அத்தியாயம் 1

“தாமரை, தாமரை, ஏட்டி தாமரை, என்ன செஞ்சுக்கிட்டிருக்க அங்கன? எப்பப்  பாரு வானத்தையே அண்ணாந்து பாத்துக்கிட்டுக் கெடக்கு கழுதை. வா, வந்து கஞ்சியைக் குடிச்சுட்டு, ஆடு மாடுங்களை வெரட்டிட்டுக் கெளம்பு” என்று சித்தி செண்பகம் குரல் கொடுக்க, ஓடி வந்தாள் தாமரை.

வராவிட்டால், சித்தி செண்பகத்தின் கையில் இருக்கும் பாத்திரமோ, கம்போ தாமரையை நோக்கிக் குறி தவறாமல் பறந்து வருமே? அதற்கு பயந்தே கூப்பிடவுடன் ஓடி வந்து விடுவாள் தாமரை.

கிழிந்த ஆடையும், பரட்டைத் தலையும் அவளைப் பரிதாபமாகக் காட்டினாலும், முகம் மட்டும் பளிச்சென்று இருந்தது தாமரைக்கு. கருணை ததும்பும் கண்கள். தீர்க்கமான மூக்கு. அகலமான நெற்றி. சுருட்டை சுருட்டையாக அடங்காத தலைமுடி. ஒடிசலான போஷாக்கில்லாத  தேகம்.

பாவம் சித்தி செண்பகமும் என்ன தான் செய்வாள்? தாமரையின் அம்மா இறந்த பிறகு, அக்காவின் கணவனுக்கே வாக்கப் பட்டு இந்த வீட்டுக்கு வந்தாள். தனி ஒருத்தியாகப் போராடுகிறாள். வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாள். தாமரையின் அப்பா செந்தில் இப்போது உயிரோடு இல்லை. பக்கத்து டவுனுக்கு வேலைக்குப் போயிருந்தான். ஏதோ கலவரத்தில் போலீஸுக்கும், பொதுமக்களுக்கும் இடையே நடந்த வன்முறையில் அப்பாவியான செந்தில் போன்ற பலர் உயிரை விட்டனர். தாமரையைத் தவிர, சித்திக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் தலைவனை இழந்து தவித்தது.

செண்பகம், ஏதோ வேலைக்குப் போகிறாள். தங்குவதற்குக் குடிசை இருக்கிறது. மூன்று வேளைகள் இல்லையென்றாலும், சில சமயம் இரண்டு வேளைகளும், சில சமயம் ஒரு வேளையுமாவது சாப்பாடு கிடைத்து விடுகிறது.

சித்திக்கு உதவுவதற்காக இப்போதெல்லாம் தாமரையும் கிடைத்த வேலைகளை ஏற்றுச் செய்கிறாள். மூன்றாம் வகுப்போடு பள்ளிப் படிப்பு நின்று போனது. பத்து நாட்களாக அருகில் இருக்கும் காட்டுப் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்கப் போகிறாள்.

இப்போது கஞ்சி குடித்து விட்டுப் போனால் சாயந்திரம் வந்து ஏதாவது சாப்பிடக் கிடைக்கும். சில சமயம் வேலைக்குப் போகும் யாராவது வழியில் தாமரையைப் பார்த்தால் வெள்ளரிப் பிஞ்சு, கொடுக்காப் புளி, கொய்யாக் காய் என்று ஏதாவது கையில் கொடுத்து விட்டுப் போவார்கள். சில நாட்களில் ஒன்றுமே கிடைக்காமல் வயிறு காய்ந்து போய் விடும். தவித்துப் போய் விடுவாள் தாமரை.

“போற‌ எடத்தில பராக்குப் பாத்துக்கிட்டு நிக்காம, ஆடு, மாடுங்களை சூதானமாப் பாத்துக்க. சரியா?” என்று சொல்லிக் கையில் குச்சியைக் கொடுத்து அவளை அனுப்பினாள்.

செண்பகத்திற்கும் அந்தப் பத்து வயதுச் சிறுமியிடம் வேலை வாங்குவது மனதுக்குக் கஷ்டமாகத் தான் இருக்கிறது. ‘என்ன செய்யறது? வயிற்றுப் பசியடைக்க வேறு வழி தெரியவில்லை. கையில நாலு காசு இருந்தா இஸ்கூலுக்க அனுப்பலாம் தான். முடியலையே!’ என்று நினைத்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள் செண்பகம்.

ஒருவழியாகக் கையில் குச்சியுடன் கிளம்பிய தாமரை, அவர்கள் தெருவில் இருந்த பொன்னம்மா ஆச்சி வீட்டில் இருந்த ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு கிளம்பினாள். ஊர்க்கோடியில் ஒரு சின்னக் குன்றின் சரிவில் மாடுகள் மேய நிறையப் பசும்புல் நிறைந்திருந்தது. அருகிலேயே பெரிய வனம்.‌ மலையை ஒட்டி ஒரு சிறிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது.

ஆற்றிலேயே தாகமெடுக்கும் போது கைகளால் அள்ளிக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்வாள் தாமரை. அன்றும் அப்படித்தான் மதிய நேரம் தாகம் நாவை வறட்ட, அந்த ஆற்றின் அருகில் போனாள்.

ஓடும் தண்ணீரில் கைகளை விட்டுத் தண்ணீரை அள்ளி முகத்தை முதலில் கழுவினாள். ஜில்லென்ற தண்ணீர் முகத்தில் பட்டதும் புத்துணர்ச்சி உடலெங்கும் பரவியது.

இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி அருந்தினாள்.

“தாமரை, தாமரை! என்னைக் காப்பாத்து” என்று தீனமான குரல் மிகவும் மெல்லியதாக அவள் காதுகளில் விழ சுற்றும்முற்றும் பார்த்தாள். யாரும் இல்லை. கிளம்பலாம் என்று நடக்க ஆரம்பித்தபோது திரும்பவும் அந்தக் குரல்.

பார்த்தால் ஆற்றுத் தண்ணீரில் அழகான பொன்வண்டொன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. சாதாரணமாக இருக்கும் வண்டுகளை விடக் கொஞ்சம் பெரியதாக இருந்தது. அழகான பொன்னிறம். தகதகவென்று இருந்தது. படபடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டு பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அதன் உடலுக்கு இறக்கைகள் பொருத்தமில்லாமல் சிறியவையாக இருந்தன.

golden 1
படம்: அப்புசிவா

கையால் தூக்குவது கஷ்டமென்று நினைத்து, அருகில் கிடந்த ஒரு பெரிய இலையை எடுத்து, அதன் உதவியுடன் பொன்வண்டை ஜாக்கிரதையாகத் தூக்கினாள்.

“தேங்க் யூ தாமரை. என்னைக் கொஞ்சம் அந்த மரப்பொந்தில விடறயா?” என்று சொன்ன பொன்வண்டின் உடல் நடுங்கியது.

“அட, நீ தான் பேசறயே? நான் யாரோன்னு நெனைச்சேன். ஹைய்யா, பேசற பொன்வண்டு, நான் உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் என்னோட தம்பி, தங்கைக்குக் காமிக்கணுமே!” என்று அந்தப் பத்து வயதுச் சிறுமி தாமரை, ஆனந்தத்துடன் குதித்தாள்.

“என்னை மொதலில அந்த மரப்பொந்தில விடறயா? நான் அதுக்கப்புறம் உன் கூடப் பேசறேன். எனக்குத் தண்ணியில ரொம்ப நேரமாக் கெடந்ததுல உடம்பு ரொம்பக் குளுருது” என்று சொல்லும் போது அந்தப் பொன்வண்டின் குரல் நடுங்கியது.

தாமரை, அந்தப் பொன்வண்டை அந்த மரப்பொந்தில் விட்டு, அதைச் சுற்றிலும் காய்ந்த சருகுகளைப் போட்டாள். தன் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அந்தப் பொன்வண்டைச் சுற்றி‌ வைத்ததால் அதற்குக் கொஞ்சம் கதகதப்பாக உணர்ந்தது.

“யாரு நீ? என்னோட பேர் எப்படித் தெரியும்? உன்னால எப்படி இந்த மாதிரி பேச முடியுது?” என்று கேள்விகளை அடுக்கினாள் தாமரை.

“நான் வந்து ஒரு குட்டி தேவதை. சிலர் என்னை ஜின் அப்படின்னு கூடக் கூப்பிடுவாங்க. சிலர் ஏஞ்சல்னு சொல்லுவாங்க. மேலே அதோ அந்த வானத்தில மேகங்களுக்கு நடுவில என்னோட வீடு இருக்கு” என்றது அந்தக் குட்டி தேவதை.

“வானத்துல வீடு இருக்குன்னா, கீழே எப்படி வந்தே? தேவதைன்னா நிறைய சக்தி இருக்கணுமே? அப்படியும் உனக்கு ஏன் ஆபத்து வந்தது? தண்ணில விழுந்து ஏன் தத்தளிச்சுட்டு இருந்தே?” என்று கேட்டாள் தாமரை.

“அதுக்கெல்லாம் காரணம் என்னோட குறும்புத்தனம் தான். நாங்க சில சமயம் கூட்டமா இராத்திரி நேரத்தில் பூமிக்கு வருவோம். வந்து இந்த மாதிரி வனங்களில் ஆடிப் பாடிப் பொழுதைக் கழிச்சுட்டுக் காலையில் சூரியோதயத்துக்கு முன்னால திரும்பிப் போயிடுவோம்.

போனவாரம் ஒரு நாள் அந்த மாதிரி வந்தபோது நான் ஒரு பொன்வண்டா மாறி இந்த மரப்பொந்தில தூங்கிட்டேன்.

காலையில முழிச்சுப் பாத்ததும் தான் தெரிஞ்சது. எல்லோரும் என்னைத் தனியா விட்டுட்டுக் கிளம்பிப் போயிட்டாங்கன்னு புரிஞ்சது.‌ சரி, இதுவும் நல்லாத் தான் இருக்கு. இப்படியே பொன்வண்டாவே கொஞ்ச நாட்கள் சுத்தலாம்னு இங்கயே இருந்துட்டேன். ஒரு வாரம் நல்லா இங்கயே ஜாலியாச் சுத்திக்கிட்டு இருந்தேன்” என்றது.

“அடுத்த நாள் இராத்திரி உங்க கூட்டத்துல இருந்து வந்துருப்பாங்களே? அப்பக் கூட அவங்க உன்னைக் கண்டுபிடிக்கலையா?”

“சாதாரணமா ஒரு தடவை வந்த இடத்துக்கு உடனே திரும்பி வரமாட்டாங்க.‌ அப்படி அதே இடத்துக்கு வர நெறைய நாட்கள் ஆகும். எப்படியும் எங்க கிட்டத் தான் மந்திரசக்தி இருக்கே? அதுனால ஆபத்தில் இருந்து ஈஸியாத் தப்பிச்சு வந்திருவேன்னு அவங்களுக்கு தைரியம். அப்புறம் எங்க அம்மா, நான் ரொம்பக் குறும்புத்தனம் செய்யறதுனால, இப்படியும் ஒருவிதத்தில் பாடம் கத்துக்கட்டும்னு விட்டுட்டுப் போயிருக்கலாம்” என்றது.

“மந்திர சக்தி இருந்தும் தண்ணில எப்படி விழுந்தே? அதிலேயிருந்து ஏன் உன்னால எழுந்து வர முடியலை?”

“அங்கே தான் இன்னைக்கு அடி வாங்கினேன். காலையில ஒரு குட்டிப் பையன் இங்கே விளையாடிக்கிட்டு இருந்தான். என்னைப் பாத்துத் தொரத்த ஆரம்பிச்சான். நானும் அவனுக்கு விளையாட்டு காட்டறதுக்காக வேணும்னு அவனைச் சுத்திச் சுத்தி வந்தேன். என்னை எப்படியோ பிடிச்சு, என்னோட கொண்டையில் இருந்த மணியைப் பிச்சு எடுத்துக்கிட்டான். அந்த மணியில தான் என்னோட மந்திரசக்தி இருக்கு. அவன் அந்த மணியைப் பிடுங்கும் போது நான், ‘வேண்டாம், என்னை விட்டுரு’ ன்னு கத்தினேன். என் கொரலைக் கேட்டு பயந்து போய்த் தண்ணில என்னைத் தூக்கி எறிஞ்சுட்டான்.

உன்னை இந்த ஒரு வாரமா இங்கே நான் பாக்கறேன். போறவங்க, வரவங்க கூப்பிடறதுல உன்னோட பேரைத் தெரிஞ்சுக்கிட்டேன். நீ எனக்கு உதவி செய்வேன்னு என் மனசுக்குத் தோணுச்சு. நீ மட்டும் என்னோட மணியைக் கண்டுபிடிச்சுக் கொடுத்தேனா, நான் எங்க தேசத்துக்குத் திரும்பிப் போயிடுவேன். உனக்கு சில அபூர்வ சக்திகளை என்னோட பரிசாத் தந்துட்டுப் போறேன். நீ அதை உபயோகிச்சு இந்த ஒலகத்தில் இருக்கற ஜனங்களுக்கு நிறைய நல்லது செய்யலாம்” என்று அந்தக் குட்டி தேவதை சொன்னாள்.

தாமரை யோசிக்க ஆரம்பித்தாள்.

-தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments