தினு என்ற திகம்பர நாயகி. கொஞ்சம் சேட்டை, கொஞ்சம் தைரியம், கொஞ்சம் பாசம் கலந்து செய்த எட்டு வயது சுட்டிப் பொண்ணு. அவளது அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, ஒரு செல்ல அண்ணன்னு அவளோடது ஜாலியான குடும்பம்.

நம் சாதாரண தினு, தில்லான தினுவாக‌ மாறியது ஒரு ஞாயிற்றுக் கிழமையில். அன்று மதியம் கறிக்குழம்பு சாப்பிட்டு, வீட்டில் இருந்த எல்லோருமே டையர்ட் ஆகிப் படுத்திருந்த போது அவளுடைய அப்பா மட்டும் பொங்கலுக்குப் பரணை சுத்தம் செய்து கொண்டிருந்தார். சோர்வு என்றால் என்ன என்று கேட்கும் துறுதுறு தினு வெளியே சுற்றி பக்கத்துல வீடுகளில் யாருமே விளையாட வராததால் அப்பா பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

“தினு.. பாத்து.. உடைஞ்சிரும்..”.

“புதுசா வாங்குனீங்களா அப்பா இந்தப் பானை?”, என்று அந்த அரதப் பழசான மண்பானையைப் பார்த்து கேட்டாள். அவள் வாரப்போவதற்காக வலை விரிப்பதை அறியாமல் அவள் அப்பா குமரன் தன் காலைத் தானே விட்டார், “இது எண்ணூறு வருசமா பத்திரமா இருக்கிற பொருள்!”, அவர் குரலில் ஏகப் பெருமை..

“பழசா.. நான் கூட‌ப் புதுசோன்னு பயந்துட்டேன்!”, என்று வடிவேலு ஸ்டைலில் தினு இழுக்க, குமரன் நறநறவென்று பல்லைக் கடித்தபடி அவள் தலையில் ஒன்று போட்டார்.

தலையைத் தேய்த்தபடியே, “தொப்பி! தொப்பி!”, என்று சிரித்தவள்‌ பக்கத்திலிருந்த பெட்டியைத் திறந்தாள்.

உள்ளே கழுத்து ஆரம், நல்ல தடிமனான வளையல், பச்சை நிறத்தில் பெரிய கல் பதித்த கம்மல் என சில நகைகள் இருந்தன. ஏதாவது பேசி பல்பு வாங்கப் பயந்து குமரன்‌ பக்கத்திலிருந்த விளக்கை எடுத்துத் துடைக்க ஆரம்பித்தார்.

“இதுவும்‌ பழசா பா? புதுசு போல இருக்கு!”.

இதற்கு என்ன கவுண்டர் கொடுப்பாளோ என்று சந்தேகத்தோடு பார்த்தவர், அவள் கண்களில் ஆர்வம் இருப்பதைப்‌ பார்த்து புன்னகையுடன் விளக்க ஆரம்பித்தார்.

“இதுவும் எண்ணூறு வருசத்துக்கு முந்தையது தான்.. என் பாட்டியோட பாட்டியோட பாட்டியோட பாட்டியோட பாட்டியோட பாட்டி திகம்பர நாயகி சொல்வேனே.. அவங்களோடது!”.

“ம்கூம்.. அந்த வில்லியோடதா?”.

“ச்சே.. என்ன பேசுற தினு?”.

“பின்னே அவங்க பேரைத் தானே எனக்கு வைச்சீங்க.. எல்லாப் பசங்களும் எக்சாம்க்கு கஷ்டப்பட்டுப் படிச்சா, நான் என் பேரைப் படிக்கிறதுக்கே கஷ்டப்பட வேண்டியதிருக்கு”.

“ஹாஹா!”, வென தலையைத் தூக்கி சத்தமாக சிரித்தவர், “எங்க அப்பாவோட பாட்டி பேரும் அதான். எங்க அப்பாவுக்கு அந்தப் பேர் ரொம்ப பிடிக்குமா. அதான் உனக்கு வைச்சோம்.”.

“வேற எந்தப் பேரும் கிடைக்கலைன்னா திகம்பரநாயகின்னு பேர் வச்சிடுவீங்களா உங்க குடும்பத்துல? இந்தப் பேர் எழுதுறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?”.

“பாட்டி பேரைக் கேலி பண்ணக் கூடாதுமா.. அவங்க பெரிய ராணி..”

இந்த பாட்டி கதை எடுத்தால் அப்பாவால் முடிக்க முடியாது என்று தினுவுக்குத் தெரியும். “தெரியுமே.. அவங்க பயங்கர தைரியசாலி.. ஒத்தை ஆளாக் கூடப் போரையே ஜெயிச்சிருக்காங்க.. அவங்க இருக்கிற வரைக்கும் அவங்க கிராமத்துல சேரர், சோழர், பாண்டியர் யாராலையும் உள்ளே வரவே முடியலை. கொள்ளைக்காரங்க அந்த ஊர்ப் பக்கமே வர மாட்டாங்க.. வந்தா அவங்க கதை அவ்ளோதான்.. கரெக்டா? போர் அடிக்குதுப்பா”.

“ம்.. அவங்க கதை சொன்னா சின்ன வயசில அப்படி கேப்ப.. இப்போ போரடிக்குது சொல்ற.. போ.. போ.. போய் சின் சான் கதையவே ‘ஆ’ன்னு பாத்துக்கிட்டு இரு..”, பொருட்களைத் துடைத்தபடி கூறியவரைக் கண்டு மூக்கை சுருக்கி முறைத்தவள், “எனக்கு அவங்க கதை பிடிக்கும்பா.. ரொம்பப் பிடிக்கும்.. சும்மா கேலி பண்ணேன்!”, அவர் நிமிர்ந்தும் பார்க்காதிருக்க பெட்டியில் உள்ள பொருட்களை நோண்ட ஆரம்பித்தாள்.

“வாவ்.. இது என்ன அப்பா?”, என்றவள் கைகளில் பச்சை நிற கல் கொண்ட தோடு இருந்தது.

நிமிர்ந்து பார்த்தவர் இந்த கம்மலுக்கு இது ஓவர் எக்சைட்மென்ட் ஆ இருக்கே என்பது போல் ஒரு பார்வை பார்த்து, “கம்மல்!” என்று கூறிக் குனிந்தார்.

அவரைப் பார்க்காமல் தோடையே பார்த்திருந்தவள், “அப்பா.. ப்ளீஸ்.. நான் போட்டுப் பார்க்கவா?”

dhigambara nayagi 1

“அச்சச்சோ.. உனக்கு தங்கம் தவிர எதுவும் ஒத்துக்காது. ஃபன்சனுக்காக ப்ளாஸ்டிக் கம்மல் போட்டுப் புண்ணாகி ஆறுறதுக்காக வேப்பங்குச்சி போட்டிருக்க.. மறந்துட்டியா?”.

“இது தங்கம் தானே?”.

“தெரியலையே.. மஞ்சளா இருக்கு. பித்தளையா இருக்கலாம்; வெண்கலமா இருக்கலாம்..”.

“அப்பா.. ப்ளீஸ்! இன்னைக்கு ஒரு நாள்.. புண்ணாச்சின்னா நாளைக்கே கழட்டி வச்சிடறேன்..”.

“ம்ம்.. ஆனா ரொம்ப பத்திரம் தினு.. இது”, என்று ஆரம்பித்தவரை நிறுத்தி, “உங்க பாட்டியோட பாட்டியோட பாட்டியோட தாத்தாவோட பாட்டியோட பாட்டியோட கம்மலை நான் பத்திரமா வச்சிப்பேன்.. கவலையேபடாதீங்க.. ரைட்?”, என்றபடி தோடைத் தன் காதுகளில் அணிந்தாள்.

ரெண்டாவது தோடின் திருகாணியின் கடைசி சுற்றை முடிக்கும்போது “ஸ்.. அப்பா.. ஷாக் அடிக்குது..”, என்றாள்.

“ரொம்ப நேரமா உட்கார்ந்திருக்க இல்ல.. அதான் கால் மரத்துப் போயிருக்கும்..”.

“கால் மட்டும் இல்லைபா.. உடம்பு ஃபுல்லா ஷாக் அடிச்சது..”.

நிமிர்ந்து அவளைச் சுற்றியும் பார்த்தவர், இரண்டடி தள்ளி இருந்த ப்ளக் பாயிண்ட்டைப் பார்த்துவிட்டு, “நீ காலையில சீக்கிரம் எழுந்திருச்சிட்ட இல்ல.. போய்க் கொஞ்ச நேரம் தூங்கேன்..”, என்றார்.

“ம்கூம்.. எனக்கு தூக்கம் வரலைபா”, என்று தலையை அசைத்தவள் தன் நோண்டல் வேலையை இன்னும் தொடர்ந்தாள்.

அன்று இரவு சமையலறையில் தோசை வார்த்துக் கொண்டிருந்த தினுவின் அம்மா பார்கவியின் காதில் ஹாலில் இருந்து வந்த, ” அம்மா.. இன்னும் ஒரு தோசை!”, என்ற தினுவின் குரல் வந்து சேர்ந்தது. எப்பவும் ரெண்டு தோசை சாப்பிட்டு ஓடுற பொண்ணு இன்று நாலு சாப்பிட்டு ஐந்தாவது கேட்கிறாளே என்று வியந்தவர், ஒரு வேளை சட்னி இன்னைக்கு ரொம்ப டேஸ்ட்டோ என்று எண்ணியபடிச் சட்னியில் விரலை வைத்து வாயில் வைத்தார். இல்லையே.. எப்போதும் போலத் தானே இருக்கு.. என்று யோசிக்கும் போது “அம்மா.. எனக்கும் ஒரு தோசை!”, என்று கௌதமின் குரல் வர, “அது சரி.. ஏதோ போட்டி போட்டு சாப்பிடுதுங்க போல..”, என்று முணுமுணுத்தபடி வெந்த தோசையைத் திருப்பிப் போட்டார்.

சாப்பிட்ட சில நேரம் விளையாடிய தினு சீக்கிரமாகவே, “டையர்டா இருக்குமா!”, என்று கூறியபடித் தூங்கி விட்டாள்.

ஆழ்ந்த தூக்கத்தின் போது திடீரென்று அந்த அறை முழுக்க ஒரு அருமையான வாசம் நிறைந்தது போல் இருக்க தினு மூச்சை ஆழ உள்ளிழுத்தாள். என்ன வாசம் இது? எங்கேயிருந்து வருகிறது? மெல்ல கண் விழித்தவள் கண்கள் ஆச்சர்யத்தில் அகல விரிந்தன.. ‘இது என்ன இடம்.  பெட்ரூம்தானா..’. பார்க்க அப்படித் தான் இருந்தது. ஆனால் பீரோ செல்ஃப் எல்லாம் இல்லாமல் அறை முழுக்க பிங்க், மஞ்சள் நிறத்தில் சிறுபூக்கள் கொண்ட கொடிகள் படர்ந்திருந்தன. நடுவே மர இருக்கையில் ராணி போல ஒருவர் அழகாய் வீற்றிருந்தார்.

“நீ.. நீங்க யாரு? நான் எங்கே இருக்கேன்?”, திகைத்து சுற்றும் முற்றும் பார்த்தவளைக் கனிவாய்ப் பார்த்த அந்தப் பெண் சொன்னாள், “பயப்படாதே.. நான் திகம்பர நாயகி.. “.

“என்னது?”, என்று துள்ளி எழுந்தவள், “நான் இறந்துட்டேனா? சொர்க்கத்துக்கு வந்துட்டேனா?”, குரலில் பயத்துடன் கேட்டாள்.

“இல்லை செல்வமே! யானே உன் குடில் வந்துள்ளேன்..”.

“என்ன? புரியலை!”, கண்களைக் கசக்கினாள்.

புன்னகை புரிந்து, “உன் தமிழிலேயே சொல்கிறேன். நான்தான் உன் வீட்டிற்கு வந்திருக்கேன்.”.

நம்பாமல் அவரைப் பார்த்தவள் பின் ஆச்சர்யமாக “ஓ.. நீங்க திகம்பர நாயகின்னா, அப்பா எப்போதும் சொல்வாங்களே, அவங்களா?”.

“ஆமாம்.. உன் பாட்டியின் பாட்டியின் பாட்டியின் பாட்டியின்…”

“போதும்.. போதும்.. புரிஞ்சது.. அப்பா உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்காங்க.. நீங்க சூப்பர் லேடி பாட்டி.. எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். ஆமா எதுக்கு வந்திருக்கீங்க?”.

“நீ போட்டிருப்பது என்னோட காதணி.. அதாவது கம்மல்!”.

“அடக்கடவுளே.. நீங்க சைந்தவியை விட ரொம்பக் கறார் பார்ட்டியா இருக்கீங்க!”.

“என்ன?”.

“என் பெரியம்மா பொண்ணு பாட்டி.. ரொம்பக் கறாரா இருப்பா.. அவ பொருளை ஷேர் பண்ணவே மாட்டா.. அது மாதிரி நீங்க 800 வருசத்துக்கு முன்ன விட்ட கம்மலுக்காக வந்திருக்கீங்க.. தப்பு பாட்டி!  ஷேரிங் இஸ் கேரிங்.. தெரியுமா?”, என்று முதலில் கோபமாய் ஆரம்பித்து இறுதியில் பாடம் எடுக்கும் தொனியில் முடித்த பேத்தியை கண்களைச் சுருக்கி முறைத்தவர், “வாயாடி.. நான் காதணியைக் கேட்டு வரவில்லை. இந்தக் காதணி உனக்குக் கிடைச்சதில் சந்தோசம்னு சொல்ல வந்தேன்..”.

“அப்படியா.. அப்ப சூப்பர். நீங்க சூப்பர் பாட்டிதான்”.

“தினு.. நான் சொல்றதைக் கவனமாகக் கேள். இந்தக் காதணி சாதாரணமானது இல்லை. இதில் அதீத சக்தி இருக்கு.”.

“என்ன இருக்கு?”.

“அது.. அது.. ம்.. சூப்பர் பவர் இருக்கு..”.

“சூப்பர் பவரா?”.

“ஆமாம். இதைப் போட்டவங்களுக்கு பவர் கிடைக்கும்?”.

விரல்களால் கம்மலைத் தொட்டுப் பார்த்தபடி, “என்ன சக்தி பாட்டி?” என்றாள்.

“ம்.. தெரியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு சக்தி கொடுக்கும்..”.

சிறிது யோசித்தாள் ஏதோ புரிந்தது போலத் தலையை நன்கு ஆட்டி “ஓ.. இந்தக் கம்மல் போட்டு அந்தப் பவர் வச்சித் தான் நீங்க எல்லாப் போரிலேயும் கலந்துகிட்டு, சண்டை போட்டு ஜெயிச்சீங்களா?”, என்றாள்.

“ம்கூம்.. இந்தக் காதணி போடலைன்னாலும் என் நாட்டு மக்களுக்கு ஒரு துன்பம் வருவதா இருந்தா நான் எந்தப் போரிலும் கலந்திருப்பேன்; சண்டை போட்டிருப்பேன்; எல்லாவற்றிலும் ஜெயிச்சது வேணும்னா இந்தக் காதணியினால் இருக்கலாம்.”.

கெத்தாகக் கூறியவரைப் பார்த்து, “ஐ.. பாட்டி.. சும்மா சீன் போடாதீங்க.. ஜெயிப்போம்னு தெரிஞ்சா தானே தைரியமா சண்டைக்குப் போனீங்க..”, என்று கேலி செய்தவளை கண் மூடிப் பார்த்து, “தோற்போம்னு தெரிஞ்சா கூட சில இடத்தில் தைரியமா சண்டை போடணும் மகளே.. உன்கிட்ட அந்தக் குணம் இருக்கு. அதான் இந்தக் காதணி உனக்கு கிடைச்சிருக்கு. எல்லோர் கண்ணிலும் அது படாது. அது யாரைத் தேர்ந்தெடுக்குதோ, அவங்களால் மட்டும்தான் காதணியை எடுத்துப் போட முடியும்.”.

“ஓ!” என்று கண்களை பொன்வண்டின் அளவுக்கு விரித்துத் தலையாட்டியவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“தினு எருமை.. எந்திரி.. மணி எட்டு ஆச்சி..”.

“என்ன பாட்டி.. திடீர்னு திட்டுறீங்க?”.

“நான் இல்லை”, என்று அவர் கூறும்போதே, அந்த அறை ஜன்னல் படாரென்று திறக்க உள்ளே வந்த சூரியனின் வெள்ளை ஒளியில் அறையில் நிரம்பியிருந்த பச்சை ஒளி விலக அதோடு நாயகியின் உருவமும் மறைந்தது.

சட்டென்று கண் விழித்த தினு முன்னே, பார்கவி முறைத்தபடி நின்றிருந்தார்.

“அ.. அம்மா.. பா.. பாட்டி.. க.. கம்மல்..!”, என்று திணறியவளைப் பார்த்து, “சிவாஜி மாதிரி ஆக்டிங் பண்ணாம எழுந்து பல்லைத் தேய்..” என்றவர் விரட்ட, தினு தன் காதில் உள்ள கம்மலில் கை வைத்தாள்.

“எல்லாமே கனவா.. கனவு போலவே இல்லையே.. நிஜமாவே இதில் சூப்பர் பவர் இருக்கா? என்ன பவர் இருக்கும்?”, என்று யோசித்தவள் சில நொடிகளில் கண்களில் குறும்பு ஜொலித்திட, “கண்டுபிடிச்சிட்டாப் போச்சி” என்றபடி தோள்களைக் குலுக்கினாள்.

தினுவோடு சேர்ந்து அவளுக்கு என்னென்ன சூப்பர் பவர் கிடைச்சிருக்கு.. அவற்றைக் கொண்டு அவள் என்ன செய்கிறாள்னு அடுத்த இதழில் பார்ப்போமா? பை குட்டீஸ்…

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments