இதுவரை:

 தன்னுடைய பொறுப்பற்றத் தனத்தால் பல பிரச்சினைகளில் சிக்கி கொள்ளும் தேரையை எலி, மூஞ்சுறு, தேன்வளைக்கரடி ஆகிய நண்பர்கள் திருத்த முயல்கின்றனர். யாருடைய முயற்சிக்கும் அசைந்து கொடுக்காமல் தேரை வாகனங்களைத் திருடுவது, விபத்துகள் ஏற்படுத்துவது போன்ற குற்றச் செயல்களைப் புரிந்து போலீஸில் சிக்கிக் கொள்கிறது.

 இனி-

அத்தியாயம் 5

இரண்டாம் முறையாகப் போலீசில் மாட்டிய தேரை சிறைக்குச் சென்று நீண்ட தண்டனையை அனுபவித்தது. தண்டனை முடிந்து வெளியே வந்தபின் ஆற்றங்கரை ஓரமாக வீட்டை நோக்கி நடந்து செல்கையில் தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

 ஆற்றில் அன்று நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நீந்த இயலாமல் நீண்ட தூரம் அடித்துச் செல்லப்பட்ட தேரை, வழியில் ஒரு செடியில் சிக்கி மயங்கி விட்டது. அந்தச் செடியில் இருந்து அதை யாரோ கை கொடுத்துக் காப்பாற்றினார். யாரது என்று தேரை கண்விழித்துப் பார்க்க, அது தன்னுடைய நண்பன் எலி என்று தெரிந்தது.

 தேரையை வீட்டுக்கு அழைத்துச் சென்ற எலி, தேரையின் மேலுள்ள சேறு, அழுக்கு இவற்றைக் கழுவி, தூய ஆடைகளைக் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தது. அதன் பின் தன்னிடமிருக்கும் உணவையும் பகிர்ந்து கொண்டது.

உணவு சாப்பிட்ட பின்பு, தேரை இதுவரை தான் செய்த குற்றச் செயல்களையும், போலீஸில் மாட்டியதையும் தன்னுடைய சாதனைகள் போல் விவரித்துக் கூறியது. இதனால் கோபமடைந்த எலி, “நீ திருந்தவே மாட்டியா? நீ பண்ணினது எல்லாம் தப்புன்னு எப்பத்தான் உணரப்போறே? உனக்கு இருக்கிற வசதிக்கும் பணத்துக்கும் நீ நெனச்சா அந்த மோட்டார் கார், படகு இதையெல்லாம் நீயே வாங்கியிருக்க முடியும். ஆனா அதைத் திருடி ஜெயிலுக்குப் போயிட்டு வந்துட்டு இப்ப பெருமை வேற பேசிக்கிட்டு இருக்கியே!” என்று கடிந்து கொண்டது. எலி பொறுமையாக விளக்கிய பின் தான் தேரைக்குத் தன்னுடைய தவறு புரிந்தது.

“சரி இனிமே என்னோட வீட்ல போய் ஒழுங்கா இருக்கேன். எந்தத் தப்பும் செய்ய மாட்டேன்” என்று தேரை உறுதி கூறியது.

 அதற்கு எலி, “உனக்கு விஷயமே தெரியாதா? கீரிப் பிள்ளைகள், மரநாய்கள், காட்டுப் பூனைகள் இதெல்லாம் கூட்டங்கூட்டமா காட்டிலிருந்து வந்து உன்னுடைய பாரம்பரியமான ‘டோட் ஹால்’ (Toad hall) வீட்டை ஆக்கிரமிச்சுட்டாங்க. உன்னால அங்கே போக முடியாது” என்று கூறியது.

“நான் ஜெயிலுக்குப் போனதினால் தானே இதெல்லாம் நடந்திருக்கு.. இப்ப என்ன பண்றது?” என்று தேரை வருத்தப்பட, மூஞ்சுறுவையும் அழைத்துக் கொண்டு நண்பர்கள் தங்கள் மூத்த நண்பனான தேன்வளைக் கரடியை சென்று சந்தித்தனர்.

