(ஸ்வீடன் நாட்டின் நாடோடிக் கதை)

முன்னொரு காலத்தில், சிவபுரி என்னும் ஊரில் வேலன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தான். அவனுக்குச் சொந்தமாகச் சிறிய அளவிலான வயல் இருந்தது. அதில் அனுதினமும் வேலனும், அவன் மனைவி வள்ளியும் அயராது உழைத்து தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

அந்த வருடம் வேலன் தன் வயலில் நெற்பயிர்களை விளைவித்திருந்தான். நெல் விதைகளை நாற்றங்காலில் தூவி, அவை ஒரு ஜான் அளவு முளைத்து வந்ததும் அவற்றைத், தயாராக உழுது, உரமிட்டுத் தண்ணீர் பாய்ச்சி வைத்திருந்த தன் வயலில் நட்டான்.

வள்ளியின் உதவியுடன், நெற்பயிர்களுக்கு உரமிட்டுக், களைச் செடிகளை அவ்வப்போது நீக்கி, மருந்துகள் தெளித்து என, வேலனும், வள்ளியும் வயலில் கடுமையாகப் பாடுபட்டனர். கண்ணும் கருத்துமாக பயிர்களைப் பாதுகாத்த வேலனுக்கு அந்த வருடம் நல்ல விளைச்சல் கிடைத்தது.

பயிர்களை அறுவடை செய்து, நெல்மணிகளை கடைவீதியில் விற்று ஒரு பை நிறைய பொற்காசுகளைக் கொண்டு வந்தான் வேலன்.

“வள்ளி, இந்தப் பொற்காசுகளை பத்திரமாக எங்கேனும் வைக்க வேண்டும். ஊருக்குள் கள்வர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. என்ன செய்ய?”, என்று தன் மனைவியிடம் ஆலோசனை கேட்டான் வேலன்.

“நம் வீட்டில் ஓரிடத்தில் குழி தோண்டி பொற்காசுகள் கொண்ட பையைப் புதைத்து விடலாம். எப்போது தேவைப்படுகிறதோ அப்போது திரும்பத் தோண்டி எடுத்துக் கொள்ளலாம்”, என வள்ளி யோசனை கூறினாள். அதன் படியே, அவர்கள் வீட்டின் ஓர் மூலையில் குழி தோண்டி, பொற்காசு மூட்டையை புதைத்தான் வேலன்.

sweden story
படம்: அப்புசிவா

சில நாட்கள் சென்றதும், வேலனுக்கு பொற்காசுகள் எவ்வளவு உள்ளது என்று எண்ணாமலேயே வைத்து விட்டோமே என்று கவலையாக இருந்தது. “குழியைத் தோண்டி, எவ்வளவு காசு இருக்கிறது என்று எண்ண வேண்டும்னு வள்ளி கிட்ட சொன்னா வள்ளி கோபித்துக் கொள்வாளே!”, என்று அச்சமாக இருந்தது.

அதனால் வள்ளி தண்ணீர் எடுக்க ஆற்றிற்குச் சென்றிருந்த வேளை, வேலன் வேகமாகப் புதைத்து வைத்திருந்த பொற்காசு முடிச்சை எடுத்து அவசரமாக எண்ணத் துவங்கினான்.

“பத்து, பதினொன்று, பனிரெண்டு”, என வேலன் காசுகளை எண்ணிக் கொண்டிருக்க, வீட்டின் வாயில் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. காசுகளை யாரேனும் பார்த்துவிடுவாரோ என்று அஞ்சிய வேலன், பொற்காசு மூட்டையை அங்கிருந்த பெரிய பானைக்குள் அப்போதைக்கு வைத்து மூடி விட்டுக் கதவைத் திறந்தான்.

வெளியே அவனது பக்கத்து வீட்டு செல்வம் நின்றிருந்தான். “வேலா, கடைவீதிக்குச் செல்கிறேன். போகும் போது உன்னைக் கூப்பிடச் சொன்னாயே, வா போகலாம்”, என்று வேலனைக் கட்டாயப்படுத்தி, தன்னுடன் கடைவீதிக்கு அழைத்துச் சென்றான் செல்வம்.

வேலனும் வேறு வழியின்றி செல்வத்துடன் கடைவீதி சென்றான். ஆனால், வேலனின் மனம் முழுக்கத் தன் வீட்டில் பானைக்குள் ஒளித்து வைத்திருந்த பொற்காசு முடிச்சின் மீதே இருந்தது.

இதற்குள், தண்ணீர் எடுக்கச் சென்றிருந்த வள்ளி, வீட்டிற்கு வந்திருந்தாள். தான் கொண்டு வந்த குடத்தை சமையல் அறையில் வைத்துவிட்டு, பானையை எடுத்துக் கொண்டு திரும்ப ஆற்றிற்குச் சென்றாள். வள்ளி எடுத்துச் செல்லும் பானையில் தான் பொற்காசு முடிச்சு இருக்கிறதென்று அவளுக்குத் தெரியாது.

பானையுடன் ஆற்றிற்குச் சென்று கொண்டிருந்த வள்ளியின் காலில் பெரிய முள் ஒன்று குத்திவிட்டது. முள் தைத்த இடத்திலிருந்து ரத்தம் வரத் துவங்கவும், மேலே நடக்க முடியாமல், “ஐய்யோ!” எனக் கால்களைப் பிடித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பாறையின் மேல் அமர்ந்து கொண்டாள் வள்ளி.

அப்போது அவ்வழியே, அந்த ஊரில் வசித்து வந்த ஆடு மேய்க்கும் கார்க்கன் என்பவன், அவனது ஆட்டு மந்தையுடன் வந்து கொண்டிருந்தான். பாறை மேல் அமர்ந்திருந்த வள்ளியைப் பார்த்தவன், “அடடா, வள்ளி,என்னவாயிற்று உனக்கு? ஏதேனும் உதவி வேண்டுமா?”, என்று கரிசனத்துடன் வினவினான்.

“காலில் முள் தைத்து விட்டது கார்க்கா! என்னால் ஆற்றில் சென்று தண்ணீர் எடுத்து வர இயலவில்லை. கொஞ்சம் உதவி செய்யேன்”, என்று வள்ளி, கார்க்கனிடம் கூறினாள்.

அதைக் கேட்ட கார்க்கன், “கவலையை விடு வள்ளி, அந்தப் பானையைக் கொடு, நான் சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன்.” என்று கூறி, கார்க்கன், வள்ளியிடமிருந்து பானையைப் பெற்றுக் கொண்டு ஆற்றில் இறங்கி தண்ணீர் சேந்தினான்.

அப்போது பானைக்குள் இருந்து கிலுங் கிலுங் என்ற சத்தம் கேட்கவும், “அட இது என்ன? பானைக்குள் இருந்து சத்தம் கேட்கிறதே?”, என்று ஆச்சர்யத்துடன் பானையினுள் கைவிட்ட கார்க்கனுக்கு பொற்காசு மூட்டை தட்டுப்பட்டது.

கார்க்கன், உடனே வள்ளியை ஏறிட, வள்ளி கால் வலியின் மிகுதியால், அந்தப் பாறையின் மீது தலை வைத்துப் படுத்து விட்டிருந்தாள். “வள்ளிக்கு பானைக்குள் பொற்காசு மூட்டை இருந்தது தெரியாது போலிருக்கே! அதனால் தான் இந்தப் பானையை தண்ணீர் சேந்த எடுத்து வந்திருக்கிறாள். நமக்கு நல்ல வேட்டை தான் இன்று”, என்று நினைத்த கார்க்கன், பொற்காசு மூட்டையை ஆற்றின் ஓரத்தில் இருந்த கற்களின் இடையில் பதுக்கி வைத்தான்.

பின்பு, ஏதும் அறியாதவன் போல, தண்ணீர் நிரம்பிய பானையுடன் வள்ளியிடம் வந்தவன், “இந்தா வள்ளி, உன் பானை!”, என்று தண்ணீர்ப் பானையைக் கொடுத்தான்.

பானைக்குள் இருந்த பொற்காசு மூட்டையை கார்க்கன் திருடிவிட்டான் என்று அறியாத வள்ளி, “ரொம்ப நன்றி கார்க்கா, சமயத்தில் எனக்கு நீ உதவி செய்திருக்க”, என்று கூறித் தண்ணீர்ப் பானையுடன் வீட்டை நோக்கி மெல்ல நடந்தாள்.

“நானா உதவி செய்தேன்? நீ தான் உனக்குத் தெரியாமலேயே எனக்கு பொற்காசு மூட்டையைக் கொடுத்து பெரிய உதவி செய்திருக்க!”, என்று மனதினுள் எண்ணிக் கொண்டான் கார்க்கன்.

வள்ளி அவ்விடம் விட்டு சென்றதும், அவசர அவசரமாக கற்களுக்கு இடையில் தான் பதுக்கிய பொற்காசு மூட்டையை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றான். வீட்டில் அவன் மனைவியோ, மகனோ இருக்கவில்லை.

“இது தான் நல்ல சமயம். வீட்டில் ஒருவரும் இல்லை. மனைவி இருந்தால், “அடுத்தவர் பொருள் நமக்கு எதுக்கு? வள்ளி கிட்ட கொண்டு போய்த் திரும்ப குடுத்திடுங்கன்னு”, சொல்லுவா, அதனால பொற்காசு மூட்டையை இப்போதைக்கு கிணற்றின் உள்ளே போட்டு, பத்திரப்படுத்துவோம்.”, என்று நினைத்த கார்க்கன், அவனது மனைவியும் மகனும் வீட்டிற்கு வரும் முன்னர், அவன் வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் இல்லாத வற்றிய கிணற்றின் உள்ளே இறங்கி, அங்கிருந்த பொந்து ஒன்றில் பொற்காசு முடிச்சைப் பத்திரப்படுத்தினான்.

கடைவீதிக்குச் சென்று வீட்டிற்கு வந்த வேலன், முதல் வேலையாக பானைக்குள் பொற்காசு மூட்டை பத்திரமாக இருக்கிறதா என்று ஓடிச் சென்று பார்த்தான். அவன் பயந்தது போலவே பானையினுள்ளே வெறும் தண்ணீர் மட்டும் இருப்பதைக் கண்டவனுக்குப் பதட்டம் தோன்றியது.

“வள்ளி, இந்தப் பானைக்குள் பொற்காசு மூட்டை வைத்திருந்தேனே. இப்போது அதைக் காணவில்லையே. நீ பார்த்தாயா?”, என்று கேட்டான்.

“பானைக்குள் பொற்காசு மூட்டையை வைத்திருந்தீர்களா? ஐயோ? அது தெரியாமல் நான் பானையை ஆற்றிற்கு எடுத்துச் சென்றேனே!”, என்று கவலைப்பட்ட வள்ளி, தனக்கு காலில் முள் தைத்ததையும், அதனால் அவ்வழியே வந்த கார்க்கனிடம் உதவி கேட்ட விஷயத்தையும் வேலனிடம் கூறினாள்.

விஷயம் முழுவதையும் கேட்டறிந்த வேலன், “அப்போ கார்க்கன் தான் நம் பொற்காசு மூட்டையை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அவனிடம் சென்று நான் கேட்டு வருகிறேன்”, எனக் கூறிவிட்டு, கார்க்கனின் வீட்டிற்கு விரைந்து சென்றான் வேலன்.

கார்க்கன் கிணற்றுக்குள் மூட்டையைப் பதுக்கிவிட்டு, வீட்டினுள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். “இன்னும் கொஞ்ச நாட்கள் இந்த மூட்டையில் இருக்கற காசுகளை வெளியே எடுக்க கூடாது. மெதுவா, யாருக்கும் என் மேல சந்தேகமில்லைன்னு ஊர்ஜிதம் செய்துட்டு பொற்காசுகளை இஷ்டம் போல செலவு செய்யலாம்”, என மனக்கணக்கு போட்ட படிக்குப் படுத்திருந்தான்.

அவன் வீட்டிற்கு ஓடி வந்த வேலன், “கார்க்கா, வள்ளிக்கு நீ உதவி செய்ததற்கு மிகவும் நன்றி. ஆனால், வள்ளியின் பானைக்குள் ஒரு மூட்டை இருந்தது. அதை நீ பார்த்தாயா? நீ எடுத்திருந்தால் என்னிடம் கொடுத்து விடு கார்க்கா.”, என்று அமைதியாகவே வினவினான்.

வேலன் ஓடி வந்த  பொழுதே கார்க்கனுக்கு அவன் காசு மூட்டையைப் பற்றித் தான் கேட்கப் போகிறான் என்று தெரிந்து போயிற்று. அதனால் தைரியமாக பொய் கூறத் துணிந்திருந்தான். “என்னப்பா நீ? என் மீது பழி போடுகிறாய்? வலியால் துடித்துக் கொண்டிருந்த உன் மனைவிக்கு உதவி செய்யவே நான் தண்ணீர் எடுத்துக் கொடுத்தேன். பானைக்குள் பொற்காசு மூட்டை எதுவும் இல்லையே வேலா!”, என்று கூறினான்.

“பொற்காசு மூட்டை என்று நான் சொல்லாமலேயே உனக்குத் தெரிந்திருக்கிறது. ஆக நீதான் அந்த மூட்டையை எடுத்திருக்க வேண்டும். என் காசுகளைக் கொடுத்து விடு கார்க்கா. நான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாரித்தவை. கொடுத்துவிடு”, என்று வேலன் கார்க்கனிடம் தர்க்கம் புரிந்தான்.

எத்தனை கேட்ட போதிலும் கார்க்கன் தன்னிடம் எந்த மூட்டையும் இல்லை என திட்டவட்டமாகச் சொல்லிவிட்டிருந்தான். வேலன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், சோகமாக கார்க்கனின் வீட்டின் அருகே இருந்த கிணற்று மேட்டில் அயர்வுடன் அமர்ந்தான்.

“இந்த வருடம் முழுவதும் பிழைப்பு நடத்த அந்த காசுகளைத் தானே நம்பியிருந்தேன். கார்க்கன் இப்படி ஏமாற்றுகிறானே! இப்போது என்ன செய்ய?”, என்று கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்த வேலனின், தோளில் கிடந்த துண்டு காற்றிலடித்துச் சென்று கிணற்றினுள் விழுந்திருந்து.

“சே!”, என்று சலிப்புடன் எண்ணிய வேலன், தண்ணீர் இல்லாத கிணற்றில் தன் துண்டை எடுப்பதற்காக மெதுவாகப் படிகளில் இறங்கினான்.

அந்த கிணற்றின் உள்ளே ஒரு பொந்தில் இவனது பணமூட்டை இருந்தது. துண்டை எடுக்கச் சென்ற வேலனுக்கு அவனது பணமூட்டையும் கிடைத்து விட்டது. ஆனந்தத்தில், “அடடா, என் பொற்காசு மூட்டை அல்லவா இது! கார்க்கன் இங்கே மறைத்து வைத்திருக்கிறானா? நல்ல வேளை என் கண்களில் தென்பட்டது. கடவுளே! உனக்கு என் நன்றிகள்”, என்று சத்தமாக கூக்குரலிட்டான்.

வேலனின் குரல் வீட்டினுள் இருந்த கார்க்கனுக்கும் கேட்டது. “என்ன இது சத்தம்? யார் இப்படி கத்துவது?”, என்று பார்க்கவென வந்த கார்க்கன், வேகமாகக் கிணற்றினுள் எட்டிப் பார்க்க, கிணற்றின் ஓரத்தில் இருந்த கல்லில் கால் இடறி, கிணற்றினுள் குப்புற வீழ்ந்திருந்தான்.

“ஐயோ! அம்மா! என் முதுகு”, என்று முணங்கலுடன் எழுந்து நிற்க முடியாமல் தடுமாறிய கார்க்கனுக்கு, வேலன் உதவி செய்தான். கார்க்கனை மெல்ல கிணற்றின் படிகள் வழியே கைத்தாங்கலாகப் பிடித்தபடிக்கு கூட்டி வந்தான்.வேலனின் கருணை உள்ளத்தைக் கண்ட கார்க்கன் வெட்கித் தலைகுனிந்தான்.

“என்னை மன்னித்துவிடு வேலா. பொற்காசுகளுக்கு ஆசைப்பட்டு உன் மூட்டையை வள்ளியின் பானையில் இருந்து நான் தான் திருடினேன். என் தவறுக்குத் தண்டனையும் கிடைத்துவிட்டது. உனக்கு நான் துன்பம் தருவித்த போதும், எனக்கு நீ உதவி செய்துள்ளாய். என்னை மன்னித்துவிடு”, என மனதார வேலனிடம் மன்னிப்பு வேண்டினான் கார்க்கன்.

வேலனும் கார்க்கனின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டான். “எனக்கு என் பொற்காசுகள் கிடைத்துவிடும் என்று நம்பிக்கை இருந்தது கார்க்கா! என் தந்தை அடிக்கடி என்னிடம் ஒரு பழமொழி கூறுவார். கஷ்டப்பட்டு உழைத்த செல்வமானது எப்படியும் உரியவரிடத்தில் சேர்ந்துவிடுமாம். உழைக்காமல் சம்பாதிக்கும் எதுவும் நமக்குத் தேவையான நேரத்தில் பயன்படாமல் போகும்”, என்றும் சொல்வார். அது இன்று உண்மையாகி விட்டது.”, என்று கூறிய வேலன், மகிழ்ச்சியுடன் தன் பொற்காசு மூட்டையை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றான்.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments