அம்மாவும் அப்பாவும் வெளியே செல்லும் தருணத்திற்காக ராபர்ட், ஆந்த்தியா, சிறில் மற்றும் ஜேன் நான்கு பேரும் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது தானே அவர்களால் ஃபீனிக்ஸ் பறவை உதவியுடன் மந்திரக் கம்பளத்தைப் பரிசோதனை செய்து பார்க்க முடியும்?
மறுநாளே அவர்கள் எதிர்பார்த்திருந்த தருணம் வந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரம், மந்திரக் கம்பளத்தின் மேல் நால்வரும் அமர்ந்து கொண்டனர். அதுவரை எங்கோ மறைந்திருந்த ஃபீனிக்ஸ் பறவையும் அதன் மேல் வந்து அமர்ந்தது. “எனக்கு எங்கேயாவது வெளிநாட்டுக்குப் போகணும் போல் இருக்குது”, என்றாள் ஆந்த்தியா.
உடனடியாக மேலே கிளம்பிய மந்திரக் கம்பளம் அப்படியே வானில் பறந்து போய் புதிதாக ஒரு நாட்டை அடைந்தது. வெகுநேரமாகப் பறந்து கொண்டிருப்பது கொஞ்சம் சலிப்பைத் தர, சிறில் அங்கு தெரிந்த ஒரு பெரிய பழமையான கட்டிடத்தின் கோபுரத்தைக் காட்டி, “அந்த கோபுரத்தின் மேலே இறங்கணும்”, என்றான். மந்திரக் கம்பளம் அப்படியே மெல்லத் தரையிறங்கி அந்தக் கோபுரத்தின் உச்சியை அடைந்தது. ஆனால் அந்தக் கோபுர உச்சி இடிந்து அதில் பெரிய ஓட்டை இருந்ததால் அந்த ஓட்டை வழியே கோபுரத்துக்குள்ளாக தரை இறங்க ஆரம்பித்தது மந்திரக் கம்பளம்.
பழங்காலக் கட்டிடம் என்பதால் அந்தக் கட்டிடத்திற்குள் நிறைய பறவைகள் கூடு கட்டி வாழ்ந்தன. அப்படி அழகாகக் கூடு கட்டியிருந்த ஒரு ஆந்தையை ராபர்ட் பார்த்துவிட்டு, கம்பளம் மெது மெதுவாக கீழே இறங்கிக் கொண்டிருக்கையில் கம்பளத்தில் இருந்து நகர்ந்து ஆந்தைக் கூடு இருந்த ஒரு பலகை மேல் ஏறினான். அவனை மட்டும் நடு வழியில் விட்டு விட்டு மந்திரக் கம்பளம் கீழே இறங்கி விட்டது.
“ஐயையோ! ராபர்ட் மேலேயே மாட்டிக்கிட்டான். நீ அவனைப் போய்க் கூட்டிட்டு வந்துடு”, என்று ஆந்த்தியா மந்திரக் கம்பளத்திடம் சொல்ல, அது மீண்டும் மேலேறி பாதி வழியில் நின்று கொண்டிருந்த ராபர்ட்டை அழைத்துக் கொண்டு கீழே வந்தது.
‘அப்பாடா!’, என்று நான்கு பேரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால் அந்தப் பழங்கால கட்டிடத்தில் வசதியாக இருப்பதற்கு இடமில்லை. எங்கு பார்த்தாலும் குப்பையும் கூளமும், ஒட்டடையும் தூசியுமாக இருந்தது. “பேசாம நாம வீட்டுக்கே போயிடலாம்”, என்றாள் ஜேன்.
அப்போது ஃபீனிக்ஸ் பறவை, “ஒரு நாளைக்கு மூணு வரங்களைத் தான் கேட்க முடியும். முதல் வரம் நாம வெளிநாட்டுக்குப் போகணும்னு கேட்டது, இரண்டாவது வரம் இந்தக் கட்டடத்தில் இறங்கணும்னு சொன்னது, மூன்றாவது ராபர்ட்டை போய்க் கூட்டிட்டு வந்தது.. அவ்வளவுதான். இன்னைக்கான மூணு வரங்களும் காலி”, என்றது.
“இதை ஏன் முதல்லேயே சொல்லலை?”, என்று நான்கு பேரும் ஃபீனிக்ஸ் பறவையைக் கேட்க,
“மறந்துட்டேன்”, என்றது ஃபீனிக்ஸ்.
“இந்த வரங்களால தொல்லை தான் வரும்னு நமக்கு ஏற்கெனவே தெரியுமே.. ஆனாலும் இதுல மாட்டிக்கிட்டோம்.. இப்ப எனக்குப் பசிக்குது” என்று சிறில் சொல்ல, ஃபீனிக்ஸ் பறவை எங்கோ சென்று ஒரு கூடையில் கொஞ்சம் பழங்களும் உணவு வாங்கிக் கொண்டு பறந்து வந்தது.
“நீ திறமைசாலி தான். அதுக்குள்ள புதுசா வந்த ஒரு நாட்டில் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்துட்டியே!”, என்று வியந்தபடி மகிழ்வுடன் உணவை உண்டனர்.
“எப்படியாவது இங்கிருந்து தப்பிச்சு உங்க வீட்டுக்குப் போகலாமான்னு பார்த்துட்டு வரேன்”, என்று கூறிவிட்டு மீண்டும் வெளியே பறந்தது ஃபீனிக்ஸ் பறவை.
“அதுவரைக்கும் இந்தக் கட்டிடத்தை சுற்றி பார்க்கலாம்”, என்று ஆந்த்தியா கூற, ராபர்ட் ஒரு சுரங்கப் பாதையைக் கண்டு பிடித்தான். அதன் வழியே உள்ளே சென்றார்கள். இருட்டாக இருந்தது.. தங்கள் பையிலிருந்த தீக்குச்சிகளை ஒவ்வொன்றாகக் கொளுத்தி அந்த வெளிச்சம் மூலமாக சுற்றிப்பார்க்க, அங்கு ஒரு பையில் நிறைய தங்க நாணயங்கள் இருந்தது தெரிந்தது.
“ஹையா! நமக்கு தங்கக் காசுகள் கிடைச்சிருக்கு!”, என்று மகிழ்ந்து அவர்கள் அதை எடுக்கப் போக, கடைசிக் குச்சியும் காலியாகப் போனது.
இருளில் சற்று நேரம் அவர்கள் தடுமாற, மந்திரக் கம்பளத்துடன் வந்த ஃபீனிக்ஸ் பறவை, “வாங்க! எல்லாரும் இது மேலே உட்கார்ந்துக்கோங்க”, என்று கூறியது.
கம்பளத்தில் அமர்ந்த அடுத்த நிமிடம் அனைவரும் அவர்களது வீட்டில் இருந்தார்கள். “எப்படி? மூணு வரங்களும் காலி ஆயிடுச்சுன்னு சொன்னியே.. அதுக்குள்ள எப்படி நம்ம வீட்டுக்கு வந்தோம்?”, என்று ராபர்ட் கேட்க, “அதுவா? நான் என்னோட நண்பனான ‘சாமீட்’ அப்படிங்கற மணல் தேவதை கிட்ட போய் உதவி கேட்டேன்.. அது எனக்கு இந்த வரத்தைக் குடுத்துச்சு”, என்றது ஃபீனிக்ஸ் பறவை.
“அட! நம்ம மணல் தேவதை தான்.. அது எங்களுக்கும் நண்பன் தான்”, என்று தங்கள் பழைய கதைகளைப் பகிர்ந்து கொண்டனர் குழந்தைகள்.
அன்றிரவு ஏதும் நடக்காததுபோல் குழந்தைகள் படுத்துக்கொண்டனர். மறுநாள் காலையில் அவர்களின் அம்மா, அப்பாவிடம் வந்தார் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்.
“இனிமே நான் உங்க வீட்ல வேலை பார்க்க மாட்டேன்.. இந்தக் குழந்தைகளோட சேட்டையை என்னால தாங்க முடியல.. இப்பப் பாருங்க.. புதுசா வாங்கின கம்பளத்தைக் கூட ரொம்ப மண்ணா ஆக்கி இருக்காங்க.. இதை நான் எப்படி சுத்தம் பண்றது?”, என்று குறை கூறினார்.
குழந்தைகளின் அறைக்கு வந்து பார்த்த அம்மாவும் அப்பாவும், “என்ன இது? இந்தக் கம்பளத்தை எடுத்துக் கொண்டு போய் தோட்டத்துல போட்டு விளையாடினீங்களா? இனிமேல் இந்தக் கம்பளத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது”, என்று அதைச் சுருட்டி ஒரு அலமாரியில் போட்டுப் பூட்டி விட்டனர்.
“அச்சச்சோ! இப்படி ஆயிடுச்சே?” என்று வருந்தினர் நான்கு குழந்தைகளும்.
-தொடரும்.
குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். ‘கதை சொல்லு கதை கேளு’ என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.