“எவ்வளவு பிரச்சனையில் சிக்கிக்கிட்டாலும் நீ என்னோட நண்பனின் மகன்.. அதனால உனக்கு நான் உதவுறேன்.. ஆற்றங்கரையில் இருந்து ஒரு சுரங்கப்பாதை உங்க வீட்டின் நடுவில் போய் முடியுது. உங்க அப்பா வீடு கட்டும்போது நான் கவனிச்சிருக்கேன். நாளைக்கு அங்கே ஒரு விருந்து நடக்கிறதா கேள்விப்பட்டேன். அப்ப நாம அங்கே போய் தாக்குதல் நடத்தி மிருகங்களை வெளிய அனுப்பணும்” என்றது தேன்வளைக் கரடி. மூஞ்சுறு அந்தத் திட்டத்திற்கு தன் யோசனையாக ஒன்றைக் கூறியது.

“நான் மாறு வேஷத்துல போய் அங்கே இருக்கிற காவலாளிகள் கிட்ட ஏதாவது சொல்லி அவங்க கவனத்தை சிதற வைக்கிறேன். அதுக்கப்புறம் நாம போய்த் தாக்குதல் நடத்தலாம்” என்றது.

 அதன்படியே மறுநாள் மாறுவேடத்தில் சென்ற மூஞ்சுறு ‘டோட் ஹால்’ காவல்காரர்களிடம் சென்று, “இன்னைக்கு உங்க தோட்டத்துப் பக்கமாவும், முன்வாசல் ஜன்னல் பக்கமாவும் திருடங்க வரப்போறாங்க. அவங்க பேசும் போது நான் கேட்டேன்.. கவனமா இருங்க” என்று சொல்லிவிட்டு வந்தது.

 காவலர்கள் தோட்டத்தின் மீதும் ஜன்னல்கள் மீதும் தங்கள் கவனத்தை வைத்திருக்க துப்பாக்கி, கம்பு, கத்தி சகிதம் தேன்வளைக் கரடி, எலி, மூஞ்சுறு, தேரை ஆகிய நான்கு நண்பர்களும் அந்தப் பழைய சுரங்கப்பாதை வழியாக டோட் ஹாலைச் சென்றடைந்தனர்.

திடீரென்று ஒலித்த துப்பாக்கி சத்தத்திலும் அதைத் தொடர்ந்து வந்த கம்பு, கத்தி தாக்குதலிலும் காட்டு விலங்குகள் பயந்து போய் விட்டன. நீண்ட நேரம் சண்டை தொடர்ந்தது. இறுதியில் நான்கு நண்பர்களே வெற்றி பெற்றனர். காட்டு விலங்குகள் பயந்துபோய் அந்த வீட்டை விட்டு ஓடி விட்டன. அவை ஏற்படுத்தி விட்டுச் சென்ற அசுத்தங்களை கழுகு வீட்டை சீர் அமைக்கவே நான்கு நண்பர்களுக்கும் ஒரு வார காலமானது. தேரை அந்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே தன் தவறை முற்றிலுமாக உணர்ந்துகொள்ள, அதன்பின் நான்கு நண்பர்களும் அதே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்தனர். தேரை தன் சேட்டைகளை அடியோடு விட்டுவிட்டு மனம் திருந்தி நல்லபடியாக நடந்து கொண்டது.

-முற்றும்.

என்ன பூஞ்சிட்டுக்களே! உங்களுக்கு இந்தக் கதை பிடிச்சிருக்கா? என்னடா  தேரை கார் ஓட்டுது, ஜெயிலுக்குப் போகுது? மூஞ்சுறு எலியெல்லாம் படகு ஓட்டுது? இதெல்லாம் நடக்குமா அப்படின்னு நினைச்சீங்களா?  மனுஷங்கள் பண்ற விஷயங்களை மிருகங்கள் செய்ற மாதிரி இருக்கிற கதைகள் நிறைய இருக்கு. அப்படி இருந்தா உங்கள மாதிரி குட்டிக் குழந்தைகளுக்கு நல்லாப் புரியும் இல்லையா? அதே மாதிரி, உண்மை நண்பர்கள் வேற வேற இனமா இருந்தாலும் நல்லவங்களா இருந்தா நமக்கு உதவி பண்ணுவாங்க.. அப்படிங்கிறதையும் இந்தக் கதை சொல்லுது.

 அடுத்த மாசம் வேற ஒரு சிறுவர் உலக இலக்கியத்தோட உங்களை  சந்திக்கிறேன். பை!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments