kannadiyin kavalai

ஒரு காட்டுக்குள் ஒரு மாயாஜால அரண்மனை இருந்தது. அந்த அரண்மனையில் இருந்த அனைத்துப் பொருட்களும் உயிருள்ள மனிதர்களைப் போல வாழும் சக்தியைக் கொண்டிருந்தன.

அரண்மனையை விட்டு வெளியேறினால் அவற்றின் சக்தி மறைந்து சாதாரண பொருட்களாகிவிடும். அதே போல அரண்மனைக்குள் வேறு புது பொருட்கள் வந்தாலும் அவற்றிற்கும் உயிர் வந்துவிடும்.

அரண்மனைக்குள் இருந்து வரும் வினோத சத்தத்தின் காரணமாக, ஊர் மக்கள் அனைவரும் இதை பேய் அரண்மனை என்று நினைத்துக் கொண்டனர். காட்டுக்குள் வேறு இருப்பதால் பல வருடங்களாய் பயத்தில் இந்தப் பக்கம் எவரும் வருவது கிடையாது.

நெடுங்காலமாய் அது பூட்டப்பட்டுத் தான் கிடக்கிறது. ஆகவே அரண்மனைக்குள் இருந்த பொருட்களும் சந்தோஷமான ஒரு வாழ்க்கைச் சூழ்நிலைக்கு பழகி இருந்தன.

அங்கேதான் ஒரு கண்ணாடியும் வாழ்ந்து வந்தது. அந்த அரண்மனையில் இருந்த அத்தனை பொருட்களும் தினமும் தன்னைத்தானே அழகு படுத்திக் கொண்டு வந்து, கண்ணாடியின் முன்பு நின்று தங்களை ரசித்துக் கொள்ளும்.

கண்ணாடிக்கு சில நாட்களாக ஒரு முறையாவது தன்னைத் தானே பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. இந்தக் கண்ணாடிக்கு மாற்று கண்ணாடி அங்கே எதுவும் இல்லை.

கண்ணாடி வெளியே சென்றால் அதன் மாயசக்தி மறைந்துவிடும், வேறு ஒரு கண்ணாடியை உள்ளே கொண்டு வர வேண்டுமென்றால் அரண்மனையிலிருந்து யாராவது ஒருவர் வெளியே போக வேண்டும்.

அரண்மனைக்குள் வாழும் இந்த சந்தோஷமான வாழ்க்கையை விட்டு வெளியே போய் வாழ்க்கையைத் தொலைக்க மற்ற பொருட்களுக்கு விருப்பமில்லை. அதனால் கண்ணாடியின் கவலை தெரிந்தும் அதை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டன அனைத்து பொருட்களும்.

ஏக்கத்தால் கண்ணாடியின் முகம் நாளுக்கு நாள் பளபளப்பை இழந்து கொண்டே போனது. தினமும் முகம் பார்த்து மகிழ்ந்த மற்ற அத்தனைப் பொருட்களும், கண்ணாடியில் முகம் பார்க்க முடியாமல் வருத்தத்திற்கு உள்ளாகியது.

இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட, அன்று இரவு அரண்மனையில் இருந்த அனைத்துப் பொருட்களும் ஒன்றாக ஒரு கூட்டம் போட்டன. அரண்மனையிலேயே பெரிய உருவம் கொண்டவராகிய கட்டில்தான் அவர்களின் தலைவர், அலமாரி உபதலைவர்.

தலைவர் கட்டில் கூட்டத்தின் நடுவே வந்து, “நம்ம கண்ணாடி தம்பிக்கி தன் முகத்தை பார்க்க முடியலனு ரொம்ப கவலை, அவனுக்காக எல்லாரும் யோசிச்சு ஏதாவது ஒரு ஐடியா சொல்லுங்க” என்றது.

சோஃபா மாமா, “இந்த டிவி தாத்தாவும் ஒருவிதக் கண்ணாடியால ஆனவர்தான, இதுல அவன் முகத்தை பாக்கலாம்ல?” என்றதும்,

டிவி தாத்தா, “நானே பாதி உடைஞ்சு போய் கிடக்குறேன், கீறல் விழுந்த என் முகத்துல எப்படி அவன் முகம் தெரியும்?” என்றார்.

மேஜை அண்ணன், “அப்படினா நாம இந்த குக்கர், தட்டு, பால் பாத்திரம் மாதிரி சில்வர் பொருளை எல்லாம் நல்லா துடைச்சு பளபளப்பாக்கலாம். அதுல அவன் முகம் தெரிய வாய்ப்பு இருக்கு” என்று சொன்னது.

தலைவருக்கும் அதை விட்டால் உருவத்தை பிரதிபலிக்கும் வேறு பொருள் இந்த அரண்மனையில் இல்லை என்று தோன்றியதால், பெரிய சைஸ் சில்வர் பொருட்களை எல்லாம் உடனடியாக துடைக்க உத்தரவிட்டார்.

அலமாறியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகள் எல்லாம் அடுத்த நொடியே பறந்து வந்து, சில்வர் பாத்திரங்கள் அனைத்தையும் அழுத்தி அழுத்தி துடைக்க ஆரம்பித்தது.

வலி தாங்க முடியாமல் பாத்திரங்கள் அனைத்தும் அழ ஆரம்பித்தன..

தன் உறவினர்கள் அனைவரும் வலியால் துடிப்பதைக் கண்டதும் குட்டி டம்ளர் ஒன்று, “போதும் நிறுத்துங்க..” என்று கத்தியபடியே கூட்டத்தை முட்டிக்கொண்டு முன்னால் வந்தது.

அனைவரும் அந்த டம்ளர் பாப்பாவையே பார்த்துக் கொண்டு நின்றனர்.

டம்ளர் பாப்பா கோபத்தில் மூக்கு விடைக்க, “நாங்க பல வருஷமா தண்ணியே படாம வாழ்ந்துட்டோம், இப்போ வந்து எங்கள இப்டி அழுத்தி அழுததி துடைச்சா கண்டிப்பா எங்களுக்கு பளபளப்பு வராது” என்றது.

தலைவராகிய கட்டில், “உடனே வராதுதான், தொடர்ந்து ஒரு வாரம் துடைச்சா கண்டிப்பா பளபளப்பு வந்திடும் பாப்பா” என்றார்.

“ஒரு வாரமா?” என்று அத்தனை சில்வர் பாத்திரங்களும் அதிர்ச்சி அடைய,

டம்ளர் பாப்பா, “கண்ணாடியோட கவலைய இன்னிக்கி ராத்திரியே தீர்க்க எங்கிட்ட வேற ஒரு வழி இருக்கு” என்றது.

அதைக் கேட்டதும் கட்டில் முதல் குண்டூசி வரை அனைத்து பொருட்களும் டம்ளர் பாப்பா என்ன சொல்லப் போகிறது என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

டம்ளர் பாப்பா, “தண்ணீர் மூலமா கண்ணாடியோட முகத்தைப் பார்க்க வைக்கலாம்” என்றதும் அரண்மனையிலிருந்த அத்தனை பாத்திரங்களும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

அதன் காரணம் அந்த வீடு தண்ணீர் வசதி இல்லாத வீடு, இதற்கு முன் அந்த அரண்மனையில் குடியிருந்தவர்கள், அரண்மனைக்கு வெளியே இருக்கும் குளத்தில் இருந்து தான் நீரை எடுத்து வந்து பயன்படுத்தினார்கள்.

டம்ளர் தண்ணீர் வேண்டும் என்று சொன்னதும், ‘அதையும் வெளியிலிருந்து தானே எடுத்து வர வேண்டும், அதற்கு பதிலாக இன்னொரு கண்ணாடியையே கொண்டு வந்து விடலாமே. டம்ளர் பாப்பாவுக்கு யோசிக்கவே தெரியவில்லை..’ என்று நினைத்து அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் டம்ளர் பாப்பா அனைவரும் சிரித்து முடிக்கும் வரையில் தெளிவான முகத்தோடு காத்திருந்தது. அந்த தெளிவு உப தலைவராகிய அலமாரிக்கு புரிந்தது.

அலமாரி, “பாப்பா, தண்ணிய நம்மால உள்ள கொண்டு வர முடியாதுனு உனக்கே தெரியும்ல?” என்று கேட்டார்.

டம்ளர், “தண்ணிய நாம தேடிப்போக வேண்டியது இல்ல, நம்மளத் தேடி தண்ணியே வரும்” என்றதும் இதுவரை சிரித்துக் கொண்டிருந்த அத்தனை பேரின் சிரிப்பும் நின்றுவிட்டது.

டம்ளர் பாப்பா, “ஆமா, இன்னிக்கி காலையில இந்த ரேடியோ அண்ணன்ட்ட பாட்டு கேட்டுட்டு இருந்தேன். அப்ப நியூஸ் வந்துச்சு. நம்ம ஊர்ல ஏதோ பெரிய புயல் வரப்போகுதுனு அதுல சொன்னாங்க. இந்த நேரத்துல நாம மொட்டை மாடிக்குப் போய், நிறைய தண்ணீர் பிடிச்சு கண்ணாடி மாமாவுக்கு முகத்தை பார்க்க உதவி செய்யலாம்” என்று சொன்னது.

டம்ளரின் சாதுரியம் கண்டு வியந்த அத்தனைப் பொருட்களும் கைதட்டி பாராட்டின.

அனைவரும் எதிர்பார்த்தது போலவே அன்று இரவு இடியுடன் கூடிய பெரிய மழை பொழிந்தது. நீர் நிரம்பும் வசதி கொண்ட அனைத்து பொருட்களும் வரிசை வாரியாக மொட்டை மாடிக்குச் சென்று மழையால் நீரை நிரப்பிக் கொண்டு வந்தன.

கண்ணாடிக்கு எதிரில் ஒரு பெரிய வெங்கல அண்டா வைக்கப்பட்டு, அதில் சுத்தமான மழை நீர் நிரப்பப்பட்டது. அனைவரது உழைப்பினாலும் வெகு விரைவில் அண்டா நிறைய, கண்ணாடி ஆசையோடு வந்து தன் முகத்தைப் பார்த்தது.

kannadi
படம்: அப்புசிவா

தங்கத் தகட்டால் ஃப்ரேம் போடப்பட்டு, அதிலும் அலங்காரத்திற்கு என ஆங்காங்கே வைரங்கள் வைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது அந்த கண்ணாடி.

ஆசை தீர தன் முகத்தைப் பார்த்து முடித்ததும், “ரொம்ப நன்றி நண்பர்களே.. இன்னிக்கி எனக்காக நீங்க அத்தனை பேரும் ரொம்பவே கஷ்டப்பட்டு வேலை செஞ்சீங்க. என் முகத்த நான் முதல் தடவை பார்த்தேன்ற சந்தோஷத்த விட, எனக்காக நீங்க எல்லாரும் ஓடியோடி வேலை பார்த்ததுதான் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. இனி நானும் உங்களுக்காக சந்தோஷமா இருப்பேன்” என்றது.

சொன்னதைப் போலவே அது சந்தோஷமானதும், அதன் பளபளப்பும் பழையபடி மெருகேறியது.

பளபளப்பு மெருகேறியதும் மற்ற பொருட்களும் மகிழ்வாக தம்மை அழங்கரித்துக் கொண்டு கண்ணாடியில் தம் அழகை ரசித்தன. மீண்டும் அவ்வரண்மனையில் அனைவரும் மகிழ்வாக இருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
14 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments