பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம்பூமியில் பெரிய மலை அளவிற்கு ஓர் அதிசயகல் இருந்தது. அதை கல் என்று சொல்ல முடியுமா, தெரியவில்லை. ஏனென்றால் அந்தபெரிய கல் பார்ப்பவர்களை வானின் நட்சத்திரமே பூமிக்கு வந்து விட்டதோ என்று சந்தேகப்பட வைக்கும். பகலிலே சூரியன்பட்டால் ஜொலிக்கும். இரவின் நிலவின் ஒளியில் மனதை மயக்கும். அந்த கண்ணைக் கொள்ளை கொள்ளும்கல்லுக்கு ஒருமாயசக்தியும் இருந்தது. அதைப் பார்ப்பவர்களுக்கு மனதில் உள்ள கவலைகள் எல்லாம் அகன்று விடும்.. எதைரோ சாதித்தது போல மனதில் பிரமை தோன்றும். முகத்தில் தானாக புன்னகை வந்துவிடும்.
அந்த கல் எப்படி பூமிக்கு வந்தது என்பது பற்றி பல கதைகள் உலா வந்தன. பூமியில் உயிர்களைப்படைத்த கடவுள் சந்தோசத்தில் அவர் கண்ணில் இரண்டு சொட்டு கண்ணீர் வந்ததாம். முதல் சொட்டு இந்த மலையாக மாறிவிட, மற்றொன்றை விரலால் துடைத்த கடவுள் அதை ஒரு பெட்டியில் போட்டு பூமியின் ராஜாவிடம் கொடுத்து விட்டாராம். உலக உயிர்களுக்கு ஏதாவது பெரிய பிரச்சனை வந்தால் மட்டுமே அந்த பெட்டியைத் திறக்க வேண்டும் என்ற உத்தரவுடன். இப்போது ராஜாவாக இருக்கும் கிட்டுவிடம் அந்த பெட்டி பத்திரமாக இருக்கிறது.
நாளாக ஆக ஒரு மாற்றம் ஏற்பட்டது. பார்க்கும் போதெல்லாம் சந்தோஷத்தைக் தரும் அந்த கல்லைச் சுற்றி அமரும்மக்களின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது. மக்கள் தங்கள் வேலையை மறைந்தார்கள். உண்ண மறந்தார்கள், வீட்டுக்குச் செல்ல மறுத்தார்கள். சும்மா பார்த்திருந்தாலே சந்தோஷத்தைக் தரும் இந்த கல்லை விட்டு நாம் ஏன் போக வேண்டும்.. இங்கேயே இருந்து இந்த கல்லைப் பார்த்துக் கொண்டே இருக்கலாமே என்ற எண்ணம் அதிகமானவர்களுக்கு வரத் தொடங்கியது.
அச்சோ.. அப்போ ராஜா என்ன பண்ணினார் என்று யோசிக்கிறீங்களா.. அந்த கல்லின் முன்னே முதல் வரிசையில் அமர்ந்திருப்பது நம்ராஜா கிட்டுதான். ராஜ்யத்தை மறந்து கல்லைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்து இளவரசன் டிட்டூவிற்கு பயங்கர கோபம். ராஜாவிடம் போய் கேட்டான், “அப்பா.. இப்படியே இருந்தால் நம்பூமி என்னாவது?” என்றான்
“ஏன் டிட்டு.. நாட்ணு மக்கள் எல்லோருமே சிரித்தபடி சந்தோசமாதானே இருக்காங்க.. சும்மா இருந்தே சந்தோசம் கிடைக்கும்போது என் உடல் வருத்தனும்? மூளையைக் கசக்கனும்?” என்ற ராஜாவைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்.
“அச்சோ அப்பா.. காரணத்தோடு சிரித்தால்தான் அதற்கு காரணம் சந்தோசம். இப்படி காரணமில்லாமல் சிரிச்சா அதைப் பைத்தியம்னு சொல்லுவாங்க”.
“ஷ்ஷ்.. நீ ரொம்ப கோபமா இருக்க.. இதோ இப்படி உட்கார்ந்து நீயும் என்னோடு சேர்ந்து கல்லைப் பாரு..” என்று கூப்பிட டிட்டூ முறைத்துக் பார்த்தான்.
“அப்பா!” என்றுஅவன் மேலும் கோபமடைய, “இப்போ என்னடா உன் பிரச்சனை?” என்றார் கிட்டு.
“அப்பா.. மக்கள் எதுவுமே செய்யாமல் சும்மா இருப்பதால் எத்தனை பிரச்சனை தெரியுமா? வயலில் யாரும் வேலை செய்யவில்லை. உணவு பற்றாக்குறையாகிவருகிறது. இதனால் உடல் பலகீனமடைகிறார்கள். ஆடு மாடுகளுக்கு உணவு வைப்பதில்லை. அவை பசியோடிருக்கின்றன. பிள்ளைகள் பராமரிக்கப்படவில்லை. முட்டாள்களாக முரடர்களாக வளருகிறார்கள். நாட்டில் திருட்டும அதிகமாகிறது.”
“நாம்சும்மா இருந்தால் இத்தனை பிரச்சனையா?”
“ஆமாம்பா.. சும்மா இருந்து கிடைக்கும் எதிலுமே பிரச்சனைதான். மக்கள்உழைத்து அதன்பயனாக ஒன்றைப்பெற்று அதிலே மகிழ்வது தான் உண்மையான மகிழ்ச்சி..”
“சரிதாம்பா.. இப்போது என்ன செய்வது?”
“இத்தனை பெரிய கல்லை எதைக் கொண்டும் மூடமுடியாது. சிறிது சிறிதாக உடைத்து மறைத்து வைத்து விடலாம்..”, முடிவெடுத்தவன் தன் குத்துக் கத்தியை எடுத்து ஒரே குத்து குத்தினான். அந்தோ.. அவன் கத்தி பென்சில் மூக்கு போல டொக்கென்று உடைந்து விட்டது. ஏற்கனவே சிரித்துக் கொண்டிருந்தவர்கள் இதைப் பார்த்து இன்னும் கொஞ்சம் சிரித்தார்கள். “இரு.. உன்னை..” என்று கோபமாகக் கூறி தன் வாளை எடுத்து ஓங்கி வீசினான். ம்ப்ச்.. பிஸ்கட் போல இரண்டுக உடைந்தது வாள்.
அடக்கடவுளே! என்ன பண்ணுவது! இந்த கல் இத்தனை பலமானதாக இருக்கிறதே.. ஒரு முடிவெடுத்தவன் இந்த கல்லை உடைப்பவர்களுக்கு மாபெரும் பரிசு என்று அறிவித்தான். சுத்தியல் எடுத்து ஒருவன் வந்தான். சுத்தியல் காபிக்கோப்பை கீழே விழுந்தது போல் சில்லு சில்லானது. நெருப்பை வந்து காட்டினால் ஜகஜோதியாய் ஜொலிஅதததே தவிர எந்த மாற்றமும் இல்லை. டிரில்லிங்க் மெசின்(அது எப்படி அப்போ வந்ததுன்னுலாம் கேட்க்க கூடாது.. கற்பனை கடல்.. நியாபகம்இருக்குதில்லையா?) எடுத்து வந்து துளை போட முயற்சிக்க டிரில்லிங்க் மெசின் தேங்காயைத் துருவியது போல தூள் தூளானது.
என்னடா இது? இதை உடைக்கும் பொருளுக்கு எங்கே நான் போவேன்? கடவுளின் ஆனந்த கண்ணீரில் உருவான கல் என்றுதானே சொல்வார்கள். அதனால் மக்களுக்கு பிரச்சனை உருவாகலாமா? யோசித்துக் கொண்டே இருந்தவனுக்கு சட்டென்று ஒரு ஐடியா வந்தது..
அரண்மனைக்குள் ஓடியவன் பல நூறு வருடங்களாக பூமியின்ராஜாக்கள் பாதுகாத்து வைத்திருந்த பெட்டியைத் திறந்தான். உள்ளே அந்த கல்லைப் போலவே சிறிய அளவில் ஒரு கல் இருந்தது. எடுத்துக் கொண்டு ஓடிய டிட்டூ அந்த குட்டிக் கல்லைக் கொண்டு பெரிய கல்லை வெட்டத் தொடங்கினான். என்ன அதிசயம்! பெரிய கல் வெட்டுப்பட்டது. பெரிய கல்லிலிருந்து ஒரு துண்டத்தை எடுத்தவன் தளபதியிடம்கொடுத்து அதைக் கொண்டும் வெட்ட ஆணையிட்டான். இப்படியே ஒவ்வொரு துண்டமாக வெட்டி வெட்டி ஒவ்வொரு துண்டத்தையிம் கத்தியால் கொண்டு மீதியுள்ள தை வெட்டும் பணி ஜோராக நடைபெற்றது.
