இப்போது நாம் பல கோடி வருடங்களுக்கு முன்,அதாவது பூமியில் மனிதர்கள் எல்லாம் உருவாகியதற்கு முந்தைய காலத்தில் இருக்கிறோம். அப்போது நம் நிலா இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு பெரியதாகவும் இன்னும் பிரகாசமாகவும்‌ இருக்கும். (‘வாட்?’  என்றா கேட்கிறீங்க? அச்சோ!  நீங்க இன்னும் நம்ம கற்பனை உலகத்தில் குதிக்கலையா?)

 நிலாவும் பூமியும் இப்போது போலவே அப்போதும்  இணைபிரியாத நண்பர்கள். நிலாவே அத்தனை அழகாக இருக்கும் போது பூமியைச் பற்றிச் சொல்லவா வேண்டும். நம் பூமி  தன் உயிராற்றல் காரணமாக  விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். பச்சை பசேலென்று காடுகள், அந்தக் காடுகளுக்கு பார்டர் கட்டியது போல மலைகள், அதைச்சுற்றி நீல நிறத்தில் எங்கும் கடல், வான்வெளியில் மிதக்கும் பஞ்சு போன்ற மேகங்கள், கீச் கீச் என்றும் கர்முர் என்றும்  உயிர்களின் சத்தம் என்று மனதைக் கொள்ளை கொள்ளும். 

 பூமியின் உயிராற்றல் கண்டு  விண்வெளியில் உள்ள மற்ற விண்கற்களுக்கு எல்லாம் ஒரே பொறாமை. எப்படியாவது பூமியின் உயிர் ஆற்றலை அழிக்க வேண்டும்  என்று முடிவு செய்தார்கள். அதற்கு என்ன செய்வது என்று கூடி ஆலோசனை செய்தார்கள். அந்தக் கூட்டத்தில், பூமியில் பெரிய வெடிப்பை உண்டாக்கி, புகை மூட்டத்தால் பூமியைச் சூழ்ந்து பூமியின் உயிர் ஆற்றலை ஒன்றும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

அந்த முடிவின்படி பல பெரிய விண்கற்கள் பூமியை நோக்கி வந்தன. ஆனால் நம் பூமி என்ன நோஞ்சானா? தன் சக்தியால் அந்த கற்களை எல்லாம்  தன்மேல் வந்து விழும் முன்னே,    எரித்துச் சாம்பலாக்கியது. இந்தப் போர் பல ஆண்டுகள் நீடித்தது.

  கடைசியில் அந்த விண்கற்களுக்கெல்லாம்  தலைவனான ஒரு பெரிய விண்கல் தானே களத்தில் இறங்கியது. அதன்படி வேகமாக பூமியை நோக்கியும் வந்தது. எப்போதும் வரும் கற்களை விட இது மிகவும் பெரியது.

நம்‌ பூமி‌யோ சோர்ந்து விட்டது! ‘அவ்வளவுதான்! இத்தனை பெரிய கல்  விழுந்தால் பூமியில் பெரிய வெடிப்பு உண்டாகும்; அந்த புகை மூட்டத்தில் சூரிய ஒளி பூமிக்கு வர முடியாது; சூரிய ஒளி இல்லாமல்  நம் மேல் இருக்கும் உயிர்கள் அனைத்தும் அழியப்போகின்றன!’ என்று பூமி முடிவு கட்டிய சமயம், யார் உதவிக்கு வந்தார்கள்? கரெக்ட்! நம் நிலா நண்பன் தான்!

 தன்னுடைய சக்தியைக் கொண்டு பூமிக்கு உதவி செய்தது நிலா.  பயங்கரமான சண்டை! தன் சக்தியை எல்லாம் திரட்டி நிலா சண்டையிட அந்தக் கல்லோ நிலாவிடம் தோற்று விட்டது. 

Muthu Muthai
படம்: அப்புசிவா

தோற்ற அந்தக் கல் வேறு பக்கமாகப் போய் விட்டது. ஆனால், அந்தோ பரிதாபம்! பயந்து ஓடும்போது,  தன்னுடைய பெரிய பகுதியை நிலாவின் மேல்  தூக்கி வீசிவிட்டுப் போனது அந்த மோசமான கல்! அந்தப் பெரும்பாறை விழுந்ததில், நிலாவின் பகுதி உடைந்து பூமியில் உள்ள கடலில் ஒரு பெரிய பள்ளத்தில் வந்து விழுந்து விட்டது.

அந்தப் பெரிய மோசமான கல்லின்  தாக்குதலிலிருந்து, பூமியில் உள்ள உயிர்களெல்லாம் பிழைத்துவிட்டன என்பதில் நிலாவிற்கு சந்தோஷமே!

 ஆனால் பூமிக்குத்தான் ஒரே கவலை. தனக்காகப் போராடி தன் நண்பன் காயம்பட்டு, அது பெரிய தழும்பாகிவிட்டதே!  நிலாவைப் பார்த்து பூமி சொன்னது, “நண்பா! வா..  நாம் கடல் ராசா திமிங்கலத்திடம் சென்று உதவி கேட்கலாம்!” என்றது.

 அவர்கள் திமிங்கலத்திடம் வந்து தங்களுக்குத் தீர்வு கேட்ட அதே   நேரத்தில், ராஜாவிடம் பல கடல் விலங்குகள் வந்தன. “ராஜா.. இந்த நிலாப்பாறை கடலின் ஆழத்தில் விழுந்ததிலிருந்து, எப்போதும் இருட்டாக இருக்கும் கடலின் ஆழம், எப்போதும் பிரகாசமாயிருக்கிறது. எங்களால் தூங்கவே முடியவில்லை. எப்படியாவது இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்!” என்று முறையிட்டனர்.

என்ன செய்வது என்று யோசித்த திமிங்கல ராஜாவிடம் நிலா, “ராஜா! யாராவது என்னுடைய துண்டத்தை எடுத்து கொண்டு கரைக்குக் கொண்டு வந்தால், நான் அதை எடுத்துக் கொள்வேன்..” என்று சொன்னது.

“அத்தனை பெரிய நிலாத் துண்டத்தை ஆழத்திலிருந்து எப்படி கொண்டுவருவது?”

“யாராவது சின்னச் சின்னதாகப் பிய்த்துக் கொண்டு வந்தாலும் எனக்கு ஓகே தான்..”

ஆமை முன்னே வந்து, “மின்கள் எல்லாம் ரொம்ப சாஃப்டாக இருக்கும். பாறையைத் தூக்க முடியாது. என்னால் நிலாப்பாறையைச் சிறிது சிறிதாக முதுகில் வைத்துக் கொண்டு போக முடியும்” என்றது.

“ஆனால்.. ஏதாவது மூடி போட்டுக் கொண்டு போனால்  நலமாயிருக்கும்.. இல்லையென்றால் வழியில் இருப்பவர்களுக்கெல்லாம் கண் கூசுமே” என்று சொன்னது கடற்குதிரை.

“அப்போ, நான்தான் இதற்கு சரியான ஆள். நிலாப்பாறையைச் சின்னச் சின்னதாய் எனக்குள்ளே மூடி போட்டு வைத்துக் கொண்டு கரைக்குக் கொண்டுபோய்த் தருகிறேன்..” என்றது சிப்பிகளின் தலைவன்.

“நல்ல யோசனை தான்! ஆனால் உனக்கு நீந்திச் செல்வதற்கு துடுப்பு இல்லையே?” என்று சுறா மீன் நக்கலாய்க் கேட்க, நிலா சொன்னது, “அது ஒன்றும் பிரச்சனை இல்லைப்பா.. நான் என் சக்தியால் கடலில் அலைகளை வர வைக்கிறேன். சிப்பிகள் அந்த அலைகளில் ஏறி பயணம் செய்து கரைக்கு வந்துவிடலாம்.”

அதுவே சரியெனப் பேசி‌ முடிவு செய்தார்கள். அவர்கள் திட்டத்தின்படி சிப்பிகள் சிறிது சிறிதாக நிலாப்‌பாறையைக் கடித்து தங்களுக்குள் வைத்துக் கொண்டு அலை மேல் ஏறிக் கரைக்கு வர, நிலா தன் துண்டங்களைச் சிறிது சிறிதாக சேர்த்து வருகிறது. இது பல வருடங்களாக நடந்தும் வருகிறது.

  புரிந்ததா குட்டீஸ்? அப்படி சிப்பிகள் தங்களுக்குள் கடித்து வைத்திருக்கும் நிலாவின் சிறு துண்டுகளை மனிதர்கள் எடுத்துச் செய்வதுதான் உங்கள் கழுத்திலும் காதிலும் பிரகாசிக்கும் முத்துமணிகள்.

 அது போல கடற்கரையோரத்தில் எங்கும் சிதறிக்கிடக்கும் சிப்பிகள் அந்த நிலாத் துண்டங்களை வெற்றிகரமாக நிலாவிற்கு கொண்டு வந்த நம்‌ சிப்பி வீரர்கள். 

ஹாஹா..‌ நன்றாக இருந்ததா இந்தக் கற்பனைக் கதை! இப்போது சிப்பிக்குள் முத்துக்கள் எப்படி உருவாகின்றன என்பதற்கான அறிவியல் காரணத்தை தெரிஞ்சுக்கோங்க!

சிப்பிகள் மொலஸ்க் என்ற மெல்லிய உடலையும் இரு ஓடுகளையும் கொண்ட ஒருவகைக் கடல் பிராணி. அது உணவு உண்ணுவதற்காகவோ, நீரின் ஆக்ஸிஜனை எடுப்பதற்காவோ, தன்‌ ஓடுகளைத் திறக்கும் போது எப்போதேனும் சிறு ஒட்டுண்ணிகள், எரிச்சலூட்டிகள் ஓடுகளுக்குள் சென்று விடுகின்றன. அந்த ஒட்டுண்ணிகள்/ எரிச்சலூட்டிகளிடமிருந்து தன்னைக் காக்க, சிப்பி அதைச்‌சுற்றி ஒரு திரவத்தைச் சுரக்கிறது. கால்சியம் கார்பனைட் என்ற படிகமும் கொன்சியோலின் என்ற பசையும் அதிகமுள்ள‌ அந்த திரவம் அந்த வெளிப்பொருள் மீது படிகிறது.‌ இப்படியே அந்த உயிர் மேலும் மேலும் திரவத்தைச் சுரந்து அந்த வெளிப்பொருளின் மேல் பூசுகிறது. நாளடைவில் இது பல அடுக்குகளாக படிந்து முத்தாக உருவாகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments