ரோஜாத் தோட்டம் தெரிந்தது!

பூட்டப்பட்ட அந்தப் பழைய கதவைப் பார்த்த உடனேயே இது தான் அந்த ரகசியத் தோட்டத்தின் வாசல் என்று மேரிக்கு உறுதியாகத் தெரிந்து விட்டது. கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். நல்ல வேளையாக யாரும் அருகில் இல்லை, அதனால் அவள் உள்ளே நுழைந்ததை யாரும் பார்க்கவில்லை. ரொம்ப நாளாக யாருமே அங்கு நுழையாததால் அந்தத் தோட்டமே புதர்கள் வளர்ந்து, நிறைய இலைகளும், குப்பையுமாகக் காட்சியளித்தது. பல இடங்களில் ரோஜாச் செடிகள் காய்ந்து போய் நின்று கொண்டிருந்தன. தரையில் காட்டுச் செடிகளும் காய்ந்த புற்களும் மண்டிக்கிடந்தன.

ரோஜாச் செடிகளை உற்றுப் பார்த்ததில் அவற்றில் கொஞ்சம் கொஞ்சம் உயிர் இருப்பது போல மேரிக்குத் தோன்றியது. மெதுவாக தோட்டத்தைச் சுற்றி ஒரு முறை நடந்து வந்தாள். இது யாருக்குமே தெரியாத, அவளுக்கே அவளுக்கான தனி இடம். அதை அழகு படுத்த வேண்டும் என்று விரும்பினாள். இங்கொன்றும் அங்கொன்றுமாக சில கல் இருக்கைகள் இருந்தன, அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூஜாடிகள் கூட தென்பட்டன. தரையில் இருந்து வெளிவந்த சில கிழங்கு வகைச் செடிகளையும் பார்த்தாள். சில இடங்களில் அவளே ஒரு குச்சியால் தோண்டி சில செடிகளைச் சுற்றியுள்ள குப்பைச் செடிகளை அகற்றினாள்.

 ஒரு மணி நேரத்திற்குப் பின் மகிழ்ச்சியுடன் மீண்டும் தோட்டத்தைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றாள் மேரி. அவளது மகிழ்ச்சியான முகத்தைப் பார்க்க மார்த்தாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. செய்த வேலையினால் மேரிக்கு அதிகமாகப் பசி எடுத்து, இரண்டாவது முறையும் ‘இன்னும் கொஞ்சம் சாப்பாடு வைங்க’ என்று கேட்டவுடன் மார்த்தாவுக்கு இன்னும் ஆச்சரியம்.

 மேரி மார்த்தாவிடம், “சின்னச் சின்னதாக் கிழங்கு மாதிரித் தரையில ஒரு செடி முளைச்சிருக்கே? அதுக்குப் பேர் என்ன?” என்று கேட்டாள்.

“நிறைய செடிகள் கிழங்கு மாதிரி இருக்கும். அதுல எல்லாம் பின்னாடி நிறைய பூக்கள் பூக்கும். லில்லி, டாஃபோடில் கூட அப்படிப்பட்ட கிழங்கில் இருந்து வர்ற செடிதான். எனக்கு ஒரு தம்பி இருக்கான்னு சொன்னேன்ல? அவன் எங்க வீட்டைச் சுத்தி இந்த மாதிரி செடிகளை நட்டு வச்சுருக்கான். அவனுக்குத் தோட்டங்கள் பத்தி நிறையத் தெரியும். அவன் என்ன செடி வச்சாலும் அழகா வளர்ந்துடும்” என்று மார்த்தா பதில் கூறினாள்.

“எனக்கும் ஒரு மண்வெட்டி இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. அது இருந்தா எனக்காகவே ஒரு சின்னத் தோட்டத்தை உருவாக்குவேன். அதான் இங்கே நிறைய இடம் இருக்கே” என்று கூறினாள் மேரி.

 அதற்கு மார்த்தா, “என் தம்பி உனக்கு அதை எல்லாம் வாங்கிட்டு வருவான். ரெண்டு ஷில்லிங் (ஷில்லிங் என்பது பணத்தைக் குறிக்கும் சொல்) தோட்டத்துக்குத் தேவையான கருவிகள் எல்லாம் மொத்தமாக் கிடைக்கும்” என்று கூறினாள்‌. அவளிடமிருந்து டிக்கனின் முகவரியை வாங்கிய மேரி, அந்தப் பொருட்களை வாங்கித் தருமாறு கேட்டு டிக்கனுக்குக் கடிதம் எழுதினாள்.. கூடவே கொஞ்சம் பூச்செடிகளுக்கான விதைகளும் வேண்டும் என்று கேட்டிருந்தாள். அவளுக்கு வாரா வாரம் ஒரு ஷில்லிங் பணத்தைச் செலவுக்காக திருமதி. மெட்லாக் கொடுப்பார்கள்‌. அதைச் சேர்த்து வைத்திருந்தாள் மேரி.

 அதில் இரண்டு ஷில்லிங் பணத்தை டிக்கனுக்கு எழுதிய கடிதத்துடன் போட்டுத் தபாலில் சேர்த்தாள். கொஞ்ச நாட்களில் அவளுடைய தோட்ட வேலைக்கான கருவிகள் வந்து சேர்ந்தன. மேரி தினமும் அவளுடைய ரகசியப் பூந்தோட்டத்திற்குச் செல்ல ஆரம்பித்தாள். அங்கு சென்று தன்னால் முடிந்த வேலைகளைத் தொடர்ந்து செய்தாள். இப்போது அவளால் நூறு முறை ஸ்கிப்பிங் கயிற்றில் தொடர்ந்து குதிக்க முடிந்தது. நன்றாக சாப்பிட்டதால் கொஞ்சம் வளர்ந்து, சதைப் பிடிப்பாகவும் கூட ஆகியிருந்தாள். அடிக்கடி தோட்டக்காரர் பென்னிடம் போய் செடி வளர்ப்பது குறித்து நிறைய சந்தேகம் கேட்டாள்.

“நீ வந்தப்ப ரொம்ப ஒல்லியா, பாவமா இருந்த.. இப்பப் பாரு, நல்ல வளர்ந்துட்ட.. ஆரோக்கியமா இருக்க. நான் கூட சின்ன வயசுல உன்னை மாதிரி செடிகள் மேல ரொம்ப ஆசையோட இருப்பேன். அதனால தான் தோட்டக்காரர் வேலைக்கு வந்துட்டேன்” என்று கூறினார்.

 ஒருநாள் மேரி காலாற காட்டுப் பக்கமாக நடந்து கொண்டிருந்தாள். அப்போது அழகான புல்லாங்குழல் ஓசை கேட்டது. அங்கு ஒரு சிறுவன் புல்லாங்குழலை வாசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்பாக ஒரு அணில், ஒரு காகம், மற்றும் இரண்டு முயல்கள் அமர்ந்து அந்த இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தன. மேரியைக் கண்டவுடன் அந்த சிறுவன் வாசிப்பதை நிறுத்தி, “நீதான் மேரின்னு நினைக்கிறேன். எங்க அக்கா மார்த்தா உன்னைப் பத்தி சொல்லிருக்காங்க.. என் பேரு டிக்கன். நான்தான் உனக்குத் தோட்டக் கருவிகள், விதைகள் எல்லாம் வாங்கிக் குடுத்து அனுப்பினேன்” என்று கூறினான்.

“அப்படியா? ரொம்ப நன்றி!” என்றாள் மேரி.

“நீ என்னை உன்னோட தோட்டத்துக்குக் கூட்டிட்டுப் போவியா? அந்தச் செடிகளை  வளக்குறதுக்கு நான் உனக்கு உதவி பண்றேன்” என்று டிக்கன் கேட்க,

“ஒரு ரகசியம் சொல்லட்டுமா? யார்கிட்டயும் சொல்ல மாட்டியே?” என்று மேரி கேட்டாள்.

“கண்டிப்பா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். சொல்லு!” என்று டிக்கன் கூறினான்.

“வா!” என்று கூறி மேரி, டிக்கனை ரகசியப் பூந்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றாள்.

“நான் இங்கு வந்து பார்க்கும்போது தோட்டமே செத்துக்கிட்டு இருந்துச்சு. ஆனா நான் இத உயிரோட்டம் உள்ளதா ஆக்கப் போறேன்” என்று திடமான குரலில் கூறினாள்.

“ஹே! எனக்கும் இந்த இடம் ரொம்ப புடிச்சிருக்கு. நிறையச் செடிகள் செத்துப்போன மாதிரி தெரியுது. ஆனா நிஜமாவே அதுல உயிர் இருக்கு. கொஞ்சம் வேலை பார்த்தா நல்லா வளரும். அதுவும் இப்ப மழை காலம் வேற வரப்போகுது. எல்லா செடிகளையும் திருப்பியும் உயிர்ப்பிச்சுடலாம்” என்றான் டிக்கன்.

“அப்படியா?”

“ஆமா! நிறைய வேலை இருக்கு. ஆனா நாம ரெண்டு பேரும் சேர்ந்தா சீக்கிரம் முடிச்சுடலாம்” என்று நம்பிக்கையுடன் கூறினான் டிக்கன்.

“நாளைக்கும் வருவியா?” என்று மேரி கேட்க,

“கண்டிப்பா வரேன்.. செடி வைக்கிறது மட்டுமில்லாம, அந்த சிவப்பு குருவி இருக்கே, அது கிட்ட எப்படிப் பேசுறதுன்னும் சொல்லித்தரேன். என்னோட முயல்கள் கிட்ட கூட நீ நல்லாப் பேசலாம்” என்று அவன் கூற மேரிக்கு மிகுந்த சந்தோஷம்.

டிக்கனை சந்தித்த மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் சென்ற மேரிக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. அவளது மாமாவான திரு. க்ரேவன் ஊரிலிருந்து திரும்பியிருந்தார்.

‘ஐயோ! நான் அந்தத் தோட்டத்துக்குப் போனத மாமா கண்டுபிடிச்சுடுவாரோ?’ என்று பயந்தபடியே மேரி அவரின் அருகில் சென்றாள்.

“நீதான் மேரியா? உன்னை இவ்வளவு நாள் வந்து பார்க்க முடியல.. எல்லாரும் உன்னை நல்ல கவனிச்சுக்கிறாங்களா?” என்று அவர் பாசத்துடன் கேட்டார்.

“ஆமா மாமா! நல்லா கவனிச்சுக்கிறாங்க” என்று மேரியும் பதில் கூறினாள். அவள் பயந்தது போல் அவர் பயங்கரமானவராக இல்லை அன்பானவராகவே இருந்தார்.

“நீ எங்க எல்லாம் போய் விளையாடுற? உனக்கு எப்படி பொழுது போகுது?” என்று திரு.க்ரேவன் கேட்க,

“நான் எல்லா பக்கமும் விளையாடுவேன். ஆனா யாரையுமே தொல்லை பண்ண மாட்டேன்” என்றாள் மேரி.

“சரி உனக்கு என்ன வேணும்? புது டிரஸ், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் எது வேணும்னாலும் கேளு, நான் வாங்கி தரேன்” என்று திரு.க்ரேவன் கேட்க,

மேரி, “அதெல்லாம் வேண்டாம்.. எனக்குத்  தோட்டத்துல தனியா ஒரு இடம் மட்டும் குடுங்க. நான் ஒரு சின்ன பூந்தோட்டம் அமைக்கணும்” என்றாள். திரு.க்ரேவனுக்குத் தோட்டத்தின் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்ட தன்னுடைய மனைவியின் நினைவு வந்தது.

“இடம் தான் நிறைய இருக்கே.. உனக்குப் பிடிச்ச இடத்துல செடிகள் வச்சுக்கோ. எல்லாரும் உனக்கு உதவி பண்ணுவாங்க. நான் திருப்பியும் வெளியூர் போக வேண்டியது இருக்கு. அடுத்த முறை உன் கூட ரொம்ப நேரம் செலவழிக்கிறேன். கூடிய சீக்கிரம் நீ பாடம் படிக்கிறதுக்கும் தேவையான ஏற்பாடு பண்றேன்” என்று கூறி அவளை உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தார் திரு.க்ரேவன்.

-தொடரும்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments