இதுவரை:

 பெற்றோர் ஊருக்குப் போய் விட்ட நிலையில், நான்கு சகோதர சகோதரிகள் தங்கள் சிறிய தம்பியுடன் விளையாடுவதற்காகச் கடற்கரைக்குச் செல்கிறார்கள். அவர்கள் ஒரு மணல் தேவதையை ஒரு குழிக்குள் இருந்து கண்டெடுக்க, அந்த தேவதை அவர்களுக்கு ஒரு வரத்தை அளிக்கிறது. அந்த வரம் சரியான திட்டமிடுதல் இல்லாததால் வீணாகப் போகிறது. மறுநாள் அடுத்த வரத்தைக் கேட்பதற்காகக் குழந்தைகள் மீண்டும் கடற்கரைக்குச் செல்கின்றனர்.

2. நிறைய தங்கம்!

மறுநாள் காலையிலேயே எழுந்த குழந்தைகள் நான்கு பேரும், கடற்கரையை நோக்கிச் சென்றனர். இந்த முறை குட்டிப் பையன் லேம்ப்பை மார்த்தாவிடமே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். குழியைத் தோண்டி மணல் தேவதையை வெளியே எடுத்தவர்கள் அதனிடம்,

“இன்னிக்கு எங்களுக்கு இரண்டு வரங்கள் தேவை. ஒண்ணு என்னன்னா, நாங்க ரொம்ப பணக்காரங்களா மாறணும், அப்புறம் இரண்டாவது வரம் என்னன்னா எங்க வேலைக்காரம்மாவோட கண்ணுக்கு நாங்க வச்சிருக்குற பணம்அது தெரியக்கூடாது. இந்த ரெண்டையும் செஞ்சு குடு! ப்ளீஸ்!” என்றான் ராபர்ட்.

“பணம்னா எப்படி வேணும்? தங்கமாவா? இல்லை ரூபாய் நோட்டுகளாவா? என்று மணல் தேவதை கேட்க, “தங்கமா தான் வேணும். நிறைய தங்கக் காசுகள், நிறைய, நிறைய!” என்றனர் குழந்தைகள்.

“சரி சீக்கிரம் நீங்க தோண்டியிருக்கிற குழியிலிருந்து தள்ளிப் போங்க.. இப்ப குழி எல்லாம் தங்கக்காசுகளால் நிரம்பப் போகுது” என்றது மணல் தேவதை.

five children

 சொன்னது மாதிரியே ஒரே நிமிடத்தில் பளபளவென்று புதிய தங்கக்காசுகளால் அந்தக் குழி நிரம்பி விட்டது. முடிந்த அளவு தங்கத்தை சேகரித்துத் தங்கள் பைகளில் போட்டுக் கொண்டு நான்கு பேரும் ஊருக்குள் சென்றனர்.

 தாகமாக உணர்ந்ததால் ஒரு கடைக்குள் சென்ற சிரில், நான்கு பாட்டில்களில் குளிர்பானங்கள் வேண்டும் என்று கேட்டான். குளிர் பானங்களைத் தந்த கடைக்காரர் இவன் பணத்திற்குப் பதிலாகக் கொடுத்த தங்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘இது ஏதாவது போலித் தங்கமாக இருக்கும், யாராவது குழந்தைகளுக்கு இவ்வளவு தங்கத்தைக் குடுப்பாங்களா?’ என்று கூறி அதை வாங்க மறுத்துவிட்டார்.

ஆந்த்தியா சிரிலைக் கடிந்து கொண்டு, “இவ்வளவு பணத்தைப் போய் கடைக்காரர்கிட்ட காட்டலாமா? ஒன்னே ஒன்னு தான் குடுக்கணும். இப்பப் பாரு.. நான் அங்கே நிக்குதே, ஒரு குதிரை வண்டி.. அதை வாடகைக்கு எடுக்கிறேன்” என்றாள்.

 அங்கு ஒரு முதியவர் குதிரை வண்டியுடன் காத்துக் கொண்டிருக்க, அவரிடம் போய் ஒரே ஒரு தங்க நாணயத்தைக் கொடுத்து குதிரை வண்டியை வாடகைக்கு எடுத்தாள். நான்கு பேரும் அதில் ஏறிக் கொண்டனர்.

“எங்கே போகணும்?” என்றார் குதிரை வண்டிக்காரர்.

“இதே மாதிரி ஒரு குதிரை வண்டி விலைக்கு வாங்கணும்னா எங்க போகணுமோ, அங்கே போங்க” என்று சிரில் கூறினான்.

“பில்லி பீஸ்மார்ஷ் அப்படிங்கிற ஒருத்தர் நிறைய குதிரை வண்டிகள் வியாபாரம் பண்றாரு.. வாங்க, அவர் கிட்ட கூட்டிட்டுப் போறேன்” என்று அந்த முதியவர் இவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். குழந்தைகள் அந்தப் பயணத்தை மிகவும் ரசித்தனர்.

வண்டிக்காரப் பெரியவரைப் போலில்லாமல் பீஸ்மார்ஷ் என்ற அந்த மனிதர் மிகவும் கடுமையானவராக இருந்தார். “குழந்தைகள் கையில இவ்வளவு தங்கமா? எங்கேயோ திருடிட்டு வந்திருக்காங்க. கதவைச் சாத்து, போய் போலீசைக் கூட்டிட்டு வா” என்று அவரது வேலைக்காரனைப் பணித்தார்.

 “நாங்க ஒண்ணும் திருடல.. இது எங்களுக்கு மணல் தேவதை கொடுத்தது” என்று கூறி, தன் பாக்கெட்டில் இருந்த தங்க நாணயம் மொத்தத்தையும் காண்பித்தாள் ஆந்த்தியா. இதற்குள் கடைப் பணியாள் ஒரு காவலரைக் கூட்டிக்கொண்டு வந்து விட்டான்.

அந்தக் காவலரிடமும் மணல் தேவதை விஷயத்தைக் குழந்தைகள் கூறினார்கள். அவரும் நம்பவில்லை. “வாங்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம், இன்ஸ்பெக்டர் விசாரிப்பார்” என்று கூறி நால்வரையும் வீதி வழியாகக் காவலர் அழைத்துச் சென்றார்.

அப்போது லேம்ப்புடன் கடைக்கு வந்திருந்த மார்த்தா இவர்களைப் பார்த்தாள். “குழந்தைகளா! என்ன போலீஸ் கூடப் போறீங்க?” என்றதும் இவர்கள் தங்கள் கதையைக் கூறி தங்க நாணயங்களைக் காண்பித்தார்கள். ஆனால் மணல் தேவதை கொடுத்த இரண்டாம் வரத்தின் படி மார்த்தாவுக்குத் தான் அந்தத் தங்க நாணயங்கள் கண்ணில் தெரியாதல்லவா,

“ஒன்னும் இல்லையே! ஏன் இப்படி சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் நடந்துக்கிறீங்க ரெண்டு நாளா?” என்று கடிந்து கொண்டு அவளும் குழந்தைகளுடன் காவல்நிலையத்திற்கு நடந்தாள்.

அதற்குள் அந்த நாள் முடிந்திருந்தது. சூரியன் மெல்ல மறையத் துவங்கியிருந்தது. ஸ்டேஷனுக்குச் சென்று காவலர் குழந்தைகளை இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்க, “எங்கே உங்க பாக்கெட்டுகளைக் காட்டுங்க!” என்றார் இன்ஸ்பெக்டர்.

மாலை நேரமானால்  மணல் தேவதையின் வரம் செயலிழந்து விடும்  என்பதால் பாக்கெட்டில் ஒன்றுமே இல்லை. “என்ன? எனக்கு வேலை இல்லைன்னு நினைச்சீங்களா? குழந்தைகளைக் கூட்டிட்டு வந்து பொய் சொல்லிட்டு இருக்கீங்க? போங்க வெளியே!” என்று இன்ஸ்பெக்டர் காவலரையும் பீஸ்மார்ஷையும் கடிந்துகொண்டார்.

“வாங்க போகலாம்! உங்களோட ரொம்ப தொந்தரவா இருக்கு. அம்மா அப்பா சீக்கிரம் வந்துட்டா பரவாயில்லை” என்றபடி குழந்தைகளைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் மார்த்தா. இரண்டாவது வரமும் வீணாகப் போய் விட்டதை நினைத்துக் குழந்தைகள் மிகவும் வருத்தப்பட்டார்கள்.

-தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments