட் வாச் போறோம்..”
“நிறைய பேர்ட்ஸ் இருக்குமா..”
“பேர்ட்ஸை நம்மளால தொட முடியுமா..”
“அது நம்மள கொத்தாதா?”
என்று வித விதமாகக் கேள்வியெழுப்பி தாத்தாவை திணறடித்துக் கொண்டிருந்தனர்.
தாத்தா, குழந்தைகள் எல்லாரையும், தத்தம் பெற்றோரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, தங்கள் குடியிருப்பு வளாகத்திலிருந்த விளையாட்டு மைதானத்தில் கூடச் சொல்லியிருந்தார்.
குழந்தைகள் எல்லாம் நாலறை மணியிலிருந்தே மைதானத்தில் கூட ஆரம்பித்துவிட்டனர்.
தாத்தா எல்லாரையும் சமூக இடைவெளியுடன் அமர வைத்தார். எல்லாருடைய தீப்பெட்டி போனையும் ஒரு நீல நிற நூலில் இணைத்து அந்த நீல நிற நூலின் மறுமுனையில் ஒரு பெரிய தீப்பெட்டியை இணைத்தார். அதனைத் தன் கையில் வைத்துக் கொண்டார்.
எல்லாரையும் கண்களை மூடிக் கொண்டு தங்கள் கையிலிருக்கும் தீப்பெட்டி போனை காதில் வைத்துக் கொள்ள சொன்னார். குழந்தைகளும் அவ்வாறே செய்தனர்.
“எல்லாம் தயாரா.. நாம பேர்ட் வாச் போலாமா..” என்று தன் கணீர்க் குரலில் தன் கையிலிருந்த தீப்பெட்டி போனில் பேசினார்.
“போலாம் பட்டு..” என்று குழந்தைகள் கோரசாகக் கூறினார்கள்.
தாத்தா தன் கணீர்க் குரலில்,
“நான் சொல்ல சொல்ல, அது தெரியற மாதிரி உங்க மனசில கற்பனை செய்துக்கோங்க சுட்டிகளா..” என்று சொல்லி காட்சிகளை விவரிக்கத் தொடங்கினார்.
குழந்தைகளும் தங்கள் மனக்கதவினை திறந்து வைத்துக் கொண்டனர்.
“கலர் கலரா பலூன் பறக்குது பாருங்க.. எல்லாம் இப்ப பலூன் ஃப்ளைட்ல பறக்க போறோம்.. உங்களுக்கு பிடிச்ச கலர் பலூனை பிடிங்க பாக்கலாம்..” என்று சொல்ல, குழந்தைகள் எல்லாம் தங்கள் தாத்தாவின் குரலில் தங்கள் மனதில் கற்பனையாய் பலூனைப் பார்க்கத் தொடங்கினார்கள். அதனைப் பிடிக்க முயன்றார்கள். சிலர் பலூன்களைப் பிடிக்கவும் செய்தார்கள்.
“ம்.. உங்களுக்குப் பிடிச்ச பலூனை பிடிச்சீங்களா.. வெரி குட்.. இப்ப அதுதான் உங்க ஃப்ளைட்.. எல்லாம் அதுக்குள்ள ஏறி உக்காந்துக்கோங்க.. ம்.. மறக்காம சீட் பெல்ட் போட்டுக்கோங்க..”
“உக்காந்துட்டோம்..” குழந்தைகள் எல்லாம் மீண்டும் கூவினார்கள்.
“இப்ப நாம வானத்தில பறக்கறோம்.. பாருங்க.. நாம ரைட் சைட்ல பறக்கறோம்.. பறந்துக்கிட்டே பேர்ட்ஸ் பாக்கறோம்..”
“ம்..”
“சூப்பர்..”
“ஹை.. ஜாலியா இருக்கு..”
என்று கூவிக் கொண்டே குழந்தைகள் குதூகலித்தனர்.
“என்ன பேர்ட்ஸ் எல்லாம் தெரியுது உங்களுக்கு..” கேட்டார் தாத்தா.
“சிட்டுக்குருவி..”
“கிளி..”
“மயில்..” என்று எல்லாரும் ஒவ்வொரு பறவை பெயரை சொல்ல,
“பென்குயின்..” என்றது ஒரு வாண்டு.
“பென்குயினா.. அப்ப நீ அன்டார்டிக்கா போயிட்டியா.. ஹா.. ஹா..”
“ஆமா பட்டு.. நா ஃபீடா (ஸ்பீடா) அன்டார்டிக்கா பறந்து போயிட்டேன்.. ஹா.. ஹா..” ன்று சொல்லி சிரித்தது அந்த வாண்டு.
இப்படியே பல பறவைகளின் பெயர்களைக் கூறி அதனை விவரித்து தன் குரல் வழியாக அதனை கற்பனையில் காண வைத்துக் கொண்டிருந்த தாத்தா,
“சரி.. போதுமா பசங்களா.. நாளைக்கு வேற விளையாட்டு விளையாடலாம்.. எல்லாம் மெதுவா கண்ணை தெறங்க..” என்று கூற,
எல்லா குழந்தைகளும் தாத்தா சொல்படி மெதுவாகக் கண்களைத் திறந்தனர்.
எல்லாருக்கும் ஒரு பக்கம் மகிழ்வாக இருந்தாலும் இது நிஜமில்லையே என நினைத்தபடி எழுந்து கொள்ள, எல்லாருடைய மடியிலிருந்தும் விதவிதமாக பல நிறங்களில் பல விதமான பறவைகளின் இறகுகள் விழுந்தன.
“ஹை.. என் மடியில ரெக்க.. ரெக்க.. இருக்கு..” என்று ஒரு சுட்டிப் பையன் மகிழ்ச்சியான குரலில் கூவ,
“எனக்கும் இருக்கு..”
“என் மடிலயும்..” என்று எல்லாரும் குதூகலத்துடன் கூவினார்கள்.
“எப்டி தாத்தா.. எங்க மடில ரெக்க வந்துச்சு..” என்று ஒரு புத்திசாலி வாண்டு கேள்வி கேட்க,
“நாமல்லாம் இப்பதானே பேர்ட் வாச் போனோம்..” என்றார் தாத்தா.
“அப்ப நா பென்குயின் பார்த்தேனே.. அதோட ரெக்கை எனக்கு ஏன் கிடைக்கல..” என்று அந்த அன்டார்டிக்கா போனதாய்ச் சொன்ன வாண்டு தாத்தாவை மடக்க,
“பென்குயினுக்கு ஏதுடா ரெக்கை.. அதுக்கு ஹேர்தானே..” என்று தாத்தா சமாளித்தார்.
எல்லா குழந்தைகளும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும் கற்பனையில் பறவைகளைக் கண்டிருந்தாலும் தங்கள் கைகளில் பறவைகளின் இறகுகள் கிடைத்துள்ளதால் உண்மையாகவே பறவைகளைக் கண்டு வந்த மகிழ்ச்சி கிடைக்கப் பெற்றாகள்.
எல்லாக் குழந்தைகளும் தாத்தாவிடம், நாளைக்கு விளையாட வருவதாய் சொல்லிவிட்டுக் கிளம்ப, ஒரு மழலை மாறாத குட்டிப் பெண் குழந்தை தாத்தாவின் அருகில் வந்து,
“பத்து தாத்தா.. எனக்கு ஃபெதஸ் கூதவே.. இந்த பூவும் கச்சிது.. நா பேத் வாச் பன்னும்போது இந்த மத்து மேலதா அந்த பேத் இந்துச்சு.. இந்த பூ அயகா இக்கு தாத்தா..”
(பட்டு தாத்தா.. எனக்கு ஃபெதர்ஸ் கூடவே இந்த பூவும் கிடைச்சது.. நான் பேர்ட் வாச் பண்ணும் போது இந்த மரத்து மேலதான் அந்த பேர்ட் இருந்துச்சு.. இந்த பூ அழகா இருக்கு தாத்தா..)
என்று சொல்லி ஒரு நாகலிங்கப்பூவை தாத்தாவிடம் காட்டினாள் குழந்தை.
“ஓ.. இந்த மரத்து மேலதான் அந்த பேர்ட் இருந்துச்சா.. சூப்பர்.. சூப்பர்.. ஃபெதர்ஸ் கூடவே இந்த பூவையும் பத்திரமா வெச்சிக்கோ.. சரியா..” என்று தாத்தா கூற,
“சரி தாத்தா! நாலிக்கு என்ன வெலாத்து வெலாத போதோம்..”
“நாளைக்கு வேற ஒரு புது விளையாட்டு.. சரியா..”
“அதான்.. என்ன வெலாத்து..”
“அது சஸ்பென்ஸ்..” என்று கண்ணை உருட்டிச் சொன்னார் தாத்தா.
“ம்..” என்று அந்தக் குழந்தையும் தன் கண்களை உருட்டிவிட்டு ஓடிப் போனாள்.
தாத்தா, எல்லார் மடியிலயும் ஃபெதர்ஸ் மட்டும்தானே வெச்சேன்.. அந்தப் பொண்ணு மடியில எப்டி நாகலிங்கப்பூ வந்துச்சு.. என்று யோசித்தபடியே, தன் வீட்டுக்கு வர, பார்வதி பாட்டியும் தன் வாக்கிங்கை முடித்துக் கொண்டு தாத்தாவுடன் வீட்டுக்கு வந்தாள்.
தாத்தாவின் யோசனையைப் பார்த்த பாட்டி, ரகசியமாய் சிரித்துக் கொண்டாள்.
பின்னே.. அவள்தானே வாக்கிங் போகும் போது பக்கத்து காம்பவுண்டிலிருந்து தன் கையில் வந்து விழுந்த நாகலிங்கப்பூவை எடுத்து வந்து அந்தக் குழந்தையின் மடியில் போட்டாள்.
தாத்தா, நாளைக்கு என்ன விளையாட்டை அறிமுகப்படுத்தப் போகிறார் என்ற ஆவலுடன் குழந்தைகள் எல்லாம் காத்திருக்கிறார்கள். நாமும் காத்திருப்போமா?!
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.