இறுதியில் அந்த கல்லைப் பல துண்டங்களாக உடைத்து விட்டார்கள்.
“இவற்றை எப்படி மறைத்து வைக்கப் போகிறாய் டிட்டூ?”
“துணியால் போர்த்தினாலும் அதை மீறு ஒளி வரும். கடலில் போட்டாலும் நீர் வழியே ஒளி வரும்.. ” என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க,
கிட்டு, “ஆஹா.. எனக்கு ஒரு யோசனைவந்து விட்டது.. யாரங்கே?” என்றார்.
வந்த வீரர்களிடம்” இந்த கற்களைக் கொண்டுபோய்பூமியெங்கும் ஆங்காங்கே ஆழக் குழி தோண்டி புதைத்து விடுங்கள்” என்று ஆணையிட்டார்.
“அப்பா நல்ல யோசனை!” என்றுடிட்டூவும் சம்மதிக்க அந்த மாயக்கல் பூமியெங்கும் ஆழத்தோண்டிப் புதைக்கப்பட்டது.
“ஆனால் மகனே.. இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அந்த கல்லின்மேல் ஆசை கொண்டு யாரேனும் பூமியைத் தோண்டி எடுத்து விட்டால்?” என்று சந்தேகம் கேட்டார்.
“ஹாஹா.. அதனால் என்னபா..கஷ்டப்பட்டு தோண்டிக் எடுப்பவன் அதைப் பார்த்து மகிழட்டுமே.உழைத்துக் கிடைத்த வெற்றிதானே.. அனுபவிக்கட்டும்..” என்று சிரித்தான் அந்த அறிவாளி இளவரசன். அப்படி புதைக்கப்பட்ட அந்த அதிசயக்கல்தான் நாம் இன்றுவரைத் தோண்டி எடுக்கும் வைரம்.
கதை நல்லா இருந்ததா குட்டீஸ்..
நிலத்திற்கு வரலாமா?
சரி, எப்படி வைரம் உருவாகிறது?
காரபன் அணுக்குள் அதீதமான வெப்பம் மற்றும் அழுத்தத்திற்கு உள்ளாகும் போது ஒன்றோடொன்று பிணைந்து வைரம் உருவாகிறது. இது கிட்டத்தட்ட 3பில்லியன் வருடங்களுக்கு முன்னால் பூமியின் தரைப்பரப்பிலிருந்து 150-200கிமீ ஆழத்தில் உருவாகியிருக்கக்கூடும்ஜென்று கணிக்கப்படுகிறது.
வைரம் உண்மையிலேயே கடினமானதா?
கதையில் வருவது போல நிஜமாகவே மனிதர்கள் அறிந்த தாதுக்களில் வைரம் மிகவும் கடினமானது. இப்போதுதான் Q கார்பன் என்றொரு தாது வைரத்தைவிட கடினமானது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் அது செயற்கையாக உருவாக்கப்படுவது.
வைரத்தை வைரத்தால் மட்டும்தான் அறுக்க முடியுமா?
இப்போ ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன். ஒரு அட்டையை மரக்கட்டையை வைத்து அடிக்கிறீங்க.. எது உடையும். அட்டைதானே. ஏனென்னறால் மரக்கட்டை அட்டையை விட பலமானது. அதே மரக்கட்டையைக் கொண்டு இரும்புப்பலகையை அடிக்கிறீங்க.. எது உடையும்.. மரக்கட்டைல்லையா? ஏனென்றால் இரும்பு மரக்கட்டையை விட பலமானது. அப்போ ஒரு பொருளை உடைக்க அதை விட பலமான பொருளைக் கொண்டு தாக்க வேண்டும். வைரம்தான் நாம்அறிந்த வரையில் மிகப் பலமான பொருள் என்றால் எதைக்கொண்டு அதை அறுப்பது. கூர்மையான வைரத்தைக் கொண்டுதானே..
நான்அனிதா செல்வம். தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.