அபி என்கிற அபினயாவிற்கு அன்று ஏழாவது பிறந்தநாள். அவளுக்காகவும், அவளின் அக்கா சுபப்ரியா என்கிற சுபிக்காகவும் சிங்கப்பூரில் இருந்து அவர்களின் மாமா ஒரு பரிசினை அனுப்பி இருந்தார்.

“அம்மா அம்மா சீக்கிரம் அந்த பாக்ஸை ஓபன் பண்ணுங்களேன்! மாமா என்ன கிஃப்ட் அனுப்பிருக்காங்கன்னு பாக்கணும்” என பரிசு வந்த அட்டைப் பெட்டியினைச் சுற்றி சுற்றி ஓடினாள் அபி.

அவர்களின் தாயும் அட்டைப் பெட்டியைப் பிரிக்க, உள்ளே வெள்ளை நிறத்தில் அழகான இரண்டு டீ ஷர்ட்கள் இருந்தன. சிறியது அபிக்கும், பெரியது சுபிக்கும் என பார்த்ததும் புரிந்து போனது.

அபியின் டீ ஷர்ட்டில் சிறிய மஞ்சள் நிற முயல்கள் இரண்டின் ஓவியமும், நீல நிற யானை ஒன்றின் ஓவியமும் இருந்தன. முயல்களின் பற்கள் அழகாய் வெள்ளை நிறத்தில் அழகாய் துருத்திக் கொண்டு இருந்தன‌. யானையின் பெரிய காதுகளில் வெள்ளி நிற செயற்கை காதணிகள் அலங்கரித்திருந்தன.

“அம்மா, இந்த முயலோட படம் புசுபுசுன்னு அழகா இருக்கு, யானையோட வால் கூட அப்படித்தான் இருக்கு!” என உடையில் இருந்த ஓவியங்களைத் தடவிய அபி குதூகலித்தாள்.

சுபியோ அவளின் புது உடையில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த புலியையும், பச்சை நிறத்தில் இருந்த கங்காருவையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன புள்ளைங்களா அனிமல்ஸ் கலர்லாம் மாறி மாறி இருக்குது, பாக்கவே வித்தியாசமா இருக்கு. எங்க அண்ணனுக்கு இப்படி ஏதாவது வித்தியாசமா செய்யத்தான் பிடிக்கும்” என சலிப்போடு சிரித்தார் அவர்களின் அன்னை மீரா.

“அம்மா, இன்னிக்கு பர்த்டே பார்ட்டிக்கு நாங்க ரெண்டு பேரும் இந்த புது ட்ரஸையேப் போட்டுக்குறோம்மா பாக்க ரொம்ப வித்தியாசமா நல்லாயிருக்கு” என பனிரெண்டு வயது சுபி கூறினாள்.

அதற்கு அவர்கள் தாய் மீராவும் சம்மதிக்க, மாலை பிறந்தநாள் விழாவில் அக்காவும், தங்கையும் புதிய உடையோடு வலம் வந்தார்கள். அபி மற்றும் சுபியின் நண்பர்கள் அனைவரும் வந்ததும் கேக் வெட்டி, மிகச் சிறப்பாக பிறந்தநாளைக் கொண்டாடினர்.

அபி மற்றும் சுபியின் உடலிலும், முகத்திலும் பிறந்த நாள் கொண்டாடியதற்கு சான்றாய் கேக் மற்றும் பழரசம் ஆங்காங்கே ஒட்டியிருந்தன.

“புது ட்ரெஸ்ஸை இப்படி அழுக்கு பண்ணி வெச்சுருக்கீங்களே.. போங்க போய் ரெண்டு பேரும் ட்ரெஸ்ஸை மாத்திட்டு, அழுக்கு ட்ரெஸ்ஸை வாஷிங் மெஷின்ல துவைக்கப் போடுங்க!” என்று சத்தம் போட்டார் மீரா.

“பசங்களத் திட்டாத மீரா, பாவம் அவங்க!” என மகள்களுக்கு பரிந்து பேசிய தந்தை கண்ணன், அவர் கையில் வைத்திருந்த கடைசித் துண்டு கேக்கினைப் பிறந்தநாள் கொண்டாடிய அபியின் முகத்தில் பூசி சிரித்தார்.

பிறந்தநாள் கலாட்டா முடியவும், அபியும் சுபியும் உடை மாற்றிவிட்டு சோர்வுடன் படுத்து உறங்கவும் சரியாக இருந்தது. அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை ஆதலால் இருவரும் சற்று தாமதமாகவே எழுந்தனர்.

பல் துலக்கி, தாய் தயாரித்து வைத்திருந்த பூரி கிழங்கை உண்டுவிட்டு இருவரும் டிவியின் முன்னே ஐக்கியமானர்கள். அதில் அவர்களின் மனதுக்குப் பிடித்த கார்டூனான ‘பெப்பா பிக்’ ஓடிக் கொண்டிருந்தது.

“சுபிம்மா, வாஷிங் மெஷின் துவைச்சு முடிஞ்சதும் அதுல உள்ள துணியை எல்லாம் எடுத்து காயப் போட்டுடும்மா. நானும் அம்மாவும் மார்கெட்டுக்குப் போயிட்டு வரோம்!” என தந்தை கூற, சரியென்று தலையாட்டினாள் சுபி.

வாஷிங் மெஷின் முடிந்ததற்கான சத்தம் வந்ததும், சுபியோடு சேர்ந்து அபியும் அதை நோக்கி ஓடினாள்.

“அக்கா, நான் துணியெல்லாம் எடுத்துத் தரேன் நீ பக்கெட்ல போடு” என ஒவ்வொரு துணியாக குட்டி அபி எடுத்து தர, அதை எடுத்து பக்கெட்டில் இட்டாள் சுபி.

அனைத்து துணிகளையும் எடுத்து முடித்த பின்னர், பக்கெட்டின் ஒருபுறம் அபியும், மறுபுறம் சுபியும் பிடித்து தூக்கிக்கொண்டு தோட்டத்திற்கு விரைந்தனர். தோட்டத்தில் இருந்த மஞ்சள் நிற நைலான் கயிற்றில் ஒவ்வொரு துணியாக அக்கா போட, அதற்கு தங்கை மர க்ளிப் போட்டு மாட்டினாள்.

tshirts
படம் : அப்புசிவா

“அய்யோ அக்கா, என் டீ ஷர்ட்ல இருந்த முயலையும், யானையையும் காணோம்” என மாமா புதிதாக அனுப்பிய டீ ஷர்ட்டை உயர்த்திப் பிடித்துக் காண்பித்தாள் அபி. வெள்ளை டீ ஷர்ட்டில் பொருத்தியிருந்த உருவங்கள் அனைத்தும் மறைந்திருந்தன.

“அச்சச்சோ! என்னோட டீ ஷர்ட்லயும் சிங்கம் கங்காருல்லாம் காணும்டி” என அக்காவும் அவளின் டீ ஷர்ட்டை தேடிப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.

“ஒருவேளை மாமா அனுப்புன டீ ஷர்ட்  சாயம் போயிடுச்சா அக்கா!” என அழ ஆரம்பித்தாள் அபிநயா.

“சரி விடு மாமாக்கிட்ட சொல்லி வேற வாங்கித் தர சொல்லலாம்” என அப்போதைக்கு தங்கையை சமாதானம் செய்தாலும், சட்டையில் இருந்த விலங்குகள் அனைத்தும் அப்படியா சாயம் போகும் என்ற குழப்பத்தோடு இருந்தாள் சுபப்ரியா.

தாயும், தந்தையும் மார்க்கெட்டில் இருந்து வந்ததும் விலங்குகள் சாயம் போன மாயத்தைச் சொல்லி அழுத அபிநயாவை அனைவரும் சமாதானம் செய்தனர். அன்றைய இரவு உணவை முடித்துக் கொண்டு, அக்காவும் தங்கையும் ஒரு அறையிலும், பெற்றோர்கள் வேறு அறையிலும் உறங்கச் சென்றனர்.

இரண்டு கட்டில்கள் ஒன்றன் மேல் ஒன்று இணைத்து, மேலுள்ள கட்டிலில் ஏறுவதற்கு ஏதுவாக ஏணிப்படிகள் வைக்கப்பட்டிருந்தன.

அக்கா மேலுள்ள கட்டிலில் ஏறி படுத்துக் கொள்ள, தங்கை அபி கீழுள்ள கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

‘சே! நம்ம புது ட்ரெஸ் இப்படி வீணாப்போச்சே!’ என அபி சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் கட்டிலுக்கு அடியில் புர் புர்ரென்ற சத்தமும், தம் தம்மென்ற சத்தமும் கேட்டது.

என்ன சத்தம் இது என தைரியசாலியான அபி கட்டிலில் இருந்து இறங்கி கீழே குனிந்து பார்த்து அதிர்ந்து போய் நின்றாள்.

-தொடரும்

கதை : அனுக்ரஹா கார்த்திக்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
4 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments